Published : 18 Feb 2019 01:46 PM
Last Updated : 18 Feb 2019 01:46 PM

அதிகார வரம்பை மீறிய தீர்ப்பாயம், நிலத்தடி நீரை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு உத்தரவுப்படி மே 28-ம் தேதி ஆலை மூடி சீல்வைக்கப்பட்டது.

அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கு விசாரணைகள் பல்வேறு கட்டங்களாக நடந்த நிலையில், இன்று வந்துள்ள தீர்ப்பு தூத்துக்குடி மக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

* ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டுக்கு ஆதரவளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நீதிவழங்கும் அதிகார வரம்பில் தவறிவிட்டது. இதனால் ஆலையைத் திறக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

* இடைக்கால நிவாரணம் தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம். அதுவரையில் ஆலை மூடப்பட்டிருக்கும்.

* தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆவணங்களையும் தகவல்களையும் ஆதாரங்களையும் கவனிக்கத் தீர்ப்பாயம் தவறிவிட்டது.

* ஸ்டெர்லைட்  ஆலை தூத்துக்குடி மாவட்ட நிலத்தடி நீரை மீள முடியாத அளவுக்கு மாசுபடுத்திவிட்டதாகத் தமிழக அரசு குற்றம் சாட்டியது.

* டிசம்பர் 15 அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், அபாயகரமான பொருட்களைக் கையாளும் ஸ்டெர்லைட் ஆலைக்கான அங்கீகாரத்தையும் அனுமதியையும் வழங்குமாறு  தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

* ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு உத்தரவிட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் மேல்முறையீடு செய்யாமல் வேதாந்தா எப்படி நேரடியாக பசுமைத் தீர்ப்பாயத்தை அணுக முடிந்தது? மனுதாரர்களுக்கு ஆதரவான தீர்ப்பு எந்த நீதிமன்றத்தில் கிடைக்குமோ அங்கு சென்று வேதாந்தா வழக்குத் தொடுத்துள்ளதாக (forum-shopping) தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்தது.

* அரசின் உத்தரவை நீக்கும் அதிகாரம், அரசியலமைப்பின்படி உருவான நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு. தீர்ப்பாயங்களுக்கு இல்லை.

* தீர்ப்பாயம் சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தங்களின் அறிக்கையில் தமிழக அரசின் வாதங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. தீர்ப்பாயம் அந்த அறிக்கையையே அடிப்படையாகக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலை மீதான தடையை நீக்கியது.

* தண்ணீர் மற்றும் காற்று மாசு தொடர்பான அறிவியல் ஆவணங்களும் பகுப்பாய்வு அறிக்கைகளும் கண்டுகொள்ளப்படவில்லை. வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் மூலம் தூத்துக்குடியில் உருவாக்கிய சூழலியல் மாசுபாட்டை, தீர்ப்பாயம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளாதது துரதிர்ஷடவசமானது.

* மாசுபாடு விதிகளை அறவே கடைப்பிடிக்காத வேதாந்தா, 1996-ல் இருந்து சூழலை முழுமையாக மாசுபடுத்தியுள்ளதாகவும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 20 முதல் 40 மடங்கு அதிகமாக நிலத்தரி நீரில் டிடிஎஸ் அளவு உள்ளதாகவும் தமிழக அரசு ஆவணங்களைச் சமர்ப்பித்தது.

*முழுமையான விசாரணைக்குப் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.  இடைக்கால நிவாரணம் தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனமும் தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x