Published : 19 Feb 2019 11:51 AM
Last Updated : 19 Feb 2019 11:51 AM

அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து: திட்டமிட்டபடி வருகிறார் பியூஷ் கோயல்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை சென்னை வந்த மத்திய ரயில்வே துறை அமைச்சரும் பாஜகவின் தமிழகப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணி வரை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறி வந்தனர். இதே கருத்தை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் கூறினார்.

இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை வர இருப்பதாக தமிழக பாஜக தரப்பில் கூறப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் முடிவு செய்யப்பட்டு விட்டதாவும், அதனை அறிவிப்பதற்காகவே அமித் ஷா சென்னை வரவிருப்பதாக கூறப்பட்டது. அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே குறிப்பிட்டபடி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மதியம் 12.15 மணிக்கு சென்னை வருகிறார். அவர் கூட்டணி குறித்து இறுதி முடிவை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாமக இறுதி செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x