Published : 16 Feb 2019 12:54 PM
Last Updated : 16 Feb 2019 12:54 PM

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இத்தாக்குதலில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி. சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரத் தாக்குதலில், தனது இன்னுயிரைத் தியாகம் செய்த, மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் நேற்று உத்தரவிட்டேன்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஜி. சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவசந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும்,சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

மறைந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.                                                             

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x