Published : 04 Feb 2019 10:01 AM
Last Updated : 04 Feb 2019 10:01 AM

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அதிகரிக்கும் கஞ்சா, மயக்க மருந்து, போதை மாத்திரை போன்ற போதை பொருள் விற்பனையால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாநகரில் சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா, அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்படும் மயக்க மருந்து, தூக்கம் வராதது, மனச்சோர்வு போன்றவை நீங்க பயன்படுத்தப்படும் பட்டியலில் வரையறுக்கப்பட்ட மாத்திரைகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து போதை பொருள் விற்பனையைத் தடுக்க மாநகர போலீஸார், போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து மாநகரில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாநகர போலீஸார் மற்றும் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கணக்கீட்டின்படி, மாநகரில் கடந்த ஆண்டு கஞ்சா விற்றதாக 402 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 1,297 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநகரில் நடப்பாண்டு இதுவரை கஞ்சா விற்றதாக 35 பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடம் இருந்து 81 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மயக்க மருந்து திருடியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 6 பேரும், நடப்பாண்டு 2 பேரும் மாநகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர, அனுமதியில்லாமல் பட்டியலில் வரையறுக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை போதை பயன்பாட்டுக்காக விற்ற 2 மருந்து கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு, இவர்களிடம் இருந்து 14, 800 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் என்.மணிவர்மன் கூறியதாவது: கஞ்சா வழக்கு தொடர்பாக கைதான வியாபாரிகளிடம் விசாரித்த போது, அவர்கள் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்தே விற்றது தெரிந்தது. போதை பொருள் விற்பனையை தடுக்க, கல்லூரிகள் அருகே தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் செயல்பாடுகளை அவர்களது பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களது வழக்கமான நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக விசாரிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பணம் கேட்டால், அதற்கான காரணத்தை அறிந்து, சரியான, அவசியமான பயன்பாட்டுக்கு தேவை என உறுதி செய்த பின்னரே கொடுக்க வேண்டும். போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பலிடம் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தி விட்டுவிடுவோம் என நினைத்து இதை பயன்படுத்தினால் தொடர்ந்து பயன்படுத்தும் எண்ணம் ஏற்பட்டு விடும். போதை பொருட்களை பயன்படுத்துவதால் படிப்பு, வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போதல், சமூகத்தில் அவப்பெயர், எதிர்காலம் பாழாகுதல் போன்ற இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் கூறும் போது,‘‘ கஞ்சா, பிற வகை போதை பொருள் விற்பனையை தடுக்க மாநகரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போதை பொருள் விற்பவர்கள் கண்டறிந்து கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், பட்டியலில் வரையறுக்கப்பட்ட முக்கிய வகை மாத்திரைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்கக்கூடாது என மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஞ்சா,பிற வகை போதை பொருள் விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் விவரம் தெரிந்தால் பொதுமக்களும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x