Last Updated : 07 Feb, 2019 10:31 AM

 

Published : 07 Feb 2019 10:31 AM
Last Updated : 07 Feb 2019 10:31 AM

நீர்நிலைகளை மேம்படுத்தும் இளைஞர்கள்!- `தென்றல்’ வீச `புன்னகை’க்கும் ஏரி!

ஊர்ப் பெயர்களைத் தாங்கி நிற்கும் ஏரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டே பழக்கமான நமக்கு,  `தென்றல் ஏரி, புன்னகை ஏரி` என சுத்தமான தமிழ்ப் பெயர்களைக் கேள்விப்பட்டதும் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஏரிகள் எங்குள்ளன என  விசாரித்தபோது, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரமான பேளுக்குறிச்சியில் இரு ஏரிகளும் உள்ளது தெரிந்தது. உடனே அங்கு சென்றோம். நாமக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேளுக்குறிச்சிக்கு சென்றபோது, சிறிய பெயர்ப் பலகையில் `தென்றல் ஏரி செல்லும் வழி` என இருந்தது.  வாகனத்தை நிறுத்திவிட்டு, மலையடிவாரத்தில் உள்ள ஏரிக்குச் சென்றபோது, ஏரியில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ஆனாலும்,  ஏரியின் வாய்க்காலில் முறிந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் இருவர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

"இந்த ஏரிக்குத்தான் தென்றல் ஏரி என்று பெயரா?" என்று கேட்டோம். "ஆம்" என்று பதில் கூறியவரிடம், "நீங்கள் யார் என்றோம்?". "என் பெயர் மகாலிங்கம்(34). பேளுக்குறிச்சி அருகேயுள்ள தாண்டாகவுண்டனுாரைச் சேர்ந்தவன். பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்புதான் பிரதான தொழில். வேளாண் பாசனத்துக்கு ஏரி, கிணறுகள்தான் ஆதாரம்.

வறட்சியால் இங்குள்ள ஏரி, குளம், கிணறுகள் வறண்டுவிட்டன. வறட்சியை எப்படி சமாளிப்பது என யோசித்தோம். அப்போது, எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, ஏரி மற்றும் அதன் வாய்க்கால்களை சுத்தப்

படுத்தி, ஆழப்படுத்த முடிவு செய்தோம். எங்களது நண்பரான,  மென்பொருள் பொறியாளர் சரவணன் அனைவரையும் ஒருங்கிணைத்து, திட்டத்தை  செயல்வடிவத்துக்கு கொண்டுவந்தார். `ஏரிகளை உயிர்த்தெழுப்புவோம்` என்ற அமைப்பையும்  அவர் நடத்தி வருகிறார்.

தென்றலாய் மாறிய `தோணி`

2017 ஆகஸ்ட் மாதம் நீர்வள வல்லுநர்களின் ஆலோசனையின்படி, மாவட்ட நிர்வாகம், வனத் துறை அனுமதியுடன் முதலில் இந்த ஏரியில் (தென்றல் ஏரி) பணியைத் தொடங்கினோம். ஊஞ்சக்கரடு அடிவாரத்தில் உள்ள இந்த ஏரிக்கு,  `தோணி ஏரி` என்று பெயர். தோணி என்றால் நீர்த்தொட்டி என்றும் பொருளுண்டு. இந்த ஏரிக்கு தண்ணீர் வர இயற்கையாக வாய்க்கால் உள்ளது. எனினும், ஏரிக்கு வரும் தண்ணீர் தேங்காமல், வடிந்து வெளியேறிவிடும். இதனால், ஏரிக்கு மறுபுறம் 1000 மீட்டர் நீளத்துக்கு புதிதாக வாயக்கால் வெட்டினோம். வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க,  பனை விதை மற்றும் சில புற்களை நட்டோம். கிராம மக்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றினர். இரவு-பகலாக வேலை செய்ததில்,  மூன்று நாட்களில் வாய்க்கால் தயாரானது. அப்போது மழை  பெய்ததால், ஏரியில் 6 அடி வரை தண்ணீர் நின்றது.

ஏரிக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைக்க முடிவு செய்து, `தென்றல் ஏரி` எனப் பெயரிட்டோம். ஏரி நிரம்பியதால், சுற்றுவட்டாரக் கிணறுகளில்  நீர்மட்டம் உயர்ந்தது.

அதுதான், தற்போது வரை தண்ணீர்த் தேவைக்கு கொடுக்கிறது. தற்போது, ஏரியில் தண்ணீர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அண்மையில் பெய்த மழையின்போது,  ஏரி நிரம்பியது. மழை பெய்தால் ஏரியில் நிச்சயம் தண்ணீ்ர் இருக்கும். தற்போது, ஏரி வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

பேளுக்குறிச்சி `ஏரிகளை உயிர்த்தெழுப்புவோம்` அமைப்பு நிறுவனர் டி.சரவணன் கூறும்போது, " நான் பொறியியல் பட்டம் முடித்து, பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.  சிறு வயதிலிருந்தே சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகம்.

இதனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், எங்கள்  கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து `பவிசியா` (எதிர்காலம்) என்ற அமைப்பைத் தொடங்கினோம். இதன்மூலம், அரசுப் பள்ளிகளுக்கு கணினி வாங்கித் தருவது, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுத்தருதல் போன்ற பணிகளைச் செய்துவந்தோம். இதற்காக எங்கள் அமைப்பினரிடமே நிதி திரட்டிக் கொண்டோம்.

இந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடும் வறட்சியால்,  கிராம மக்கள் குடிநீருக்கே சிரமப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த விஷயம்  எங்களை வெகுவாகப் பாதிக்கச் செய்தது. இதற்கு என்ன தீர்வு என ஆலோசித்தபோது தான், கிராமத்தில் உள்ள ஏரியை ஆழப்படுத்துவதுடன், ஏரிக்குத்  தண்ணீர் வரும் பாதையையும் சீரமைத்தால்,  மழைக்காலத்தில் ஏரியில் சேகரமாகும் நீர், வறட்சியின்போது பயன்படும் என்ற எண்ணம் உருவானது.

இதையடுத்து, கிராமத்தில் உள்ள தோணி ஏரிக்கு தண்ணீர் வருவதற்காக ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு புதிதாக வாய்க்கால் வெட்டினோம். புதுச்சேரியைச் சேர்ந்த ஐஐடி பொறியாளர் அருள்சேகர், ஏரியை ஆழப்படுத்துவது,  கரையைப் பலப்படுத்துவது தொடர்பாக 

ஆலோசனை வழங்கினார். இதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  சிறிய ஏரி என்பதால்,  பணியும் விரைந்து முடிக்கப்பட்டது. ஒரு அடையாளத்துக்காக ஏரிக்கு `தென்றல்` எனப் பெயரிட்டோம். இந்தப் பணிக்கு ரூ.30 ஆயிரம் செலவானது. கிராம மக்கள், விவசாயிகள் என அனைவரின் பங்களிப்பும் இதில் உள்ளது. இதேபோல, மலைவேப்பன்குட்டை கிராமம் அருகேயுள்ள ஏரியை ஆழப்படுத்தினோம். இந்த ஏரிக்கு `புன்னகை ஏரி` எனப் பெயரிட்டோம்.

பேளுக்குறிச்சி அருகே, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள சின்னக்கழிச்சுப்பாறை பகுதியில், எங்களது ஆலோசனைப்படி,  அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து,  தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை வாங்கி, ரூ. 6 லட்சம் மதிப்பில் புதிதாக ஏரி அமைத்துள்ளனர். அப்பகுதி விவசாயிகளே இதற்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், ஏரிகளை உயர்த்தெழுப்புவோம் என்ற  இணையதளம் உருவாக்கி, ஏரியை ஆழப்படுத்த விரும்புவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்களை அதில் வெளியிட்டுள்ளோம். இதைப் படித்து, தருமபுரி மற்றும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள், தங்கள் பகுதியில் உள்ள ஏரியை ஆழப்படுத்துவது தொடர்பாக எங்களை அணுகினர்" என்றார் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x