Published : 01 Feb 2019 09:46 PM
Last Updated : 01 Feb 2019 09:46 PM

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நிலம் போலி ஆவணம் மூலம் 83 லட்சத்துக்கு விற்பனை: மோசடி நபர்கள் 2 பேர் கைது  

பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.83 லட்சத்திற்கு விற்பனை செய்து மோசடி செய்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடாசல நாயக்கர் தெரு என்ற முகவரியில் வசிப்பவர் ஹரீஷ் (36). இவரது மனைவி வைதேகி(32). வைதேகி நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக திருவல்லிக்கேணியில் தோதான ஒரு இடத்தைத் தேடி வந்தார்.

அவர் இடம் வாங்குவதற்காக நிலத் தரகர்களை அணுகியுள்ளார். அப்போது திருவேற்காடு, கார்த்திகேயன் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் (எ) தியாகராஜன் (47) என்பவர் தனக்கும் தனது தாயார் பிரேமாவதி என்பவருக்கும் சென்னை திருவல்லிக்கேணி முத்துகலத்தி தெருவில் 1041 சதுரடி கொண்ட இடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராஜேந்திரனுடன் சூளையைச் சேர்ந்த பாலாஜி (41) என்பவரும் நிலத்தை விற்றுள்ளார். இடத்தைப் பார்த்த வைதேகிக்கு பிடித்துப் போய்விட ரூ.83 லட்சத்துக்கு பேசி முடித்துள்ளனர்.

வைதேகி தனது சேமிப்புப் பணம் மற்றும் வங்கியில் கடன் வாங்கி ரூ.83 லட்சம் கொடுத்து இடத்தை வாங்கி கிரையம் பெற்று, அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முயற்சி செய்யும் போது தான் வாங்கிய  இடம் பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனக்கு இடத்தை விற்பனை செய்த ராஜேந்திரன் மற்றும் பாலாஜியைத் தேடியபோது அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது. பார்த்தசாரதி கோயில் இடத்தை போலி ஆவணம் மூலம் தன்னிடம் ஏமாற்றி விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் வைதேகி புகார் கொடுத்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தலைமறைவாக இருந்த ராஜேந்திரன் மற்றும் பாலாஜியைத் தேடி வந்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

           

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x