Published : 05 Feb 2019 11:04 AM
Last Updated : 05 Feb 2019 11:04 AM

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்ற எதிர்ப்பு: ‘சாட்டை திரைப்பட பாணியில் நெகிழ்ச்சி சம்பவம்

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய மாணவர்கள், பெற்றோர் நேற்று கண்ணீர் மல்க எதிர்ப்பு தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாநகராட்சி தென்னம்பாளையம் காலனியில் உள்ளது வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 320 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; 11 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் கணித ஆசிரியர் கோ.சுரேஷும் ஒருவர். அவிநாசி அருகே தெக்கலூரைச் சேர்ந்தவர். 2004-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

அதன்பின், பதவி உயர்வு பெற்று, 2009-ம் ஆண்டு முதல் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார். 6,7 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கணிதம் பயிற்றுவித்தார்.

தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பள்ளிக் குழந்தைகளின் பிரியத்துக்குரிய ஆசிரியராக மாறினார்.

இந்நிலையில், சமீபத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் பணி இடமாற்றம் செய்யப்பட்ட 17 ஆசிரியர்களில் சுரேஷும் ஒருவர். இதன் தொடர்ச்சியாக விடுப்புக் கடிதம் அளிப்பதற்காக நேற்று பள்ளிக்கு வந்த அவரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு, பள்ளியை விட்டு செல்லக்கூடாது என கண்ணீர் மல்க மன்றாடினர். இந்த விஷயம், அக்கம் பக்கத்தில் இருந்த பெற்றோருக்கும் தெரியவே, அவர்களும் பள்ளி முன்பு திரண்டனர். தெற்கு போலீஸாரும் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் பெற்றோர் கூறும்போது, ‘சுரேஷ் ஆசிரியர் வருகைக்குப் பிறகு, பள்ளி மற்றும் மாணவர்களின் சூழலே மாறியது. குழந்தைகளின் தவறுகளை மென்மையாக சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர். பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல், மாலை 6 வரை பள்ளியில் இருந்து பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புவார்.

குழந்தைகள் ஒழுக்கத்துடன் படித்து வெளியேற, முக்கியப் பங்காற்றியவர். எனவே, அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.

மாணவர்கள் தெரிவித்த கருத்துகள்:

ஜெகதீஷ்: பாலித்தீனுக்கு தற்போதுதான் அரசு தடை விதித்தது. ஆனால், எங்கள் ஆசிரியர் 4 ஆண்டுகளுக்கு முன்பே, பள்ளியில் பாலித்தீனை பயன்படுத்த தடை விதித்தார்.

திவ்யா: எங்கள் பிறந்தநாளுக்கு பாலித்தீன் கவரில் சுற்றப்பட்ட சாக்லேட் இனிப்பு வழங்குவதை தவிர்த்து, கற்கண்டு வழங்க பழக்கப்படுத்தினார். எங்கள் வீடுகளிலும் பாலித்தீன் பெருமளவு பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு அவர்தான் காரணம்.

மகாலட்சுமி: மதிய உணவு கொண்டுவரவில்லை என்றால், அவரே செலவழித்து உணவு வாங்கித் தருவார். யாருக்கேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டால், தேவையான முதலுதவிகளை செய்து தருவார்.

ஜீவா: கணிதம் பிடிக்காத மாணவருக்கும், கதைபோல சொல்லி பழக்கப்படுத்துவார். இதனால், இன்றைக்கு எங்கள் பள்ளியில் கணிதத்தை அனைவரும் விரும்பி படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் விடுப்பு எடுத்தாலே, மனதளவில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். தற்போது வேறு பள்ளிக்கு அவரை மாற்றுவதை ஏற்க முடியவிலை. எங்கள் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

திருப்பூர் தெற்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜி.ராமச்சந்திரன் கூறும்போது, ‘தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலரையும் இடமாற்றம் செய்துள்ளனர். அதன் ஒருபகுதியாக, திருப்பூர் கணித ஆசிரியர் சுரேஷூம் மாற்றப்பட்டுள்ளார்.

குழந்தைகள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பை முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவித்துள்ளோம்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x