Published : 14 Feb 2019 03:01 PM
Last Updated : 14 Feb 2019 03:01 PM

கோவைக்கு குடிநீர் வழங்க பிரான்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிமம்: வேல்முருகன் கண்டனம்

கோயம்புத்தூருக்கு குடிநீர் வழங்கும் உரிமம் பிரான்ஸ் நாட்டு சுயஸ் என்கிற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சிறுவாணி தண்ணீர் பருகிவந்த கோயம்புத்தூர் மக்கள் இனி சுயஸ் (Suez) தண்ணீரைத் தான் பருக வேண்டும். அதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறது தமிழக அரசு. அதாவது கோயம்புத்தூருக்கு குடிநீர் வழங்கும் உரிமம் பிரான்ஸ் நாட்டு சுயஸ் என்கிற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2017 பிப்ரவரியில் ரூ.3,150 கோடிக்கு இந்த உரிமத்தை வழங்கியிருக்கிறது அரசு.

ஏற்கெனவே டெல்லி மாளவியா நகருக்கு குடிநீர் வழங்கும் உரிமம் பெற்றுள்ளது இந்த சுயஸ் நிறுவனம்.

இந்த சுயஸ் நிறுவனம் முன்பு தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொச்சபம்ப நகருக்கு குடிநீர் வழங்கும் உரிமம் பெற்றிருந்தது. கார்டு மூலம் தண்ணீர் பெறும் முறை. கார்டில் பணம் இல்லை என்றால் தண்ணீர் கிடையாது. இதனால் மக்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தத் தொடங்க,ராணுவத்தைக் கொண்டு அதைத் தடுத்தார்கள். அதனால் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுத்தால் அதற்கும் கட்டணம் விதித்தார்கள். மழை நீரை சேமித்துப் பயன்படுத்தவும் கட்டணம் விதித்தார்கள். இதனால் மக்கள் போராட்டம் வெடித்தது. சுயஸ் நிறுவனம் பொலியாவை விட்டு அடித்துத் துரத்தப்பட்டது.

இன்று கோவைக்கு வந்திருக்கும் இந்தக் கேடு நாளை மற்ற நகரங்களுக்கும் தான். என்ன செய்யப்போகிறார்கள் கோவை மக்களும் ஒட்டுமொத்த தமிழக மக்களும்?

உள்ளாட்சித் தேர்தலை எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு ஏன் நடத்தவில்லை என்பது இப்போது புரிந்துவிட்டது. மக்களுக்கு குடிக்கும் நீரைக்கூட மறுக்கும் பயங்கரவாத அரசியலை முன்னெடுத்துக் கொண்டே, 1,000 ரூபாய், 2,000 ரூபாய் அறிவிக்கிறது; ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகளையும் அறிவிக்கிறது பழனிசாமி அரசு.

பாஜகவுக்காக மக்களுக்கெதிரான எதையும் செய்யத் துணிந்துவிட்டது அதிமுக அரசு. இந்தக் கேடுகெட்ட போக்கை அது கைவிட வேண்டும். சுயஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x