Last Updated : 03 Feb, 2019 11:01 AM

 

Published : 03 Feb 2019 11:01 AM
Last Updated : 03 Feb 2019 11:01 AM

குளத்தை மீட்ட விவசாயிகள்!

நீர்நிலைகளைப் பாதுகாப்போம் என்று ஏராளமானோர் உறுதியேற்கின்றனர். அதில் பலர் முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். சிலர் வெற்றி பெறுகின்றனர். இவ்வகையில், பொள்ளாச்சி அருகே ஏறத்தாழ அழியும் நிலைக்குச் சென்றுவிட்ட குளத்தை விவசாயிகளே மீட்டெடுத்து, அதில் தற்போது தண்ணீர் ததும்பக் காட்சியளிப்பதைப் பார்த்து பெருமிதப்படுகின்றனர் தேவம்பாடி வலசு கிராம மக்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே  ஆனைமலை குளப்பத்துகுளம், சமத்தூர் எலவக்கரை குளம்,  கோதவாடி குளம், தேவம்பாடி குளம் என சில குளங்கள் உள்ளன. அதில் சில உயிர்ப்புடன்  பயன்பாட்டில் இருந்தாலும், சில நீரின்றி வறண்டு காட்சியளிக்கின்றன.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ளது தேவம்பாடி வலசு கிராமம். ஊரைச் சுற்றிலும் ஓங்கி வளர்ந்த தென்னந்தோப்பு, கிணறுகளுக்கு நிலத்தடி நீரை வழங்கும் தேவம்பாடி குளம், அக்குளத்தின் கரையில் உள்ள ஆலமரம், அந்த  மரத்துக்கு அடியில் மாரியம்மன் கோயில் என கிராமத்துக்கே உரிய ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது இந்தக் கிராமம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, சந்தேகவுண்டன்பாளையம் ஆறும், ஆச்சிபட்டி ஆறும் கருமாண்டகவுண்டனூர் பகுதியில்  இணைந்து ஆச்சிபட்டி ஆறு என்ற பெயரில் இந்தப் பகுதியில் பாய்ந்தோடியுள்ளது. ஆற்றின் கரையில் தெய்வம்பாடி என்ற ஊர் இருந்துள்ளது.

ஒரு மழைக் காலத்தில், ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியதுடன், காலரா நோய்க்கும்வித்திட்டுச் சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க, தப்பிப் பிழைத்தவர்கள்  மேடான பகுதிக்கு குடி பெயர்ந்தனர். அந்த இடமே தற்போதைய  தேவம்பாடி வலசு என்கின்றனர் ஊர் பெரியவர்கள்.

வெள்ளம் தணிந்ததும்,  கருமாண்டகவுண்டனூரில் அன்றைய பாளையக்காரர்களால் தடுப்பணை கட்டப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து கட்டுப்படுத்தப்பட்டது. வெள்ள நீரை சேமிக்க ஆற்றையொட்டி பல நூறு ஏக்கர் பரப்பில் குளம் வெட்டப்பட்டது. காலப்போக்கில் ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. குளத்தின் பரப்பும் சுருங்கி,  தற்போது 64 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

பாளையக்காரர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்தக் குளம் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக வற்றியது. குளத்துக்கான நீர்வழித்தடங்கள் இருந்த இடமே தெரியாமல் மண்மூடியது.  மழைநீர் வரும் ஓடைகள் புதர்களால் அடைபட்டதால், மழைவெள்ளம் மடை மாற்றப்பட்டு, பள்ளங்களில் உருண்டோடி வீணானது. இவ்வாறு கடந்த 40 ஆண்டுகளாக நீர்வரத்தின்றியும், தூர்வாரப்படாமலும், மரங்கள், செடிகள், முட்புதர்கள், சேறும், சகதி நிறைந்த மண்மேடாக அழிந்து கொண்டிருந்தது இந்தக் குளம்.

இந்த நிலையில், தேவம்பாடி வலசு குளத்துப் பாசன விவசாயிகளின் மூலம் இந்தக் குளத்துக்கு தற்போது  மறுபிறப்பு கிடைத்துள்ளது.

2017 ஏப்ரல் மாதம் தேவம்பாடி குளத்தை புனரமைக்கும் பணியை கையிலெடுத்தனர், தேவம்பாடி குளத்துப் பாசன விவசாயிகள் மற்றும் விநாயகா தென்னை உற்பத்தியாளர்கள் அமைப்பினர்.  குளம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்த சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றிய பின்னர்தான், குளத்தின் பிரம்மாண்டம் தெரிந்தது. அதில் குவிந்திருந்த தண்ணீர் பாக்கெட் கவர்கள்,  மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியதுடன், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 60 நாட்கள் குளத்தை தூர் வரும் பணியில் ஈடுபட்டனர்.

சிதலமடைந்த குளத்தின் கரைகளை,  தூர் வரப்பட்டபோது கிடைத்த  மண்ணைக்கொண்டு பலப்படுத்தினர். இதனால், முன்பிருந்ததைக் காட்டிலும் 3 மடங்கு தண்ணீரைச் சேமிக்கும்  அளவுக்கு குளம் ஆழப்படுத்தப்பட்டது. குளத்துக்கு தண்ணீரைக்  கொண்டுவரும் நீர்வழித்தடங்களும்  தூர் வாரப்பட்டன. உணர்வால் இணைந்த விவசாயிகளின் ஒற்றுமையால், குளம் மொத்தமாக சீரமைக்கப்பட்டது.

மழைநீரை மட்டுமே நீராதாரமாகக் கொண்ட இந்தக் குளத்தில் ஓராண்டில் 19.80 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும்.  இரண்டு மதகுகள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் 539 ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறும். மேலும், குளத்துக்கு கீழ் உள்ள பல குட்டைகளுக்கு வாய்க்கால் அமைத்து உபரிநீரை நிரப்புவதன் மூலம், தேவம்பாடி வலசு, கோவிந்தனூர், செல்லாண்டிக்கவுண்டன் புதூர்,  டி.காளிபாளையம், டி.நல்லிக்கவுண்டன் பாளையம்,  புரவிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில்  நிலத்தடி நீர்மட்டம் உயரும். குளத்தைச்  சுற்றியுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்மட்ட உயர்வால் பாசன வசதி பெற முடியும்.

தென்மேற்குப் பருவமழையின்போது குளம் நிரம்பவில்லை. எனினும், வடகிழக்குப்  பருவமழை, கன மழையாக உருவெடுத்ததால், ஓடைகள், பள்ளங்களில் பாய்ந்தோடி வந்த செம்மண் கலந்த புது வெள்ளம், தேவம்பாடி குளத்தை நிறைத்தது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் தூர் வாரப்பட்ட குளம், 15 ஆண்டுகளுக்குப்  பின்னர் நிறைந்ததால் விவசாயிகளின்  மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் மனம் மகிழ்ந்தனர்.

அய்யன் ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைக்கப்படுமா?

விநாயகா தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனத் தலைவர் பி.கே.பத்மநாபன் கூறும்போது, "சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உதவியுடன், பிஏபி திட்ட வாய்க்கால் மூலம் அணையின் உபரிநீரை குளத்துக்கு கொண்டுவரும் முயற்சியில்  ஈடுபட்டு  வருகிறோம். பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவு பெற்ற பின்னர், நகராட்சியால் தினமும் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரின் அளவு   ஒரு கோடியே 20 லட்சம் லிட்டராக இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், கிருஷ்ணா குளம் வழியாக ஜலத்தூர் அய்யன் ஆற்றைக் அடைந்து, தாளக்கரை பள்ளம் வழியாக கேரளா மாநிலத்தில் கடலில் சென்று கலக்கும், மேலும்,  பொள்ளாச்சி நகரம் மற்றும் 10 கிலோமீட்டர் சுற்றுவட்டாரப் பரப்பில் பெரும் மழை பெய்யும் காலங்களில், அந்த மழை நீரும்  கிருஷ்ணா குளம் வழியாக கேரளாவுக்குச் சென்று, கடலில் கலந்து வீணாகும்.இவ்வாறு கடலில் கலந்து வீணாகும் நீரை,  ஜலந்தூர் அய்யன் ஆற்றின் வழியாக தேவம்பாடி குளத்தில் நிரம்புவதின் மூலம், 6.80 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும். கிருஷ்ணா குளத்தின் உபரிநீரை தேவம்பாடி குளத்துக்கு கொண்டு வருவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பில்  சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க அரசாணையும் பெறப்பட்டுள்ளது. ஜலத்தூர் அய்யன் ஆற்றில் இருந்து தேவம்பாடி குளத்துக்கு வாய்க்கால் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x