Published : 17 Feb 2019 02:12 PM
Last Updated : 17 Feb 2019 02:12 PM

சமகால இலக்கியம் புதுமையை தேடிக்கொண்டே இருக்க வேண்டும்: சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசன் பேச்சு

சமகால இலக்கியம் புதுமையை தேடிக்கொண்ட இருக்க வேண்டும் என்று இந்து தமிழ் நாளேடு நடத்தும் `யாதும் தமிழே 2019’ நிகழ்ச்சியில்  சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசன் பேசினார்.

பாரம்பரியம் மிக்க `தி இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் `இந்து தமிழ் திசை’ நாளிதழ் `தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் செய்திகளை வழங்குவதுடன், மக்களை இணைக்கும் நிகழ்வுகளையும் முன்னெடுக்கிறது.

அந்த வகையில், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கொண்டாடும் `யாதும் தமிழே 2019’ என்ற புதுயுகத் தமிழின் புதுவிதக் கொண்டாட்டம் கோவை அவினாசி சாலையில், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.

காலை 10 மணிக்கு முதல் நிகழ்வாக நிகர் குழுவினரின் ‘பறை’ இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

எஸ்.எஸ்.வி.எம் பள்ளியின் மாணவர்கள் இசைக்குழு சார்பில் சிறப்பு இசை இசைக்கப்பட்டது. அவர்களுக்கு இந்து தமிழ் திசை ஆசிரியர் அசோகன் நினைவுப் பரிசினை வழங்கினார்.

தி இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் இந்து தமிழ் திசை நாளிதழ் குறித்த சிறிய காணொலி வாசகர்களுக்காகத் திரையிடப்பட்டது.

காணொலியில் சமூக அக்கறையுள்ள செயற்பாட்டாளர்கள் திரையுலக, இலக்கிய வட்டார பிரபலங்களுடன் வாசகர்களின் கருத்தும் காணொலியில் இடம்பெற்றது.

தொடர்ந்து யாதும் தமிழே நிகழ்ச்சிக்காகத் தயாரிக்கப்பட்ட பாடல் காட்சி திரையிடப்பட்டது.

கங்கா மருத்துவமனையின் சேர்மன் மருத்துவர் ஜெ.சண்முகநாதன், கல்லூரி தாளாளர் பிரியா சதீஷ், இந்து தமிழ் திசை ஆசிரியர் அசோகன், இந்து வர்த்தக மேலாளர் சங்கர் வி.சுப்ரமணியம் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைக்க தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

முதல்நிகழ்வாக இலக்கியம் இக்கணம் என்கிற நிகழ்வில் சமகால தமிழ் இலக்கியம் குறித்த விவாதம் நடந்தது. இதில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசன், கவிஞர்.க.ஆனந்த், எழுத்தாளர் ஜா.தீபா உள்ளிட்டோர் பங்கேற்க, இந்து தமிழ் திசை நாளிதழின் ஆசிரியர்களில் ஒருவரான ஆசைத்தம்பி நெறியாள்கை செய்தார்.

அவரது பேச்சில், 2000 ஆண்டுகளாகத் தமிழ்த் தாய் பல்வேறு தாக்குதலை, மோதலை, நட்பை, பல உரசல்களைச் சந்தித்தாலும் அவள் ஒவ்வொருவர் மனதிலும் ஊடுருவி இருக்கிறாள். அது பேச்சாகவும், எழுத்தாகவும், பாடல்களாகவும் வெளியாகிறது என்றார்.

சமகால தமிழ் இலக்கியத்தில் உலகப்பார்வை அடிப்படையில் கவிஞர் க. ஆனந்த் பேசுகையில், " எப்போதுமே சமகாலம் பற்றி மட்டுமே பேசுகிறோம். 1967-68-லிருந்து நான் பேசுகிறேன். ஸ்ப்ரிட் ஆப் மாடர்னிட்டி நம்முடனே இருந்து வருகிறது. இலக்கணம் இக்கணம் என்ற தலைப்பு கொடுத்துள்ளார்கள். இக்கணம் இதுவரை உள்ள விஷயங்களின் பின்னணியை மனதில் வைத்து இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது. அது இறந்த கால பார்வையாக இல்லாமல் நிகழ்கால பார்வையாக இருக்க வேண்டும் " என்றார்.

சமகால தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்கு குறித்து ஜா.தீபா பேசுகையில் "தற்போது புதியவர்கள் நிறையபேர் எழுத வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சில வட்டாரத்தில் இருந்து மட்டுமே எழுதுவார்கள். ஆனால் தற்காலத்தில் பலரும் பல விஷயங்களை எழுதுகின்றனர். உதாரணம் சரள் என்கிற நாவல் நாவிதர்கள் வாழ்க்கை முறை குறித்த நாவல் சிறப்பாக உள்ளது.

அதேபோன்று சவுதி குறித்த அங்கு பணிக்குச் செல்பவர்கள் வாழ்க்கை குறித்த நாவல் வந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்திலிருந்து பலர் எழுதுகிறார்கள். பெண் இலக்கியத்தைப் பொருத்தவரை வை.மு.கோதை நாயகி அம்மாள் உள்ளிட்ட பாரம்பரியம் நமக்கு உள்ளது.

அந்த காலத்திலேயே விதவை மறுமணம், குழந்தை திருமண எதிர்ப்பு போன்றவற்றை எழுதியுள்ளார், குமுதினி நாவல், சூடாமணி, குட்டி ரேவதி, தமயந்தி, சல்மா, உமா பார்வதி போன்றவர்கள் நன்றாக எழுதுகிறார்கள். மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் அரசியல் வீச்சுடன் கலந்து எழுதும்போது இங்கு அது குறைவாக உள்ளது. அது மாறவேண்டும் " எனத் தெரிவித்தார்.

சு.வெங்கடேசன் :  தமிழ் மொழி பண்பாடு இவற்றின் தொன்மை, மரபியல் பண்பாடு இவற்றின்மீது வெளிப்படையான தாக்குதல் நடக்கும்போது இவை சார்ந்த வெளிப்படையான தேடல் வேண்டும். பழமை மக்கும் புதியவை புதுமையை கொடுத்துக் கொண்டே இருக்கும். சமகால இலக்கியம் புதுமையை தேடிக்கொண்டே இருக்கவேண்டும்.

செய்தியே மூன்று பத்திக்கு மேல் இருக்கக்கூடாது என்கிற நிலையில் 1500 பக்கத்துக்கு மேல் உள்ள வேல்பாரியை பாராட்டும்போது வாசகர்களிடமிருந்துதான் அங்கீகாரத்தை தெரிந்துகொள்கிறோம்.

கவிஞர் ஆனந்த்: அக்கன்னா ஒரு லக்கேஜ் மாதிரி, அதற்காக மெனக்கிட வேண்டாம். இக்கணம் தான் முக்கியம். தேவையில்லாதவற்றை தூக்கிப் போட்டுவிட்டு தேவை உள்ளவற்றை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

45 ஆண்டுகளாக நாவல்கள், படைப்புகளைப் பார்த்தால் ஒரு அகவயமான பார்வையுடன் கலந்தே சொல்லப்பட்டு வருகிறது.

நெறியாளர்: சமீப காலமாக ஆப்ரிக்க நாடுகளில் கருப்பின பெண்களுக்கு எதிரான அடக்குமுறை இரட்டை முறை அடக்குமுறை இவற்றை அவர்கள் எதிர்த்து வெடித்து வரும்போது அவர்கள் படைப்புகள் நோபல் பரிசு அளவுக்கு வருகிறது.

தமிழில் ஏன் அப்படி இல்லை என்று கேட்டால் ஆண்கள் நீங்கள் எங்களை வெளியே விட்டால்தானே என்கிற கேள்வி வருகிறதே? என்றார்.

தீபா: இரண்டு விதமாக எழுதுகிறார்கள். பெண்கள் குடும்ப நாவல்கள் மட்டுமே எழுதுகிறார்கள். அவர்கள் இலக்கியம் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும்.

கருப்பின பெண்கள் நிலைபோல் இங்கு இல்லை. இங்கு குடும்பம் சார்ந்த அடக்குமுறைதான் அதிகம் இருக்கிறது. அதனால்தான் அதுபோன்ற படைப்புகள் வருகிறது.

பேஸ்புக்கில் ஆண் பெண் அனைவரும் எழுதுகின்றனர். எழுதுவதற்கான சூழல் மனநிலை பெண்களுக்கு அமைவதில்லை. அவைகள் இணைந்து வெளியிடும்போது சிக்கல் ஏற்படுகிறது.

ஆண்களுக்கு டீ மேசைக்கு வருகிறது. பெண்கள் டீயையும் போட்டுவிட்டு எழுதும் சூழல் உள்ளது. குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, சமையலை செய்துகொண்டுதான் பெண்கள் எழுதுகின்றனர். குடும்பச்சூழல் எங்களை எழுத விடுவதில்லை.

சு.வெங்கடேசன்: பெண்களிடமிருந்து வலிமையான எழுத்துகள் வருகிறது. அதை ஆண் சமூகம் எதிர்கொள்வதுதான் பிரச்சினை.

கவிஞர் ஆனந்த்; உளவியல் ரீதியாக ஆண் பெண் உடல் ரீதியாக இரண்டு பிரிவு, ஆணோ பெண்ணோ இருவருக்குள்ளும் இரண்டு வெவ்வேறு உணர்வுகளும் உள்ளது என்று நினைக்கிறேன்.

 ஆண் உள்ளுக்குள் உள்ள தனது பெண்மையை மதிக்க வேண்டும். அப்படி செய்தால் வெளியே பெண்களை மதிப்பார்கள் என நினைக்கிறேன். வாழ்க்கையைப்பற்றிய பார்வை மாறும். உறவுகள் சிறக்கும் என நினைக்கிறேன். பார்வையில் மாற்றம் வரும்போது அது இலக்கியத்திலும் வெளிப்படும்.

தீபா: நான் ஆண் இலக்கியத்தை ஒப்பிடவில்லை. பெண் ஏன் எழுத முடியவில்லை என்பது பற்றித்தான் பேசுகிறேன்.

கவிஞர் ஆனந்த்: நான் ஆண்கள் பெண்களை மதித்தால் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும் என்கிற கருத்தை வைக்கிறேன்.

தீபா: இங்கு எழுதும் பெண்களை குடும்பத்தாரே எழுத அனுமதிப்பதில்லை. குமுதினி அவரது இயற்பெயரில் எழுத முடியாமல் இருந்தது.

நெறியாளர்: இலக்கியம் வாழ்க்கை இதற்கான ஊடாட்டம் சமகால இலக்கியத்தில் எப்படி இருக்கிறது.

சு.வெங்கடேசன்: சமகாலத்தேவையிலிருந்துதான் படைப்புகள் வந்துள்ளது என நினைக்கிறேன். மானுடவியலைத் தேடுகிற வாசல் சமகாலத்தில் உள்ளது.

 நிகழ்காலம் ஒருவகையில் மாயம்தான். வரலாற்றுக்கும் புராணத்துக்கும் இடையில் ஒரு போரே நடந்து வருகிறது. சமகால வாழ்வின் இன்னொரு பரிமாணமாக சம இலக்கியம் உள்ளது.

ஆனந்து: அரசியல் புராணம் அறிவு குறித்த விஷயம்தான் அதை எப்படி கையாள்வது என்பது சிக்கலான ஒன்று. அது அரசியலாக்கப்படுகிறது. இது சரியான நடைமுறை இல்லை என்பது என் கருத்து.

வரலாறு புராண அரசியல் நிகழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்

சு.வெங்கடேசன்: இலக்கியவாதி ஒரு வகையில் வரலாற்றாலனைவிட அதிக பங்களிப்பதாக நினைக்கிறேன். வரலாற்றுக்கு இலக்கியம்போல் பங்களிப்பு செய்கிற மிகப்பெரிய ஊடகம் இல்லை. புராணத்தை மறுவாசிப்பு செய்கிற வேலையை இலக்கியம் செய்து வருகிறது. புராணங்களை புதிய பொலிவோடு கொண்டுவருவது இலக்கியத்தில் நடக்கிறது.

ஆசை: சமகால இலக்கியத்தில் உலக இலக்கியத்தோடு வைத்து எப்படிப் பார்க்கிறீர்கள்

ஆனந்த்: அசைவுதான் கால உணர்வை ஏற்படுத்துகிறது. இதேப்போன்று இங்குள்ள விஷயங்கள் மேலை நாட்டு விஷயத்துடன் இணைந்தே எழுதும் நிலை உள்ளது. மேலை நாட்டு எழுத்துக்கள் அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும், மனிதம் குறித்த பார்வைகள் ஒன்றுதான்.

தீபா: உலகமயமாக்கல் அனைத்தையும் ஒன்றாக்கியதுபோல் இலக்கியத்தையும் ஒன்றாக்கியுள்ளது என நினைக்கிறேன். மனித குல பிரச்சினைகள் அனைத்தும் அனைவருக்கும் ஒரே சிக்கலாகத்தான் உள்ளது. வனம் அழிவது, பெண்கள் குழந்தைகள் பிரச்சினை, சூழல்சார்ந்த பிரச்சினை அனைத்தும் ஒன்றுதான்.

சமகால இலக்கியத்தில் விளிம்பு நிலை இலக்கியம், பெண்கள் இலக்கியம் நிறைகுறை என்ன?

சு.வெங்கடேசன்: பல புதிய விஷயங்கள் பார்க்கும்முறையாக மாறி உள்ளது. பசுமை இலக்கியம் உலகமயமாக்கலுக்கு பின் ஒரே வகையான அனைத்திலும் ஒரே பார்வை உள்ளது. தமிழ் சமூக மானுடவியல் பார்வையிலிருந்து சங்க காலம் பத்தாயிரம் ஆண்டு தொகுப்பு, அது இன்றுவரை உள்ளது. வார்த்தைகள் இன்றும் தொடர்கிறது. இன்று நிற்கவேண்டுமா என்பது மாயையாகத்தான் உள்ளது. இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய இலக்கியம் உலக இலக்கியத்தோடு வளர்வது வரவேற்கப்படக்கூடியதுதான்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு லலிதா ஜுவல்லர்ஸ் நிஜாமுத்தின் ஷரீப் மற்றும் கவின்கேர் நிறுவன நிர்வாகி கார்த்திகேயன் நினைவுப்பரிசுகளை வழங்கினார்கள்.

யாதும் தமிழே நிகழ்வை ஒட்டி இந்து தமிழ் திசை ஆன்லைனில் வாசகர்களுக்கான இலக்கியப்போட்டி நடத்தப்பட்டது. அதில் கேட்கப்பட்ட 3 கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்த வாசகர்களுக்குப் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது.

இத்துடன் முதல் அமர்வு முடிந்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x