Published : 06 Feb 2019 10:13 AM
Last Updated : 06 Feb 2019 10:13 AM

பிரதமரிடம் திருப்பூர் எதிர்பார்ப்பது என்ன?

மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். அண்மையில் முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு திருப்தி அளிக்காததால், காஷ்மீர் முதல் குமரி வரை  சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மோடி. அதன் ஒரு பகுதியாக, பின்னலாடை  நகரமான  திருப்பூரில் வரும் 10-ம் தேதி பிரதமர் மோடி பேசுகிறார். திருப்பூர் பெருமாநல்லூரில்  பிரச்சார மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாய் நடக்கும் சூழலில், `பிரதமரிடம் திருப்பூர் எதிர்பார்ப்பது என்ன?' என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.

தமிழகத்தில் கன்னியாகுமரியும்,  கொங்கு மண்டலமும் பாஜகவுக்கு பெரிதும் கைகொடுக்கும் என பாஜகவினரிடையே அபார நம்பிக்கை நிலவுகிறது. இதையொட்டி, திருப்பூருக்கு பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வருவதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், ஒரு நாட்டின் பிரதமர் பின்னலாடை நகருக்கு வருவது, தங்களது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்கின்றனர் தொழில் துறையினர். அதேசமயம், தொழில் துறைக்கு தேவைகளும், எதிர்பார்ப்புகளும் அதிக அளவில் இருப்பதாகவும்,  பல ஆண்டுகளாக தீர்வுக்குக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் தொழில் துறையினரின் தேவை, எதிர்பார்ப்புகள் குறித்து தொழில் துறையைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

போராடும் தொழில் துறையினர்

திருப்பூர் சிஸ்மா அமைப்பு நிர்வாகி கே.எஸ்.பாபுஜி கூறும்போது, "திருப்பூர் பின்னலாடைக்கு உலக அரங்கிலும், இந்தியாவிலும் அற்புதமான வர்த்தக வாய்ப்பு இருக்கும்போது, மேம்பாட்டுக்கான சூழலை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்காமல், மெத்தனப்போக்குடன் இருக்கிறது. பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின்னர், சிறு குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. லாபம்  குறைவாக கிடைத்தபோதும், தொழிலைக் கைவிட விரும்பாத தொழில் துறையினர், தொடர்ந்து இந்த தொழிலில் போராடி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு பலமுறை தெரிவித்துள்ளோம். மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் மற்றும் ஜவுளித் துறை செயலருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அண்மையில் வெளியான மத்திய அரசின் இடைக்கால  பட்ஜெட்டில், ஜவுளித் துறை தொடர்பாக  எந்த  அறிவிப்பையும் வெளியிடாததால், ஜவுளித் துறை மீது  மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்பது தெரிகிறது.

பின்னலாடை நகருக்கு பிரதமர் வருகை என்பது எங்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஐந்து நிமிடங்களாவது, தொழில் துறை பிரதிநிதிகளை சந்தித்து, அனைத்து தொழில் அமைப்புகளிடம் மனுக்களைப் பெற வேண்டும். இது, மத்திய அரசுக்கும் தொழில் துறைக்குமான கருத்தொற்றுமையை வலுப்படுத்தும். பிரதமர் இந்த சந்திப்புக்கு வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும்.

முத்ரா கடன் திட்டம், 59 நிமிடங்களில் ரூ.1 கோடி கடனுதவி என்ற திட்டங்கள் எல்லாம் வடமாநிலங்களுக்கே பயனளித்துள்ளன.  59 நிமிடங்களில் ரூ. 1 கோடி  திட்டம், திருப்பூர் தொழில் துறையினருக்கு பெரிய அளவுக்குப் பயனுள்ளதாக இருக்காது.

நடைமுறை சிக்கல்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு வரிச் சலுகைகளை நடைமுறைப்படுத்துவதில்,  ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பிரதமர் வருவதற்கு முன்பாக தொழில் துறையினருடன் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தி, மத்திய நிதிக் குழுவைச் சேர்ந்தவர்கள் சந்தித்துப் பேசி, தொழில் துறையினரின் பிரச்சினைகளை பிரதமர் கவனத்துக்கு கொண்டுசெல்ல நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

திருப்பூர் தொழில் துறையினரின் குறைகளைத்  தீர்க்கக்கூடிய அம்சமாக பிரதமரின் வருகை இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  பிற மாநிலங்களுக்கு வழங்கப்படும் தொழில் சலுகைகள் தமிழகத்தில் வழங்கப்படுவதில்லை. இந்தக் குறைகளையும் களையும் வகையில் நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்.

30 கோடி பேர் பாதிப்பு

ஜிஎஸ்டி அமலாக்கம், பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு எந்தெந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத்  தொழில், எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்தியாவில் சிறு, குறு தொழில் துறையை நம்பி 30 கோடி பேர் உள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. வேலைவாய்ப்பை அதிகமாக தரக்கூடிய, வேகமாக வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள்,  தற்போது ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கடும் பாதிப்பை சந்தித்திருப்பது  உண்மை. கோவை வெட்கிரைண்டர், பேரிங், சிவகாசி பட்டாசு, கரூரில் பெட்ஷீட் என தமிழகத்தின் முக்கியத் தொழில்நகரங்களில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஆய்வு எதுவும் செய்யாமல் பொத்தாம்பொதுவாக ’தொழில் வளர்ச்சி’ என்று சொல்வது மத்திய அரசின் அறியாமையே வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு, நிறைய சலுகைகள் மற்றும் அதற்கான அறிவிப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

வரியை குறைக்க வேண்டும்

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் கூறும்போது, "வங்கதேசம், வியட்நாம், கம்போடியா நாடுகளுடன் ஒப்பிடுகையில், பின்னலாடை உற்பத்திச் செலவு இங்கு அதிகம் என்பதால், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதித்துள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைகிறது.  சாய ஆலைகளைப் பொறுத்தவரை, பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பூஜ்யநிலை சுத்திகரிப்பை மேற்கொண்டு  வருகிறோம். ஆனால், பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு  வரி விதிப்பதால்,  பின்னலாடை விலை உயரும் அபாயம் உள்ளது.  இதனால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கும். எனவே, பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான வரிவிதிப்பை 5 சதவீதமாகவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் மாற்ற வேண்டும்.  நாடு முழுவதும் 300 பொதுசுத்திகரிப்பு  நிலையங்கள்தான் உள்ளன. ஆகவே, இது அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தாது. எனவே,  பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு,  தேவையான வரிச் சலுகையை வழங்க வேண்டும்" என்றார்.

நீர்த்துபோன தொழிலாளர் சட்டம்

தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துபோகச் செய்யும் அளவுக்கு சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. காலப்போக்கில் நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாகும். தற்காலிகம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில்தான் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். பெரு முதலாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறதே தவிர, தொழிலாளர் நலன் சார்ந்த எந்த ஒரு அறிவிப்பும் கடந்த 5 ஆண்டில் இல்லை என்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.

ஒரு லட்சம் வீடுகள்?

திருப்பூர் ஏற்றுமதியாளர் குமார் துரைசாமி கூறும்போது, "நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள்  பின்னலாடையை சார்ந்து திருப்பூரில் உள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்காவது கடந்த 5 ஆண்டுகளில் தொழிலாளர் குடியிருப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் அடிப்படை எதிர்பார்ப்பு, சொந்தமாக ஒரு வீடு வாங்குவதுதான். அதை  நிறைவேற்றும்வகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் `அனைவருக்கும் வீடு` என்ற  திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  இந்த திட்டத்தில்  திருப்பூரில்  ஒரு லட்சம் வீடுகளாவது கட்டியிருக்க வேண்டும். இதன்மூலம் தொழிலை மேலும் அதிகரித்திருக்க முடியும். தொழிலாளர்களின் பெரும்பான்மை ஊதியம், மாத  வாடகைக்கும், மருத்துவமனைக்குமே செலவிடப்படுகிறது. தொழிலாளர் குடியிருப்பு கட்டப்பட்டால்,  தவணை முறையில் தொகை செலுத்தி, வீட்டை சொந்தமாக்கி கொள்வார்கள்.

ரயில்கள் இல்லை

பாலக்காட்டிலிருந்து சேலம் வரை,  காலை மற்றும் மாலைவேளைகளில் குறைந்தது 5 விரைவு பயணிகள் ரயிலையாவது இயக்க வேண்டும். இந்த ரயில்கள், பல பகுதிகளில் இருந்து அன்றாடம் திருப்பூர் தொழில்நகருக்கு வந்து, செல்ல ஏதுவாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து செலவுகளும் பெருமளவு குறையும். அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 3 வங்கிகளில் பிசிஏ எனும் ஒரு வரையறையை  உருவாக்கியுள்ளது  மத்திய அரசு.   இதன்மூலம்,  கடன் உதவி வழங்கும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது தொழில் முடக்கத்தை ஏற்படுத்தும்.

பண மதிப்பு நீக்கம்,  ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களைப் பெருமளவு பாதித்துள்ளது.  ஆடைத் துறை அழுத்தம் நிறைந்த துறையாக மாறியுள்ளது” என்றார்.

பின்னலாடை துறையின் தாயகம்

இந்திய பின்னலாடைத் துறையின் தாயகமாக திருப்பூர் உள்ளது. நாட்டின் 55 சதவீத ஆடை உற்பத்தி, திருப்பூரை நம்பியுள்ளது. அதேபோல, அசாம் முதல் குமரி வரையிலான தொழிலாளர்கள், திருப்பூரில் குடும்பமாக தங்கி  பணிபுரிகின்றனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறும்போது, "மத்திய அரசின் வெளிப்படையான நிர்வாகத்தை வரவேற்கிறோம். தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. கடந்த 4 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் 30,000 பேருக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் பணிகள் எளிதாகின்றன.

தொழில் முடக்கம்

2013-ல் பிரதமர்  மோடியை சந்தித்தபோது, பின்னலாடை வர்த்தகத்தை ரூ.25000 கோடியிலிருந்து ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்துமாறு அறிவுறுத்தினார். தற்போது திருப்பூர் வர்த்தகம் ரூ.50000 கோடியை   எட்டியுள்ளது.  2020-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு  ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்து, தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை தடுமாற்றத்தை ஏற்படுத்தின. சிறு,  குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முடங்கின. பொருளாதார சீர்திருத்தம் வரவேற்க வேண்டிய ஒன்று. அதேசமயம், தொழில்துறையின் பாதிப்புகளை களையவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு  உள்ளது. தொழில் துறையினரின் தேவையை, மத்திய அரசு சரிவரப் புரிந்துகொண்டு செயல்பட்டால்,  தொடர்ச்சியான, சீரான வளர்ச்சியை ஜவுளித் துறை எட்டும்.

தேவைகள் என்ன?

திருப்பூரில் பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும். இந்த துறையின் குறை, நிறைகளை இந்த வாரியம் மூலம் மத்திய அரசுக்கு கொண்டுசெல்ல வேண்டும். தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாலமாக பின்னலாடை வாரியம் இருக்க வேண்டும்.  துறை ரீதியாக அலுவலர்களை நியமித்து,  பின்னலாடை வாரியம் மூலம் ஜவுளித் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தொழில் துறையினருக்கு உரிய அங்கீகாரமாகவும் இந்த வாரியம் இருக்கும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையை உள்ளடக்கிய பிரத்தியேக `பின்னலாடை ஆராய்ச்சி மையத்தை` அமைக்க வேண்டும். தட்பவெப்ப நிலை, ஆடை வடிவமைப்பு, சந்தை தேவை ஆகியவை மாறிக்கொண்டே இருப்பதால், பின்னலாடை ஆராய்ச்சி மையத்தை அமைப்பது அவசியமாகும். மேலும், நிலையான பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்த முடியும். திருப்பூர் பின்னலாடைத் துறையின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, போதிய உட்கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துதர வேண்டும். இது பல ஆண்டு கனவாகவே உள்ளது. ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இஎஸ்ஐ மருத்துவமனை

அதேபோல, தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனையை அமைக்க வேண்டும். இதுவும் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இஎஸ்ஐ மருத்துவமனை அமைத்தால், தொழிலாளர்களின் ஒட்டுமொத்த பாராட்டும் அரசுக்குக் கிடைக்கும். இது திருப்பூருக்கான திட்டமாக நாங்கள் கேட்கவில்லை. இந்தியாவின் அனைத்துப்  பகுதிகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் வாழும், தொழில் துறை முக்கியத்துவம்  வாய்ந்த திருப்பூருக்கு, ஒட்டுமொத்த நாட்டுக்கான  நலத் திட்டமாகவே இதைக் கேட்கிறோம்.

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த `டியூட்டி டிராபேக்` வரிச்சலுகையை  7.7 சதவீதத்தில்  இருந்து 1.9 சதவீதமாக குறைத்துள்ளனர். இதை திரும்பப்பெற்று,  மீண்டும் 7.7 சதவீமாக வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 5 சதவீதமாவது வழங்க  வேண்டும்.

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்

உலகமயமாக்கலுக்குப் பின், போட்டியை எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதேபோல, `ஃப்ரீ டிரேடு அக்ரிமென்ட்` எனப்படும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக அழுத்தம் தரப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையே வரியின்றி வர்த்தகம் செய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம். போட்டி நாடுகளான கம்போடியா, வியட்நாம், வங்கதேசத்தில் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதால், தொழில் துறையில் இந்தியாவுக்கு அடுத்து இருந்தவர்கள், தற்போது போட்டியாகவே  மாறிவிட்டனர். சமநிலையான வாய்ப்பு ஏற்படும்பட்சத்தில்,  போட்டியை நாம் எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்" என்றார்.

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாளர் நகரமான திருப்பூரின் தேவைகளை, பிரதமர் மோடியின் வருகையும் நிவர்த்தி செய்யுமென எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் திருப்பூர் தொழில் துறையினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x