Published : 07 Feb 2019 10:23 AM
Last Updated : 07 Feb 2019 10:23 AM

மருந்துகளை எதிர்க்கும் நுண்கிருமிகள்!

க.ஆர்த்தி

மனிதன் உயிர் வாழ நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்புடன், மருந்தையும் சேர்க்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். ஆனால், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும் மருந்துகளும் ஆபத்தை விளைவிக்கும் என்கிறது உலக சுகாதார மையம். பாக்டீரியா, வைரஸ், ப்ரோடோசோவா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் இவை திடீர் மாற்றங்கள் அடைந்து,  நுண்ணுயிர்க்  கொல்லி மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்று வருகின்றன. இதை ஆன்டி மைக்ரோபியல் ரெஸிஸ்டன்ஸ் (Anti microbial resistance) சுருக்கமாக ஏஎம்ஆர் என்றழைப்பர்.

உலக நாடுகளை அச்சுறுத்தும் பெரிய சவாலாக இது வளர்ந்து வருகிறது. 2015-ல்  கிளாஸ் (Global Antimicrobial resistance Surveillance System) என்ற அமைப்பு, உலக சுகாதார மைய உதவியுடன் தொடங்கப்பட்டது. இது, பல நாடுகளில் ஏஎம்ஆர் திறன் பெற்ற நுண்கிருமிகள் பற்றிய  கணக்கெடுப்புகளையும், செயலிழந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் அட்டவணைகளையும்,  அவற்றைக்  கையாள்வதற்கான செயல்திட்ட வடிவங்களையும் வெளியிடுகிறது. 

ஆண்டுதோறும் நவம்பர்  இரண்டாம் வாரத்தை நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எதிர்க்கும் திறன் பற்றிய விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறார்கள்.

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைபடி, 'ஏஎம்ஆர் திறன் பெற்ற நுண்கிருமிகளின் அச்சுறுத்தல், இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.

நமது நாட்டில் நிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 25 சதவீதம் அதிகரித்து உள்ளது' எனத்  தெரிவித்துள்ளது. காலரா, பாலியல், காசநோய்க் கிருமிகளில் ஏஎம்ஆர் திறன் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்காக 6 அம்ச செயல்திட்ட வடிவ அறிக்கையையும் வெளியிட்டுள்ளது இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்.

இது தொடர்பாக மருத்துவத் துறையில் 40 ஆண்டுகால அனுபவம் பெற்ற டாக்டர் து.தண்டபாணியை அணுகினோம்.

"நோய்களை உருவாக்கும் நுண்கிருமிகளை அழிக்க நீண்டகாலமாக அல்லது அளவுக்கு அதிகமாக  பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க்  கொல்லி மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலை,  மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால்   பெறுகின்றன நுண்கிருமிகள். இதனால், நுண்கிருமியை அழித்து, நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் இழந்து விடுகின்றன.

தவறாக கையாளப்படும் மருந்துகள் மனிதர்களால் தவறாகக் கையாளப்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் இந்த நிலை உருவாகிறது. உதாரணமாக, சளி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடல் சோர்வு, ஒவ்வாமை போன்ற உடல் உபாதைகளுக்கு,  மருத்துவரின் ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும் பல  நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், வலி நிவாரண மருந்துகள் மனித உடலில் சேகரமாகின்றன. நாளடைவில் இவை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை எதிர்க்கும் திறனைப் பெற்று,  ஏஎம்ஆர் நுண்கிருமிகளாக உருவாகின்றன.

 அதேபோல, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே மருந்துகளை  நிறுத்துவதாலும், ஏஎம்ஆர் திறன் பெற்ற நுண்கிருமிகள் உருவாகின்றன. இதேபோல, கால்நடை வளர்ப்பு, விவசாயத்தின்போது பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லி  மருந்துகளும், உணவு வழியே மனித உடலில் சேருகின்றன. இவற்றின் மூலம்  ஏஎம்ஆர் நுண்கிருமிகள் உருவாகின்றன. இவை, சுகாதாரமற்ற சூழல், பழக்கங்கள் மூலமாக பரவுகின்றன. 

காசநோயை ஏற்படுத்தும் நுண்கிருமியில்,  இந்நிலை அதிகம் காணப்படுகிறது. இதேபோல, நிமோனியா, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களிடமும் அதிக அளவில் தென்படுகிறது.

இதைத் தவிர்க்க,  உடற்பயிற்சி,  சத்தான உணவு, மருத்துவர் குறிப்பிட்ட நாட்கள் வரை  மருந்துகளை  தவறாமல் உட்கொள்ளுதல், மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ளாதது, நோய்க்கான அறிகுறிகள் தென்படும் தொடக்க காலத்திலேயே மருத்துவரை அணுகுவது ஆகியவை அவசியம். நோய் முற்றும் வரை மருத்துவரை அணுகாமல் இருப்பதும், ஏஎம்ஆர் போன்ற பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

உள்நாட்டில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்  கொள்வது நல்லது. பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்ப்பதும் நல்லது" என்றார்.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாடு - மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்து ஓரிரு நாளில் உடல்நிலை சரியாகிவிட்டாலும், மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள்வரை அந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே மருத்துவர் கொடுத்த மருந்து வீட்டில் மீதம் இருந்தால், நீங்களாகவே உட்கொள்ளக் கூடாது.

உடல்நிலை சரியில்லை என நீங்களோ, குடும்பத்தில் யாருக்கோ மருத்துவர் பரிந்துரைத்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பிறர் உட்கொள்ளக் கூடாது.

கைகளைச் சோப்பு நீரால் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமாகவும், நோய் தாக்கியவர்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பதன் மூலமாகவும், நோய்க் கிருமி தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமாகவும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x