Published : 11 Feb 2019 05:36 PM
Last Updated : 11 Feb 2019 05:36 PM

தமிழ்நாட்டின்‌ மொத்த வருவாயில்‌ நான்கில்‌ ஒருபங்கு வட்டியாகச் செலுத்தப்படுகிறது: திமுக எம்எல்ஏ ஆய்வறிக்கையில் தகவல்

தமிழ்நாட்டின்‌ மொத்த வருவாயில்‌ நான்கில்‌ ஒருபங்கு வட்டியாக செலுத்தப்படுகிறது என, திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் நிதிநிலை குறித்து திமுக எம்எல்ஏவும்,  தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வேலைவாய்ப்புகள்:

தமிழக அரசின்‌ 2019-20 ஆம்‌ ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில்‌ எண்‌.108-ல்‌ இடம்பெற்றுள்ள குறிப்புகளின்படி, 2-வது உலக முதலீட்டாளர்கள்‌ மாநாட்டில்‌ ரூ. 3 லட்சம்‌ கோடி மதிப்புள்ள 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ போடப்பட்டு, அதன்‌ மூலமாக 10.45 லட்சம்‌ நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நபருக்கான வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.30 லட்சம்‌ முதலீடு செய்யப்படுகிறது.

ஆனால்‌, இதே நிதி நிலை அறிக்கையில்‌ எண்‌.111-ல்‌, தமிழ்நாட்டில்‌ மொத்தமுள்ள 19.50 லட்சம்‌ குறு - சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்களில்‌ (11815) ரூ.212 லட்சம்‌ கோடி முதலீடு செய்யப்பட்டு, 1.23 கோடி நபர்களுக்கும்‌ அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்‌. இதன்படி, 1.70 லட்சம்‌ முதலீட்டில்‌ ஒரு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

எனவே, வேலைவாய்ப்பு உருவாக்கம்‌ குறித்த சரியான கொள்கைகளோ, திட்டங்களோ தமிழக அரசிடம்‌ இல்லை என்பது அவர்கள்‌ வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையின்‌ மூலமாகவே வெட்டவெளிச்சமாகிறது.

மின்‌ மிகை மாநிலம்‌ என்பது வீண்‌ பெருமையே தவிர மாநிலத்தின்‌ தொழில்‌ வளர்ச்சிக்கான குறியீடல்ல:

கடந்த 2006-11 திமுக ஆட்சியில்‌ கொண்டு வரப்பட்ட பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களின்‌ மூலமாக, 2011 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம்‌ ஏற்பட்ட போது தமிழ்நாட்டில்‌ 16,572 மெகாவாட்‌ மின் உற்பத்தி செய்யப்பட்டது.

தற்போது, மாநிலத்தின்‌ ஒட்டுமொத்த மின்திறன்‌ 30,191 மெகாவாட்‌ என நிதிநிலை அறிக்கையில்‌ கூறப்பட்டுள்ளது. அதன்படி, 8 ஆண்டுகளில்‌ சராசரியாக 7.8% ஒட்டுமொத்த மின்திறன்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில்‌ ஆண்டுதோறும்‌ 7.8% மின் உற்பத்தி மட்டுமே அதிகரித்துள்ள நிலையில்‌, மின்‌மிகை மாநிலம்‌ என்று குறிப்பிடுவது, தொழில்துறை வளர்ச்சியும்‌, பொருளாதார வளர்ச்சியும்‌ வேலைவாய்ப்புகளும்‌ பெருமளவில்‌ முடங்கிப் போயுள்ளதை எளிதில்‌ புரிந்துகொள்ளலாம்‌.

மாநில வருவாய்‌ வீழ்ச்சி ( ஆண்டுவாரியாக):

கருணாநிதி தலைமையிளான திமுகவின்‌ 2006-11 ஐந்தாண்டு கால ஆட்சியில்‌ தொலைநோக்குப்‌ பார்வையோடு கொண்டு வந்த தொழில்துறை கொள்கைகள்‌, முறையான செயல்திட்டங்கள்‌ காரணமாக மாநிலத்தின்‌ உற்பத்தித் திறனுக்கு நிகரான மொத்த வருவாய்‌ 14.50% உயர்ந்திருந்தது.

இதனையடுத்து, மறைந்த முன்னாள்‌ முதல்வர்‌ ஜெயலலிதாவின்‌ 2011 - 2006 ஜந்தாண்டு கால ஆட்சியில்‌ 10.64% என்றளவுக்கு வருவாய்‌ குறைந்திருந்தது. ஆனால்‌, ஓ.பன்னீர்செல்வம்‌ மற்றும்‌ எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌ அடுத்தடுத்து முதல்வர்களாக பொறுப்பேற்ற பிறகு, 2016-20 ஆட்சிகாலத்தில்‌ மாநில வருவாய்‌ 11.45% என்ற நிலையை எட்டியுள்ளது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில்‌ மத்திய அரசின்‌ பங்கு குறைந்து 3.25% ஆகவும்‌, மாநில அரசின்‌ பங்கு 9.60% ஆகவும்‌ இருந்தது. ஆனால்‌ தற்போதைய எடப்பாடி பழனிசாமி மற்றும்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ ஆகியோரின்‌ 2016-20 ஆட்சிகாலத்தில்‌, மாநில அரசின் பங்கு பெருமளவில் குறைந்து 7.55% ஆகவும்‌,மத்திய அரசின்‌ பங்கு3.29% என்ற நிலையில்0.4% உயர்ந்திருக்கிறது.  காரணம்‌ மாநில அரசின்‌ உற்பத்தித்திறன்‌, மத்திய அரசின்‌ நிதிப்‌ பங்கீட்டை விட மிகவும்‌ வேகமாக குறைந்து வருவதால்‌ இந்த உயர்வு காணப்படுகிறது.  இதனால்‌ மாநிலத்தின்‌ உற்பத்தித்திறன்‌ கடும்‌ வீழ்ச்சியில்‌ உள்ளதை அறியமுடிகிறது.

வருவாயில்‌ பெரும்பங்கு (24.05%) வட்டியாக செலுத்தப்படவுள்ளது:

திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, மாநிலத்தின்‌  வருவாயில்‌ 17.78% வட்டி கட்டப்பட்ட

நிலையை மாற்றி, 2011 ஆம்‌ ஆண்டு, வருவாயில்‌ 16.04% பங்கு மட்டுமே வட்டியாகச் செலுத்தும்‌ அளவுக்கு நிதி மேலாண்மை சிறப்பாக கையாளப்பட்டது.

அதனைத்‌ தொடர்ந்து, ஆட்சி மாற்றம்‌ ஏற்பட்டு, ஜெயலலிதாவின்‌ 2011-2016 ஆட்சிகாலத்தில்‌ மாநில வருவாயில்‌ 20.32% வட்டியாக செலுத்தப்படும்‌ அளவுக்கு நிலைமை மோசமானது. அவருக்குப்‌ பிறகு, ஓ.பன்னீர்செல்வம்‌ மற்றும்‌ எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌ அடுத்தடுத்து முதல்வர்களாக பொறுப்பேற்ற பிறகு, 2016-2020 நிதியாண்டு காலத்தில் மாநில வருவாயில்‌ இருந்து 24.05% வட்டியாக செலுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டின்‌ மொத்த வருவாயில்‌ நான்கில்‌ ஒருபங்கு வட்டியாகச் செலுத்தப்படவுள்ளது.

மத்திய அரசிடம்‌ இருந்து வர வேண்டிய நீண்டகால நிலுவைத்‌ தொகைகள்‌ - வரி வருவாய்‌ - மானியங்கள்‌ கிடைக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல்‌ இருப்பது ஏன்‌?

ஜிஎஸ்டி வரி வருவாயில்‌ மாநிலத்துக்கான பங்கான ரூ. 5,909.16 கோடி, உள்ளாட்சி நிர்வாகப்‌ பணிகளுக்கான மானியத்‌ தொகைகளில்‌ ரூ.4,412.32 கோடி, பள்ளிக்கல்வி மற்றும்‌ உயர்கல்விக்கான மானிய தொகையாக மொத்தம்‌ ரூ.4,187.1 கோடி ரூபாய்‌ உள்ளிட்டவை நிலுவையில் உள்ளது.

வெள்ளையறிக்கை:

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான்‌ பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஜெர்மன்‌ வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களில்‌ இருந்து மொத்தம்‌ ரூ.51,861.54கோடி கடனுதவி பெற்று நிறைவேற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள 13 திட்டங்கள்‌ குறித்த முழு வெள்ளையறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்‌.

உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம், விரிவான விபத்து மற்றும்‌ ஆயுள்‌ காப்பீட்டுத்‌ திட்டம், பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டம், முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும் பிரதான்‌ மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களுக்கு செலுத்தப்படும்‌ காப்பீட்டுக்‌ கட்டணம்‌, வழங்கப்படும்‌ இழப்பீட்டுத்‌ தொகை மற்றும்‌ பயனாளிகள்‌ உள்ளிட்ட விவரங்களை ஆண்டுதோறும்‌ வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்‌.

பேரிடர்‌ மீட்புப்‌ பணிகள்‌ மற்றும்‌ மீனவர்‌ பாதுகாப்புக்கான கருவிகள்‌ வாங்குவதில் முன்னுக்குப்பின்‌ முரணான அறிவிப்புகள்‌:

ஓகி புயல்‌, கஜா புயல்‌ போன்ற பேரிடர்‌ பாதிப்புகளின்‌ போது தமிழக அரசின்‌ மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள்‌ குறித்து மிகப்பெரிய அளவில்‌ விமர்சனம் ‌எழுந்த நிலையில்‌ ஆழ்கடல்‌ மீனவர்‌ பாதுகாப்பில்‌ தொடர்ந்து அலட்சியம்‌ காட்டி வரும்‌ தமிழக அரசு, முன்னுக்குப்பின்‌ முரணான தகவல்களை வெளியிடுவதன்‌ காரணம்‌ என்ன என்பது குறித்து, விளக்கமளிக்க வேண்டும்‌.

முடிவு:

மேற்கண்ட ஆய்வுக்‌ குறிப்புகள்‌, 2019 20 ஆம்‌ ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவாத வகையில்‌ இருப்பதையும்‌,தமிழக ஆட்சியாளர்கள்‌ மத்திய அரசின்‌ அழுத்தங்களுக்குப்‌ அடிபணிந்து செயல்படுவதையும்‌ வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையின்‌ மூலமாகவே தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவது தெரியவருகிறது. ஆனாலும்‌, மத்திய பாஜக அரசுடன்‌ நட்புறவு கொண்டிருப்பதோடு பாஜக அரசு சிறப்பாக செயல்படுவதாக இந்த அரசு புகழ்பாடுவது தமிழக மக்களுக்கு செய்யும்‌ மிகப்பெரிய துரோகம்‌ என்பதை இந்த ஆய்வறிக்கை நிரூபிக்கிறது".

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x