Published : 13 Feb 2019 04:02 PM
Last Updated : 13 Feb 2019 04:02 PM

அரசின் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு: நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி உதவியாக வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்த வழக்கு நஆளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அரசின் சிறப்பு நிதியுதவி திட்டம் தொடர்பாக பிப்ரவரி 11-ம் தேதி (திங்கட்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதில் தமிழகம் முழுவதும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியாக தமிழக அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் ஆஜராகி முறையீடு செய்தார்.

அப்போது, தமிழக அரசு புள்ளிவிவர அடிப்படையிலேயே, மொத்த மக்கள் தொகையில் 11.9 சதவீதம் பேர் தான் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளதாகவும், அதனடிப்படையில் 18 லட்சம் பேர் மட்டுமே பலனடையத் தகுதியுடையவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், அரசு கூடுதலாக 38 லட்சம் பேர் பலனடையும் வகையில் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது என குற்றம் சாட்டி, அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

தேவையற்றவர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது, உண்மையாக வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்றும் செந்தில் ஆறுமுகம் கோரிக்கை வைத்தார்.

செந்தில் ஆறுமுகத்தின் முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x