Published : 29 Jan 2019 09:05 PM
Last Updated : 29 Jan 2019 09:05 PM

தலைமைச் செயலக ஊழியர்கள் புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தம்: குழப்பத்தில் ஊழியர்கள்

அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நாளை மேற்கொள்ளவிருந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக முதல்வர் தலைமையில் நடக்கும் காந்தி நினைவு உறுதிமொழி ஏற்பு என்ன ஆகும் என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து தலைமைச் செயலக அங்கிக்கரிக்கப்பட்ட சங்கங்களும் அதே கோரிக்கைக்காக போராட களம் இறங்குவதாக அறிவித்தன. அதற்கு அடையாளபூர்வமாக நாளை (ஜன.30) அடையாள வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என்றும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாதபட்சத்தில் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது எனவும் நேற்று முடிவெடுக்கப்பட்டது.

இன்றைய போராட்ட நிலையை கருத்தில் கொண்டு தங்கள் போராட்டத்தை நடத்துவதா? கைவிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்க தலைமை செயலக சங்க செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் , தலைமை செயலகத்தில் இன்று நடைப்பெற்றது.

அதில் திட்டமிட்டப்படி புதன்கிழமை அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என ஒரு தரப்பும், போராட்டம் வேண்டாம் என மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களுக்கு எதுவும் சொல்லாமல் நாளை திட்டமிட்டப்படி வேலை நிறுத்தப்போராட்டம் நடக்கும் என ஒரு தரப்பும், வேலை நிறுத்தம் நடக்குமா? நடக்காதா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என மற்றொரு தரப்பும் தெரிவித்தப்படி கலைந்து சென்றனர்.

சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி உட்பட யாரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கவில்லை.  பின்னர் வேலை நிறுத்தம் நடப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் நாளை காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி தலைமை செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், செயலாளர்கள், அரசு ஊழியர்களும் பங்கேற்பது வழக்கம்.

நாளை இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்களா? திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x