Published : 31 Jan 2019 05:33 PM
Last Updated : 31 Jan 2019 05:33 PM

பசுவின் சிறுநீர் கிருமி நாசினி அல்ல; ஆபத்தானது: கி.வீரமணி

பசுவின் சிறுநீர் கரியமிலவாயுவை விட ஆபத்தானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பசுவை 'கோமாதா - குலமாதா' என்று பாஜக, ஆர்எஸ்எஸ் வணங்குவதுடன், பசு பாதுகாப்புக் குழு - காவல் படை என்ற பெயரில் மற்றவர்களை - குறிப்பாக தலித்துகள் - முஸ்லிம்களைக் கொல்லும் நிகழ்வுகளும், குஜராத்திலும், உத்தரப் பிரதேசத்திலும், வடமாநிலங்களிலும் இதற்குத் தனியே ஒரு அமைச்சகமும், அமைச்சரும் ஏற்படுத்தியுள்ளனர். எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகள்கூட அதனையே தாங்கள் செய்வதாகக் காட்டி, வாக்கு வங்கி அரசியல் நடத்துவது அதைவிட - பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐவிட கேலிக் கூத்தாகும்.

'தி இந்து' ஆங்கில பத்திரிகையில் இன்று வெளியான ஒரு செய்தி - அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் திடுக்கிடுவதாக இருக்கிறது.

நாட்டின் பல்வேறு அசாதாரண இயற்கை நிகழ்வுகள் - பருவ மழை தவறுவதல், புயல், சுனாமிச் சீற்றங்கள் போன்றவை ஏற்படுவதற்கு மூலகாரணம் உலக வெப்பமயமாதல் ஆகும் என்பது நிலை நாட்டப்பட்ட உறுதியான அறிவியல் கருத்தாகும்.

பசுவின் சிறுநீரால் மிகப்பெரிய கேடு - பேராபத்துகள்!

பசுவின் சிறுநீர் கிருமிகளைக் கொல்லுகிறது - மருத்துவமனைகளில் கிருமி நாசினிகளாகப் பயன்படுகிறது - இது பயிரை வளர்க்கிறது  - நோய்களைத் தீர்க்கிறது என்று அளந்து கொட்டியவர்கள் முகத்திரையைக் கிழிக்கும் அறிவியல் தகவல் வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு சதவீதம் பலன் அவற்றால் என்றால், பல மடங்கு பசுவின் சிறுநீரால் ஏற்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு வெப்ப சலனத்தை உருவாக்கக் காரணமான கரியமிலவாயுவைவிட 300 மடங்கு அதிகமான ஆபத்தை உருவாக்கக் கூடிய சக்தியுள்ளதாக உள்ளது என்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை அதிகம் உபயோகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பதால், குறிப்பாக இந்த நைட்ரோ ஆக்சைடு மூலம் ஏற்படும் தீமை மிக அதிகம் என்பதை, கொலம்பியா, அர்ஜென்டினா, பிரேசில், நிகரகுவா, டிரினிடாட், டோபோகோ ஆகிய நாடுகளின் ஆய்வுகள் தொகுப்பாக 'விஞ்ஞான அறிக்கைகள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

இந்த அறிவியல் அறிக்கைகள் மூலம் பசுவின் சிறுநீர் எவ்வளவு ஆபத்தான ஒன்று என்று புரிகிறது

உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

எனவே, பசுவின் சிறுநீர் - உலக அழிவு - உலக வெப்பமயமாதல் மூலம் ஏற்பட முக்கிய காரணம் என்றால், இதைத் தடுப்பது - மாற்றுவது பற்றி விஞ்ஞானிகள் கூடிக் கலந்து தடுப்புப் பரிகாரம் தேடவேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோள்.

டெல்லி இந்திரப் பிரஸ்தா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியரும், சர்வதேச நைட்ரஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலைவருமான என்.ரகுநாதன் இதுபற்றி மேலும் ஆய்வுகளும், மாற்றுப் பரிகார, தடுப்புக்கான வழிவகைகளைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இதுவும் முக்கியமாகும்" என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x