Published : 03 Jan 2019 02:56 PM
Last Updated : 03 Jan 2019 02:56 PM

ஜன.5-ல் அனுமன் ஜெயந்தி;நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடை மாலை: 3,250 கிலோ உளுந்து, 650 கிலோ எண்ணெயில் தயாரிப்பு

வரும் 5-ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 லட்சத்து 8 உளுந்த வடைகளுடன் கூடிய மாலை சாத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக கோயில் மண்டபத்தில் வடை தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 5-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது.

ஏன் வடை மாலை

சனி, ராகு ஆகியோர்களால் இடையூறுகள் ஏற்பட்டால் அவர்களை திருப்திபடுத்த ஆஞ்சநேயருக்கு உளுந்த வடையால் தொடுக்கப்பட்ட மாலை சாத்தினால், அவர்களின் தொல்லைகளில் இருந்து பக்தர்கள் காக்கப்படுவர் என்பது ஐதீகம். இதனால், தான் ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனி பகவானுக்கு பிடித்த எள் எண்ணெய் கொண்டு வடைகள் தயாரித்து பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபடுவது வழக்கம்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 5-ம் தேர்தி அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1 லட்சத்து 8 உளுந்த வடைகளால் தொடுக்கப்பட்ட மாலை சாத்தப்படுகிறது. தொடர்ந்து 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு தங்க கவசம் சாத்துபடி செய்து மகா தீபாராதனையும் நடக்கிறது.

இதற்காக 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் இருந்து 32 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 5 மணி முதல் பணி

இதுகுறித்து ஸ்ரீ ரங்கம் மடப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் கூறும்போது, “அனுமன் ஜெயந்திக்காக ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்க 2,250 கிலோ உளுத்தம் மாவு, 650 கிலோ நல்லெண்ணெய், 35 கிலோ சீரகம் மற்றும் 35 கிலோ மிளகு, 35 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 18 அடுப்புகள் அமைத்து வடை தயாரிக்கப்படுகிறது.

தினசரி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இப்பணி நடைபெறுகிறது. வடைகள் தயாரிக்கப்பட்டு நூல் கயிற்றில் கோர்க்கப்பட்டு 5-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x