Published : 30 Jan 2019 11:28 AM
Last Updated : 30 Jan 2019 11:28 AM

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி தொடங்கியது: ஆசிரமங்கள், ஆன்மிக சேவை அமைப்புகள் சார்பில் 400-க்கும் அதிகமான அரங்குகள்; பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறும்

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை காஞ்சி மடாதிபதி  ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் பல்வேறு மாநிலங் களின் அறநிலையத் துறைகள், ஆசிரமங் கள், ஆன்மிக சேவை அமைப்புகள் சார்பில் 400-க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக் கட்டளையும், பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து கடந்த 2009-ம் ஆண்டுமுதல் இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை நடத்தி வருகின்றன. இந்நிலையில், 10-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை தொடங்கியது. இக்கண்காட்சியை காஞ்சி மடாதிபதி  ஸ்ரீ  விஜயேந்திர சரஸ்வதி சுவாமி கள் தொடங்கி வைத்து ஆசி வழங்கினார். ஆசியுரையில் அவர் கூறியதாவது:

இந்து அமைப்புகள் செய்துவரும் நல்ல காரியங்கள், சேவைப் பணிகளை வெளிப்படுத்த, இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் என்ன வெல்லாம் செய்கிறோம் என்பதை சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

தொடர்ந்து நாம் பணியாற்றவும், தேவையான நிதி ஆதாரங்களைப் பெறவும், இந்து பண்பாடு, கலாச்சாரத்தைப் பரப்பு வதற்கும் இதுபோன்ற கண்காட்சிகள் உதவுகின்றன.

இயற்கையை ஒட்டியே அமைந்து, இயற்கையைப் பாதுகாக்கும் மதம் இந்து மதமாகும். இது யாரையும் தூற்றும் மதம் அல்ல. அனைவரையும் போற்றும் மதம். உலகத் தொடர்புகள் அதிகரித்துள்ள நிலையில் அனைவருக்கும் இந்து மதம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் கலாச்சாரக் கல்வி கற்பிக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் நம் பணிகள் அமைய வேண்டும். இந்து என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

இது பிரச்சாரத்தின் மூலம் வளர்ந்த மதம் அல்ல. ஆனால் இன்று, நம்மவர் களுக்காகவேகூட இந்து மதத்தின் உயர்ந்த தத்துவங்களை பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கோயில்களை சிறந்த முறையில் பரா மரிக்க வேண்டும். கோயில்கள் நன்றாக இருந்தால்தான் சமுதாயமும் நன்றாக இருக்கும்.

இவ்வாறு  ஸ்ரீ விஜயேந்திரர் கூறினார்.

முன்னதாக, பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திரா தலைவரும், கண்காட்சி வரவேற்புக் குழுத் தலைவருமான என்.ரவி வரவேற்புரை ஆற்றினார். ‘‘தர்மம், தானம், சேவை ஆகியவற்றை இந்து மதம் வலியுறுத்துகிறது. சேவைதான் ஆன்மி கத்தின் அடிப்படை. இதையே சுவாமி விவேகானந்தரும், மகாத்மா காந்தியும் வலியுறுத்தினர். வாழ்ந்தும் காட்டினர். ஆன்மிகத்தோடு, சேவைப் பணிகளையும் செய்துவரும் துறவிகள் இங்கு வந்திருப் பது பொருத்தமானது’’ என்று அவர் குறிப்பிட்டார்.

இந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை யின் அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி பேசும்போது, ‘‘இந்து என்ற வார்த்தை பார தத்தின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறையை உணர்த்துவதாக உச்ச நீதிமன் றம் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்து ஆன்மிக, சேவை கண் காட்சி நடத்தப்படுகிறது. இந்து மடங்கள், ஆசிரமங்கள், அமைப்புகள், நிறுவனங் கள், சமூக அமைப்புகள் செய்துவரும் சேவைப் பணிகளை வெளிப்படுத்தி, அதை மேலும் தொடரச் செய்வதே கண்காட்சியின் நோக்கம்’’ என்றார்.

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், இந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை தலைவர்  ஸ்ரீ ஓம்காரானந்தா, தருமபுரம் ஆதீனத்தின் இளைய சன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்,  ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஆரணி திருமலை மடத்தின் சமண மடாதிபதி ஸ்ரீ தவளகீர்த்தி சுவாமிகள் ஆகியோர் தொடக்க விழாவில் அருளுரை வழங்கினர்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், ‘இந்து தமிழ் திசை’ இயக்குநரும், கண்காட்சி அமைப்புக் குழு துணைத் தலைவருமான ரமேஷ் ரங்கராஜன், டிவிஎஸ் கேபிட்டல் ஃபண்ட்ஸ் லிமிடெட் தலைவரும், கண்காட்சி அமைப்புக் குழு தலைவருமான கோபால் சீனிவாசன், பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, கண்காட்சி நிர்வாகக் குழு தலைவரும் பரதநாட் டியக் கலைஞருமான பத்மா சுப்பிரமணி யம், குருநானக் கல்லூரி செயலாளர் மன்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவுக்கு வந்த துறவிகளுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கண்காட்சி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் இல்லை. கிண்டி சிப்காட், ரேஸ்கோர்ஸ், காமாட்சி மருத்துவமனை, வேளச்சேரி ரயில் நிலையம் - பேருந்து நிலையம், தரமணி சந்திப்பு, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து கண்காட்சி நடைபெறும் குருநானக் கல்லூரிக்கு தினமும் இலவச வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை, தொல்லியல் துறை, தமிழ்நாடு, கர்நாடக மாநில அறநிலையத் துறைகள், திருப்பதி திருமலை தேவஸ்தானம்,  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சின்மயா மிஷன், மாதா அமிர்தானந்தமயி மடம், காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், ஈஷா ஃபவுண்டேஷன், வேலூர் நாராயணி பீடம், பிரம்மகுமாரிகள் அமைப்பு,  ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பு, தர்ம ரக்ஷண சமிதி, விவேகானந்த கேந்திரம், சேவாபாரதி, வித்யாபாரதி, சம்ஸ்க்ருத பாரதி, அகில இந்திய சாய் சமாஜம், கோவிலூர் மடாலயம், பேரூர் சாந்தலிங்க அடிகளார் திருமடம், நாடார் மகாஜன சங்கம் உட்பட 400-க்கும் அதிகமான இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் கண்காட்சியில் அரங்குகளை அமைத்துள்ளன.

தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள்

இன்று தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இன்று (30-ம் தேதி) ‘ஜீவராசிகளைப் பேணுதல்’ நிகழ்ச்சி நடக்கிறது.

இதுதவிர இன்று மகாராஷ்டிரா, கேரளா, 31-ம் தேதி பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பிப்ரவரி 1-ம் தேதி கொங்கு வேளாளர் கலாச்சார மையம் வழங்கும் ஒயிலாட்டம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 2-ம் தேதி தெலங்கானா மாநில பழங்குடியினரின் பாரம்பரிய சடங்கு முறைகள், குஜராத், சவுராஷ்டிர சமுதாயத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், 3-ம் தேதி குறும்பர் பழங்குடியினரின் பாரம்பரிய சடங்கு முறைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய நிகழ்ச்சி, 4-ம் தேதி மறவர் சங்கம் வழங்கும் சிலம்பம், வாள்வீச்சு, கும்மி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் சீனிவாச திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x