Published : 03 Jan 2019 03:33 PM
Last Updated : 03 Jan 2019 03:33 PM

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியும் ஆதரவு

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

திமுக தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் 10 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 14 ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 20 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்ட பின்னரும், தேர்தல் ஆணையம் இத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த நிலையில், தற்போது திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட இம்மாவட்ட மக்கள் நிவாரணம் கிடைக்காமல் பரிதவித்துக் கொண்டுள்ளனர். நிவாரணப் பணிகள் முழுமையடையவில்லை. மேலும், பொங்கல் பண்டிகை விழாவும் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் அறிவித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது.

மத்திய பாஜக அரசு கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் இந்திய உழைப்பாளி மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை ஓட்டாண்டியாக்கி உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளித்துவ நிறுவனங்களை கொழுக்க வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்துத் துறையிலும் தோல்வி அடைந்துள்ள பாஜக அரசு மதவெறிக் கலவரங்களை நடத்துவதன் மூலம் தேர்தல் ஆதாயம் தேட முயற்சித்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் உரிமைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது.

தமிழக மக்களின் நலன்களை காவு கொடுத்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மத்திய பாஜக அரசின் எடுபிடியாக அதிமுக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாய உற்பத்தி அனைத்தும் சீரழிந்துள்ளன. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஆணவக்கொலைகள் தொடர்கின்றன. 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் துயருற்று வாடுகின்றனர். அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரங்கள் நொறுங்கிக் கிடக்கின்றன. ஊழல் முறைகேடுகள் அனைத்து மட்டத்திலும் தலை விரித்தாடுகின்றன. அமைச்சர்கள், உயரதிகாரிகள், ஆளுங்கட்சி பிரமுகர் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில்,  மத்திய பாஜகவையும், தமிழக அதிமுகவையும் வீழ்த்திட நடைபெறவுள்ள திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

இத்தொகுதி வாக்காளப் பெருமக்கள் திமுக வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும், இதன் மூலம் தமிழகத்தில் புதிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது" என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x