Published : 02 Jan 2019 05:58 PM
Last Updated : 02 Jan 2019 05:58 PM

ஜெயலலிதா சிகிச்சை; அதிகாரிகள் தவறு செய்தால் ஓபிஎஸ் என்ன செய்துகொண்டிருந்தார்?- மருத்துவர் சங்கம் கேள்வி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விவகாரத்தில், அரசு அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் என்ன செய்து கொண்டிருந்தார்? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்து மக்கள் மத்தியிலும்,அரசியல் கட்சிகள் மத்தியிலும் சத்தேகங்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

தற்பொழுது ஒரு விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையம் இது குறித்து விசாரித்துவரும் நிலையில், அமைச்சர்கள் விசாரணையை திசை திருப்பும் வகையில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

இரவு பகல் பாராமல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு மனவேதனையையும், அச்சத்தையும் உருவாக்கும் வகையில் அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.

சிகிச்சை வழங்குவதில் தொடர்புடையவர்களை காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்பது மருத்துவக் குழுவினரிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார்,இடியாப்பம் சாப்பிட்டார், ஜூஸ் குடித்தார் என்றெல்லாம் கூறிய அமைச்சர்கள் , பின்னர் அது பொய் என்று கூறிய அமைச்சர்கள், இன்று சந்தேகக் கணைகளை தங்களுக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் மீது திருப்புவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட, சிகிச்சை முறைகளில் குறைபாடுகள் இருப்பதாகக் கருதி இருந்தால், முதல்வரின் அனைத்து பொறுப்புகளையும் வகித்த ஓபிஎஸ், ஜெயலலிதாவை  வேறு மருத்துவமனைக்கோ ,வெளிநாட்டு மருத்துவமனைக்கோ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்க முடியும். அதை ஏன் செய்ய வில்லை?

தனது பொறுப்பை ஏன் நிறைவேற்றவில்லை? ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கருதியிருந்தால், ஏன் உடற் கூறாய்வு (போஸ்ட் மார்ட்டம்) செய்திட அன்றைய அமைச்சரவை முடிவு செய்யவில்லை? இவை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

காவல்துறை உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்ட நிலையில், அமைச்சரவையைக் கூட்டும் அதிகாரமும் வழங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா சிகிச்சை குறித்து அமைச்சரவை ஏன் கூடி முடிவு எடுக்கவில்லை? மருத்துவமனையின் அறிக்கையைக் கோரி ஏன் பெறவில்லை?

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொது மக்களுக்கு அரசுத் தரப்பிலிருத்து ஏன் விளக்க அறிக்கை வழங்கவில்லை? மக்களுக்கு இருந்த சந்தேகத்தை ஏன் போக்கவில்லை? இப்பொழுது திடீரென்று சட்ட அமைச்சர் சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டைவைத்து, விசாரணை கமிஷனின் விசாரணையை திசை திருப்புவதேன்?

அரசியல் நோக்கங்களுக்காக, தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்குவதேன்? ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்து, அமைச்சரவை கூடி முடிவு செய்யாத நிலையில், தற்பொழுது சில அதிகாரிகளையும் மருத்துவக் குழுவையும் குறை சொல்வதேன்?

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை ஒருங்கிணைத்த, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரே ஒரு மருத்துவர். அவர் மேற்பார்வையில் தான் சிகிச்சைகள் நடந்தன. அவரும் தவறு செய்துவிட்டார் என அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்கிறாரா?

இந்திய மற்றும் தமிழக மருத்துவர்களின் திறமையை இழிவுபடுத்தும் வகையில் சட்ட அமைச்சர் செயல்படுவது கண்டனத்திற்குரியது. இத்தகைய போக்கு ,நமது மருத்துவர்கள், மருத்துவமனைகளின் மீதுள்ள நம்பிக்கையைச் சீர்குலைத்துவிடும்.

எதிர்காலத்தில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொழுது அச்ச மனநிலையுடன் செயல்படும் நிலை உருவாகும்''.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x