Published : 30 Jan 2019 10:08 AM
Last Updated : 30 Jan 2019 10:08 AM

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி: ரூ.21,820 கோடி பொதுக்கணக்கில் முறையாக பராமரிக்கப்படுகிறது - தமிழக அரசு விளக்கம் 

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியான ரூ.21,820 கோடியே 90 லட்சம் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நிதி எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசிடம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளித்து, தமிழக அரசின் நிதித்துறை செயலர் கே.சண்முகம் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. அத்திட்டத்தின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு ஈடாக 10 சதவீத தொகையை அரசு வழங்கி வருகிறது.

இந்தத் தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு (pension fund regulatory development authority) மாற்றம் செய்ய முடிவெடுக்கப் படவில்லை. எனவே, இந்த நிதி தனி பொதுக் கணக்கில் (public accounts) இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது.

கரூவூல பத்திரங்களின் முதலீடு

அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டிவீதத்தின்படி வட்டி கணக்கிடப்படுகிறது, அத் தொகைக்கும் கருவூல பத்தி ரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகைக்கு மாநில அரசே பொறுப்பேற்கிறது. இந்த வகையில், கடந்த 2017-18-ம் ஆண்டு வரை, ரூ.2,115 கோடியே 47 லட்சம் கூடுதல் வட்டியை அரசு வழங்கியுள்ளது.

இந்த நிதியில் ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களின் பங்களிப்புத் தெகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச்.31-ம் தேதி வரை இந்த நிதியில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8, 283 கோடியே 97 லட்சமாகும். அரசின் பங்களிப்பு ரூ.8,283 கோடியே 97 லட்சம் மற்றும், பெறப்பட்ட வட்டி ரூ.5,252 கோடியே 90 லட்சம் என, மொத்தம் ரூ. 21, 820 கோடியே 90 லட்சம் பொதுக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிலும் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன், ஆண்டு இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த நிதியில் சேர்க்கப்படும்.

ஒவ்வொருவர் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு என்பது முறையாக அரசு தகவல் தொகுப்பு விபர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்படுகிறது. இதை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ‘http://cps.tn.gov.in/public/’ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த நிதி தனி பொதுக்கணக்கில் வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன், அதற் கான வட்டி, சேமநலநிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டியான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இவ்வாறு நிதித்துறை விளக் கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x