Published : 23 Jan 2019 02:08 PM
Last Updated : 23 Jan 2019 02:08 PM

மேகேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசை முதல்வர் பழனிசாமி கண்டிக்காதது ஏன்? - ஸ்டாலின் கேள்வி

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் கண்டிக்கவில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அதன் விவரம்:

"கர்நாடக அரசு மேகேதாட்டுஅணை கட்டுவதற்கான முழு ஆய்வு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேகேதாட்டு அணை பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏறக்குறைய 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கட்சிகளைக் கடந்து பிரதமரிடத்தில் வலியுறுத்தி இருக்கின்றோம். உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு அனுமதி தரக்கூடாது என்று சொல்லி இருக்கின்றோம். அவரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய அரசினுடைய அனுமதி இல்லாமல் நிச்சயமாக எந்தப் பணியும் நடக்காது, தமிழ்நாட்டினுடைய அனுமதி கேட்டுக்கொண்டுதான் நாங்கள் எதையும் செய்வோம் என்று நாடாளுமன்றத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றார்.

கேரளா, புதுவை, தமிழ்நாடு, கர்நாடகா என அனைத்து மாநிலங்களையும் கலந்து முடிவெடுப்போம் என்று நிதின் கட்கரி தெளிவாக சொல்லி இருக்கிறார். ஆனால், கர்நாடக மாநிலம் தன்னிச்சையாக ஒரு திட்ட ஆய்வு அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறது. மத்திய அரசும் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

ஆகவே, இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாத முடியாத நிலையில் இருக்கின்றார்கள். எனவே இப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அதற்கு ஏற்ற வகையில் நல்ல பாடத்தை வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x