Published : 17 Jan 2019 01:06 PM
Last Updated : 17 Jan 2019 01:06 PM

பசுக்களுக்கு அழகுப்போட்டி நடத்தி மாட்டுப் பொங்கல் கொண்டாடிய அலங்காநல்லூர் விவசாயி

தான் வளர்க்கும் பசுக்களுக்கு அழகுப்போட்டி நடத்தி மாட்டுப் பொங்கலை கொண்டாடியுள்ளார் அலங்காநல்லூர் விவசாயி பார்த்திபன்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வசித்து வரும் பார்த்திபன் என்ற விவசாயி, கடந்த 10 ஆண்டுகளாக தனது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குடும்பங்களை அழைத்து மாட்டுப் பொங்கலைக் கொண்டாடி வருகிறார்.

அத்துடன் பாரம்பரியமான போட்டிகளையும், விளையாட்டுகளையும் நடத்தி உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு மிக புதுமையாக தனது உறவினர்களுக்காக தான் வளர்த்து வரும் பசுக்களுக்கு விதவிதமாய் அலங்காரம் செய்து அழகுப்போட்டியும் நடத்தி எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி பார்த்திபன் கூறுகையில், "நமது மரபுகளை ஒவ்வொருவரும் மறக்காமல் நினைவுகூர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எனது உறவினர்கள், நண்பர்களை அழைத்து தவறாமல் இந்த விழாவை நடத்தி வருகிறேன். இதன் மூலம் மனிதநேயம், உயிர்களின் மீது அன்பு போன்ற பண்புகள் மலர இவ்விழாக்கள் வழி செய்யும். இந்தாண்டு நடத்திய பசுக்களுக்கான அழகுப்போட்டியில் பிளாஸ்டிக்குகளை அனைவரும் தவிர்க்க வேண்டும், மண்ணுக்கு கேடு இல்லாத பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை மையப்பொருளாக வைத்துள்ளேன்" என்றார்.

இந்தக் குடும்ப விழாவில் பங்கேற்ற அனைத்து ஆண்களுக்கும் ஆடுபுலி ஆட்டம், இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்டவையும் பெண்களுக்கு சொட்டாங்கல், தாயம், கோலப்போட்டி, உறியடி ஆகியவையும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விவசாயி பார்த்திபனின் உறவினர்கள் நண்பர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x