Last Updated : 30 Jan, 2019 02:48 PM

 

Published : 30 Jan 2019 02:48 PM
Last Updated : 30 Jan 2019 02:48 PM

பதுங்கிய அதிமுக பாய்வது ஏன்?

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது. ஆனால் எதிரணியில் இன்னுமும் கூட்டணி நிலவரம் தெரியவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்பது தான் தமிழக அரசியல் வட்டாரத்தில் சூடு பறக்கும் கேள்வி.

அதற்கு சில காரணங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் நகர்வுகள் சில கேள்விகளை அழுத்தமாக எழுப்புகின்றன. மத்திய பாஜகவுடன் அதிமுக முன்னணி தலைவர்கள் நல்ல உறவில் இருந்த நிலையில் சமீபகாலமாக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி சாதாரணப் பொதுமக்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரை பாஜக அரசின் திட்டங்களையும், அக்கட்சியின் சில கொள்கைகளையும் விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்ட அதிமுகவினர் திடீரென வீராவேசமாகப் பேசி வருவது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்த வண்ணம் உள்ளது.

அரசியல் ரீதியாக அதற்கு காரணங்கள் இருப்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பிரதமர் மோடிக்கும் சரி, பாஜகவுக்கும் சரி இது மிக முக்கியமான தேர்தல். இதனை மூன்றாம் பானிபட் போருடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் அமித் ஷாவே கருத்து தெரிவத்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக தேசிய அளவில் ஏராளமான கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்புகளைக் காட்டத்தொடங்கியுள்ளன.

இது பாஜக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எப்படியேனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது பாஜக. இதனை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவுக்கு இணக்கமான கட்சிகளான சிவசேனா,  அதிமுக போன்ற கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளன.

சிவசேனா மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தபோதிலும், பாஜகவினர் அதனைப் பொறுத்துக் கொள்கின்றனர். மகாராஷ்டிராவில் தங்களுக்கு வலிமையான ஆதரவு தளம் உள்ளபோதிலும், சிவசேனாவுடனான கூட்டணியை பாஜக அதிகமாக விரும்புகிறது. வாக்குகள் பிரிந்து காங்கிரஸ் கூட்டணி அங்கு வெற்றி பெற்று விடக்கூடாது என்பது தான் பாஜகவின் கவலை.

எனவே பேசினோலும் சரி, ஏசினாலும் சரி சிவசேனாவுடன் எப்படியாகிலும் கூட்டணியை அமைத்து விட வேண்டும் என்பதில் பாஜக தலைவர்கள் உறுதியாக உள்ளனர். இந்த நிலவரத்தைப் புரிந்து கொண்டதால் தான் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் பாஜகவுக்கு போக்கு காட்டி வருகிறார்.

தமிழகத்திலும் இது தான் நிலைமை. மத்திய அரசின் நெருக்கடிகளுக்குப் பணிந்து போக வேண்டிய கட்டாயம் இதுவரை இருந்தாலும், இனி நிலைமை அப்படி இல்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் தந்திரத்தை அதிமுகவும் பின்பற்றுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வரும் போது இரு கட்சிகள் இடையே கூட்டணி நிலவரம் இறுதி செய்யப்பட்டு விடும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுபோன்று எதுவும் நிகழவில்லை. பாஜகவுக்கு அதிமுக பிடிகொடுக்கவில்லை.

பாஜகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைப் பிடித்து விடாமல் தடுப்பது அதைவிட முக்கியம். தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய ஆதரவு இல்லையென்றாலும் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவின் வாக்குகளைப் பிரித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற வழிவகுத்து விடக்கூடாது என்பதில் மத்திய பாஜக தலைவர்கள் கவனத்துடன் உள்ளனர்.

இதனால் தான் அதிமுகவின் பேச்சுக்கு பதிலடி கொடுப்பதையும் தமிழக பாஜகவினர் சமீபகாலமாக குறைத்துள்ளனர். கூட்டணிப் பேச்சுவார்த்தையை கவனத்துடன் கையாள்கிறது பாஜக. பாஜகவின் தேசிய நிர்வாகிகளே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுக்கு தற்போதுள்ள அரசியல் நெருக்கடியைப் புரிந்து கொண்டுள்ள அதிமுகவும் போக்குகாட்டும் அரசியலைக் கையில் எடுத்துள்ளது. தனித்து போட்டியிடத் தயங்க மாட்டோம் என அதிமுக நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதுமட்டுமின்றி தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை நாங்களே முடிவு செய்வோம் என அதிமுக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

பாஜக சொல்படி அதிமுக கேட்கும் என பல கட்சியினரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அதிமுகவின் இந்தப் பாய்ச்சல் ஆச்சர்யமாகவே உள்ளது. பேச்சுவார்ததை சுமுகமாக முடியுமா? ஒரு புள்ளியில் இரு கட்சிகளும் ஒன்றிணையுமா? கூட்டணி இறுதியாகுமா? என பாஜகவினர் எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர்.

பாஜக மட்டுமின்றி பாமக உட்பட வேறு சில கட்சிகளின் கூட்டணி நகர்வுகளும் இதை நோக்கியே உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் இறுதி முடிவு தெரிந்தால் தான் அதற்கு ஏற்ப தங்கள் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது சரியாக இருக்கும் என்பதால் திமுகவும் விடை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது. மொத்தத்தில் அதிமுகவின் பாய்ச்சல் அரசியலால் தமிழக தேர்தல் களமே நகர்வுகள் இன்றி சுணங்கியுள்ளது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x