Last Updated : 31 Jan, 2019 05:24 PM

 

Published : 31 Jan 2019 05:24 PM
Last Updated : 31 Jan 2019 05:24 PM

மார்ச் 1 முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி எவ்வித பெண்கள், குழந்தைகள் விடுதியும் இயங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி எவ்வித பெண்கள், குழந்தைகள் விடுதியும் இயங்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த  கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ள சூழ்நிலையில் பணி நிமித்தமாகவும், கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வெளியூர்களுக்குச் சென்று தங்குவது இயல்பாகி உள்ளது. திருச்சி, மதுரை, சென்னை, நெல்லை, கோவை ஆகிய நகர்ப்புற மாவட்டங்களில் பெண்கள் தங்கும் விடுதிகள், இல்லங்கள் காளான்கள் போல அதிகரித்துள்ளன.

பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2014-ல் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள், இல்லங்கள் ஒழங்குபடுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக சமூக நலத்துறை சார்பில் 2015-ல் அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அதன்படி கட்டிடத்தின் உறுதி மற்றும் தூய்மைத் தன்மை குறித்து பொதுப்பணி துறையிடம் சான்றிதழ் பெற்று, பாதுகாப்பு வசதிகள் தொடர்பாக தீயணைப்பு துறையிடம் சான்றிதழ் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் விடுதி நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

இவை அனைத்தும் அளிக்கப்பட்டு உறுதி செய்த பின்னரே பெண்கள் இல்லம், விடுதி நடத்த அனுமதி வழங்கப்படும். ஆனால், அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து முறைகேடான சான்றிதழ்கள் பெற்று விடுதிகளுக்கான அனுமதி பெறப்படுகிறது.

விதிப்படியான கட்டமைப்புகள் இல்லாமல் வீடுகளை வாடகைக்கு எடுத்து விடுதிகள் நடத்துகிறார்கள். இந்த விடுதிகள், இல்லங்களைப் பலரும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சில நாள்களுக்கு முன்பு முறையான அனுமதி பெறாமல் பெண்கள் விடுதி நடத்தி வந்த ஒருவரே பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் வைத்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆகவே, தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை முறையாக அமல்படுத்தவும், முறைகேடாக சான்றிதழ்கள் பெறுவோர், வழங்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த நீதிபதிகள் சசிதரன் - ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தீயணைப்புத்துறை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னையில் கடந்த 4 மாதங்களில் 468 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், 273 விண்ணப்பங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும், 62 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள விண்ணப்பங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் மீதமுள்ள விண்ணப்பங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்ளாக முடிவு செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள்ளாக முடிவெடுக்க வேண்டும். மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி எவ்விதப் பெண்கள், குழந்தைகள் விடுதியும் இயங்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x