Published : 06 Jan 2019 08:31 AM
Last Updated : 06 Jan 2019 08:31 AM

அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் உதவிடும் ‘இந்து தமிழ் - இயர்புக் - 2019’ சென்னையில் வெளியீடு: ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு வெளியிட்டார்

தேசிய, மாநில போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயன் படும் வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் முதல்முறையாகக் கொண்டுவந்துள்ள ‘இயர்புக் 2019’-யை ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு வெளியிட்டார். 768 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.250 ஆகும்.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் உட்பட பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பொது அறிவுக் கேள்விகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

இத்தகைய போட்டித் தேர்வு களுக்கு தயாராகும் மாணவர் களுக்குப் பயன்படும் வகையில் ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள், தேசிய, சர்வதேச அளவிலான விஷயங்கள் அடங் கிய ஆண்டுப் புத்தகங்கள் (இயர்புக்) வெளியாகின்றன.

அதேநேரம் ஆங்கில புத்தகங் களுக்கு இணையான தரத்தில் அவை இல்லை என்ற ஆதங்கம் தமிழ் மாணவர்களிடையே நிலவி வருகிறது. அந்த குறையைப் போக்கும் வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் முதல்முறையாக ‘இயர்புக் 2019’யை வெளியிட்டுள்ளது. இதில் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான முக்கிய நிகழ்வுகளுடன் 25-க்கும் மேற்பட்ட சிறப்புக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

பொது அறிவு பொக்கிஷமாக விளங்கும் இப்புத்தகத்தை மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநருமான வெ.இறையன்பு வெளியிட்டார். முன்னாள் மேயரும் மனிதநேயம் கட்டணமில்லா ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். சென்னை ‘இந்து தமிழ்’ நாளிதழின் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

“தமிழில் இதுபோன்ற இயர் புக் வரவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. தமிழ் படித்த மாணவர்கள் ஆங்கில ஆண்டுப் புத்தகங்களை முழுவதுமாகப் பயன்படுத்த முடியாது. அந்த குறையைத் தீர்க்கும் வகையில் ‘இந்து தமிழ்’ இயர்புக் கொண்டுவந்துள்ளது. போட்டித் தேர்வுகளில் விடையளிக்க இந்தப் புத்தகம் ஒரு அட்சயபாத்திரம்” என்று இறையன்பு கூறினார்.

“இந்து குழுமம் வெளியிட்டுள்ள இந்த இயர்புக் போட்டித்தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கும்’’ என்று முன்னாள் மேயர் சைதை துரைசாமி குறிப்பிட்டார்.

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் கவுரவ ஆலோசகர் பூமிநாதன், ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி சங்கர், ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் வீரபாபு, சத்யா ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சத்தியமூர்த்தி, ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராஜவேல், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் ஆலோசகர் நாசர், வர்த்தமானன் பதிப்பக உரிமையாளர் வர்த்தமானன், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x