Published : 31 Jan 2019 05:29 PM
Last Updated : 31 Jan 2019 05:29 PM

காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல்?- தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா?  என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பதிலளித்துள்ளார்.

2019-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

மீண்டும் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது எப்போது?

புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கு இன்றிலிருந்து ஆரம்பிக்க உள்ளோம். ஜனவரொ 01. 2019-ல் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாகச் சேர தகுதியானவர்கள். கூடிய விரைவில் அதற்கான தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்த முறை நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருப்பவர்கள் வாக்காளர் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது இணையம் மூலமாக www.nvsp.in வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடுவாழ் வாக்காளர்கள் தகவல் கொடுத்தால் அவர்கள் பாஸ்போர்ட் வைத்து வாக்களிக்கலாம்.

ஒரே வாக்காளர்கள் இரண்டு இடங்களில் இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியுமா?

நீங்கள் கூறுவது ஒரு வாக்காளர் இரண்டு முகவரிகளில் உள்ளது பற்றி கேட்கிறீர்கள். நாங்கள் சாஃப்ட்வேர் மூலமாக அதைச் செய்தோம். அதில் முகம், மற்றும் பெயர்கள் விவரங்களை வைத்து நீக்கப்பட்டது. ஆனாலும் அது முழுவதுமாக நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் என்று கூற முடியாது.

மொத்தமாக எவ்வளவு பேர் நீக்கப்பட்டுள்ளனர்?

5 லட்சத்து 62 ஆயிரத்து 932 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

புதிய வாக்காளர்கள் எத்தனை பேர் வந்துள்ளனர்?

தோராயமாக 4.5 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் தடவை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் எத்தனை சதவீதம்?

18 மற்றும் 19 வயது வாக்காளர்கள் தற்போது 8.98 லட்சம் பேர் உள்ளனர். புதிய வாக்காளர்களைச் சேர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடக்குமா?

அதை தேர்தல் ஆணையம்தான் முடிவு  செய்யும். பெரும்பாலும் ஒரே கட்டமாகத்தான் இதுவரை நடந்துள்ளது. ஆகவே தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்குமா?

தேர்தல் நடத்துவதற்கு மத்திய தேர்தல் ஆணையம் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தினார்கள். அதற்கு நாங்கள் தயாராக இருப்பதாகத்தான் சொல்லியிருக்கிறோம். தேர்தல் நடத்த வாக்காளர் பட்டியல், இயந்திரங்கள் தயாராக இருக்கிறதா என்பதைத்தான் பார்ப்பார்கள்.

ஓசூர் தொகுதி குறித்து எதுவும் தகவல் உண்டா? 20 தொகுதிகள் மட்டும்தான் உள்ளதா?

எங்களுக்கு உள்ளது 20 தொகுதிகள்தான். அதற்குத் தயாராக இருக்கிறோம். ஓசூர் சட்டப்பேரவை தொகுதி குறித்து சட்டப்பேரவைச் செயலரிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

காலியாக இருப்பது  இடம் 20 தொகுதிகள் மட்டும் தானா?

தற்போதுள்ள நிலவரப்படி 20 தொகுதிகள் தான் காலியாக உள்ளன.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x