Published : 08 Jan 2019 07:04 PM
Last Updated : 08 Jan 2019 07:04 PM

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறையை கலைக்கும் தனி நீதிபதி உத்தரவு: இடைக்கால தடை நீட்டிப்பு

சென்னை மாநகராட்சியில் ஊழலை தடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவை கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு பிறப்பிக்கப்பட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியில் தன் வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி சென்னை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநகராட்சிக்கு எதிராக லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பில் சென்னை மாநகராட்சியில் ஊழல் கண்காணிப்பு பிரிவை கூண்டோடு கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக டிஜிபி-யுடன் கலந்தாலோசித்து புதிய அதிகாரிகளை கொண்டு ஊழல் கண்காணிப்பு பிரிவு அமைக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்திருந்தார்.

மேலும் ஊழல் புகார் விசாரணை நடைமுறை தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை சென்னை மாநகராட்சிக்கும்,  தமிழக அரசுக்கும் வழங்கி அது தொடர்பாக 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த நவ.29 அன்று இந்த தீர்ப்பில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கலைத்த உத்தரவையும், புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவையும் மட்டும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மற்ற வழிகாட்டுதல்களை படிப்படியாக நிறைவேற்ற தயாராக இருப்பதாக தெரிவித்து சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்தது.

அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்ட இரண்டு உத்தரவுகளுக்கு மட்டும் தடைவிதித்ததுடன், மற்ற உத்தரவுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஜனவரி முதல் வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதுடன், தடையை நீட்டிக்க வேண்டுமென மாநகராட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனையேற்ற நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அதுவரை தனி நீதிபதி உத்தரவில் ஒரு பகுதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x