Published : 19 Jan 2019 04:12 PM
Last Updated : 19 Jan 2019 04:12 PM

நூறு கூட்டங்களில் ஆயிரம் பொய்ச் சொல்பவர் மோடி: ஸ்டாலின் கடும் தாக்கு

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாக சொன்ன மோடி மக்கள் வாயில் கல்லையும், மண்ணையும் போட்டார் என ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

“என்னிடம் சிலர் கேட்கிறார்கள் மோடியை ஏன் கடுமையாக எதிர்க்கிறீர்கள் அவர் உங்களை என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். ஒருவர் நல்லது செய்கிறாரா? செய்யவில்லையா? என்பதல்ல. நாட்டு மக்களுக்கு அவர் என்ன செய்கிறார் என்பதே முக்கியம்.

நான் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று பேசியவர் மோடி. 100 கூட்டம் பேசினால் 1000 பொய்களை சொல்லியிருப்பார். அவர் சொன்ன மிகப்பெரியப் பொய் வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணத்தைக்கொண்டு வந்து ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். போட்டாரா? வாயில் கல்லையும், மண்ணையும்தான் போட்டார்.

பெட்ரோல் விலை, டீசல் விலை, சிலிண்டர் விலை, மளிகைச்சாமான் விலை, காய்கறிவிலை உயர்ந்தது. வேலை வாய்ப்பின்மை உயர்ந்தது, குடிசைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இதுதான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள். இவர்தான் இந்தியாவை ஆள துடித்துக் கொண்டிருக்கிறார்.

இது யாருக்கான ஆட்சி கார்பரேட்டுக்களுக்கான ஆட்சி பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி, பெரும் முதலாளிகளுக்கான ஆட்சி மக்களுக்கான ஆட்சியல்ல. இன்னும் சொன்னால் இந்த அரசை ஒரு பிரைவேட் நிறுவனமாக்கி விட்டார். கார்ப்பரேட்டுக்களுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் ஒரு கார்பரேட் ஆட்சி.

இதற்கு எதற்கு வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். இதனை தமிழ்நாட்டில் நான் பார்த்தேன். இதோ கொல்கொத்தாவிலும் பார்க்கிறேன். எனது ஆட்சி ஊழலற்ற ஆட்சி ஊழல் புகாரை யாரும் சொல்ல முடியாது என்று சில மாதங்களுக்கு முன் மோடி சொன்னார். அவர் இந்தியாவில் இருக்கிறாரா? வெளிநாட்டில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.

ரபேல் என்று 6 மாதமாக சொல்லி வருகிறோமே அது ஊழலல்லாமல் வேறு என்ன. அரசாங்க நிறுவனத்துக்கு கொடுக்காமல் தனியார் நிறுவனத்துக்கு கொடுப்பது ஊழலல்லாமல் வேறு என்ன.

விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் செல்லும்முன் அருண் ஜேட்லியை பார்த்துவிட்டு செல்கிறார் இது ஊழலில்லையா? லலித்மோடியை இந்தியாவை விட்டு தப்பிக்க வைத்த அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செயல் ஊழலலில்லையா? நிரவ் மோடி தப்பியது ஊழலில்லையா?

500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது ஊழலில்லையா? இது இந்தியாவின் கருப்புத்தினம் என மன்மோகன்சிங் சொன்னாரே? யாருக்காக நோட்டுகள் தடைச் செய்யப்பட்டன இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ஊழலைப்பற்றி நரேந்திர மோடி பேசலாமா?

மோடியின் ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதுபோல் ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும் அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழி வகுக்கும்.

அதுதான் மோடி ஆட்சியில் நடக்கிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கிப் போய்விடும். அதை உணர்ந்தே இங்கு வந்துள்ளீர்கள். இப்படிப்பட்ட கூட்டத்தை ஏற்பாடு செய்த மம்தாவுக்கு நன்றி.”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x