Published : 01 Jan 2019 09:39 PM
Last Updated : 01 Jan 2019 09:39 PM

சி.வி.சண்முகம் சொன்னதுபோல் போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டும்: ஜெயக்குமார் அதிர்ச்சி

அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னதுபோல் ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரணை ஆணையம் தாண்டி போலீஸ் விசாரணை வைத்து கவனிக்கவேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

விழுப்புரத்தில் நேற்று பேட்டி அளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன்ராவை கடுமையாக விமர்சித்தார். அவர்கள் பின்னணியை விசாரணைக்குள்ளாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதற்கு ஓபிஎஸ் அவரது சொந்தக்கருத்து அது என பதிலளித்திருந்த நிலையில் அதை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேட்டி அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“ஒரு கருத்து அமைச்சர் சொல்வது விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென்பது அதைத்தான் நானும் ஒத்தக்கருத்தாக தெரிவித்தேன். ராஜிவ் கொலையில் ஜெயின் கமிஷன் ஒருபக்கம் விசாரித்தாலும் சிபிஐ மறுபக்கம் விசாரித்ததுபோல் அதுமாதிரி சிலபேரை கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மையெல்லாம் வெளிவரும். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

சட்ட அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கணும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம். கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மையெல்லாம் வெளிவரும். இவர்களிடம் சும்மா கூப்பிட்டு ஒரு வாக்குமூலம் வாங்குவதால் உண்மை வராது. கூட்டிட்டு போய் நன்றாக ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டும்.”

யாரைச் சொல்கிறீர்கள்?

யார் சம்பந்தப்பட்டார்களோ அவர்களைத்தான். அவர்களை கூட்டிட்டு போய் நல்ல டிரீட்மெண்ட் கொடுத்தால் உண்மை வெளிவரும்.

சுகாதாரத்துறைச் செயலரை சொல்கிறீர்களா?

நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லையே. யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்களோ, அவர்களிடம் வாக்குமூலம் வாங்குவது ஒருபக்கம். ஆனால் போலீஸ் ட்ரீட்மெண்ட் ஒரு விஷயம். போலீஸ் ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

அதனால்தான் நேற்று அமைச்சர் கூறியுள்ளார். இவர்களிடம் வாக்குமூலம் வாங்குவதைவிட போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்கிறார். உண்மைவரவேண்டும் என்றால், வெறுமனே வாக்குமூலம் கொடுங்கள் என்றால் அவர்கள் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். அதனால் தான் சொல்கிறேன். கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்.

அதற்கான முயற்சிகள் வருமா?

கண்டிப்பாக ஒரு தேவை, அவசியம் என்று அரசு கருதும்பட்சத்தில் ஒரு சூழ்நிலை வரும்போது அது தவிர்க்க முடியாத நடவடிக்கையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x