Published : 30 Jan 2019 12:30 PM
Last Updated : 30 Jan 2019 12:30 PM

பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: தமிழக அரசின் அரசாணை ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு

50 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறுபான்மைப் பள்ளிகள் அந்தஸ்து வழங்குவதற்கான கூடுதல் விதிகளை வகுத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை  2018 ஏப்ரல் மாதம் 5-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

அதன்படி சிறுபான்மைப் பள்ளிகளில் 50 சதவீத சிறுபான்மையின மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும், இந்த மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்வித் துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் ஆப் மேரி கல்வி நிறுவனம் உள்பட 140 கல்வி நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். தமிழகம் முழுவதும் உள்ள 2,500 பள்ளிகளை நிர்வகிக்கும் இந்த அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுபான்மைப் பள்ளிகள் தொடங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமையைத் தடுக்கும் வகையில் தமிழக அரசின் அரசாணை உள்ளதால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையச் சட்டத்தின் படி, சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறி, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், தகுதியான சிறுபான்மை மாணவர்களை சேர்த்துக் கொள்வதாக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் அளித்த உத்தரவாத்தை, பள்ளிகள் மீறும் பட்சத்தில், மாநில அரசு, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x