Published : 02 Jan 2019 03:13 PM
Last Updated : 02 Jan 2019 03:13 PM

சபரிமலையில் வழிபாடு செய்த இரு பெண்களுக்கு ஆபத்து நேரிடலாம்: திருமாவளவன்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்த இரு பெண்களுக்கு கேரள அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்பது இன்று நனவாகியிருக்கிறது. இன்று அதிகாலை இரண்டு பெண்கள் சபரிமலையில் வழிபாடு செய்துள்ளனர். அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்திய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பாராட்டுகிறோம்.

பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் விதமாக அனைத்து வயதுப் பெண்களும் சபாரிமலையில் வழிபடலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்தவிடாமல் சனாதனவாதிகள் தடுத்து வந்தனர். அந்த சனாதனப் போக்கை நியாயப்படுத்தும் விதமாக அது பாரம்பரியம் தொடர்பான பிரச்சினை என்று பிரதமர் நரேந்திர மோடியே கருத்து தெரிவித்தார்.

அங்கு முறையாக விரதமிருந்து வழிபடச் சென்ற பெண்களை சனாதன கும்பல் அடித்து விரட்டி வன்முறையில் ஈடுப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தவிடாமல் மத்தியில் ஆளும் அரசியல் கட்சியே வன்முறையில் ஈடுபட்ட அவலமான சூழலை இந்த நாடு பார்த்தது. இதனிடையில் தமது உரிமையை நிலைநாட்ட பெண்கள் விடாமல் போராடி வந்தனர். அந்தப் போராட்டத்தில் மகத்தான வெற்றியை இப்போது ஈட்டியுள்ளனர். 

பிந்து, கனகதுர்கா என்ற அந்த இரண்டு பெண்களின் பெயர்களும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது உறுதி. அவர்களுக்கு சனாதன வெறியர்களால் ஊறு நேரிடலாம். எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அவர்கள் வழிபடுவதற்கு உரிய பாதுகாப்பை வழங்கிய பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை மனமாரப் பாராட்டுகிறோம்.

தற்போது சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபாடு செய்துள்ளதைத் தொடர்ந்து கோயில் கருவறையை மூடி புனிதப்படுத்தும் சடங்குகள் செய்யப்படுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது கோயிலின் மரபுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது. எனவே அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இனிமேலும் சபரிமலையில்  பெண்கள் வழிபடுவதற்கு சனாதனவாதிகள்  இடையூறு செய்தால் அவர்களை இரும்புக் கரம் கொண்டு கேரள அரசு ஒடுக்கிட வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டும்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x