Published : 16 Jan 2019 03:49 PM
Last Updated : 16 Jan 2019 03:49 PM

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எத்தனை முறை மக்களைச் சந்தித்தீர்கள்? ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி

தேர்தல் வருவதால் மக்களைச் சந்திக்க ஓடி வரும் ஸ்டாலின் மூன்றாண்டுகளில்எத்தனை முறை  மக்களைச் சந்தித்தார் என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். 

இது தொடர்பாக சேலத்தில் இன்று முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

''ஜெயலலிதாவின் மணிமண்டபம், எம்.ஜி.ஆரின் வெண்கல முழு உருவச் சிலை, ஜெயலலிதாவின் வெண்கல முழு உருவச் சிலை ஆகியவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வுக்கு வந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட கிராமத்திலிருந்து நகரம் வரை இன்றைக்கு பொருளாதாரமானாலும் சரி, கல்வியானாலும் சரி, மருத்துவமானாலும் சரி, அத்தனையிலும், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையாக விளங்குவதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதாதான் காரணம். அவர்கள் உழைத்து,  தன்னையே நாட்டுக்கு அர்ப்பணித்தவர்கள்.

அண்ணாவின் வாரிசாக இரவு, பகல் பாராமல் மக்களுக்காக உழைத்து, தனக்கென்று குடும்பம் இல்லாமல், குடும்பம் என்று சொன்னால், மக்கள் தான் தன் குடும்பம் என்று வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது  மணிமண்டபம், இருபெரும் தலைவர்களுடைய முழு உருவ வெண்கலச் சிலை திறப்பதை நான் பாக்கியமாகக் கருதுகின்றேன்.

ஜெயலலிதா ஆட்சியில் நாங்கள் கிராமம் கிரமமாகச் சென்று, கிராம மக்களுக்கு என்ன தேவை என்று கேட்டு அதை முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறி அவர்கள் தேவையை நிறைவேற்றினோம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும் மக்களை நேரடியாகப் பார்த்து அவர்களது குறைகளை தீர்த்து வருகிறோம்.

ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது எத்தனை முறை கிராமத்திற்குச் சென்றார்? எவ்வளவு பேரைப் பார்த்தார்? மக்களுக்காக என்னென்ன திட்டங்களைக் கொடுத்தார்? எதுவுமே செய்யவில்லை. எல்லாம் ஒரு போலி விளம்பரம். ஆளுங்கட்சியாக இருந்தபோதும் மக்களைப் பார்க்கவில்லை. இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் மக்களைப் பார்க்கவில்லை. 3 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போது மக்களைவைத் தேர்தல் வருகிறது. அதற்காக கிராம சபைக்கூட்டம் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தவறாக பொய்யாகத் திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை அத்தனையும் தவிடுபொடியாக்கப்படும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x