Published : 09 Jan 2019 01:02 PM
Last Updated : 09 Jan 2019 01:02 PM

இடஒதுக்கீடு விவகாரம்: பாஜக அரசு செய்வதை முற்பட்ட வகுப்பினரே சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள்; டிடிவி தினகரன்

முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு:அரசியல் உள்நோக்கம் கொண்டது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும்  பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள எந்த சமூகத்தவரும் உதவி செய்யப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் இப்படி ஒரு சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்து அரசியல் சித்து விளையாட்டைச் செய்ய முனைகிறது பாஜக அரசு.

உண்மையாகவே முற்பட்ட பிரிவினரின் பொருளாதார முன்னேற்றத்தில் பாஜக கவலைப்பட்டிருந்தால், அவர்களின் பொருளாதார தரத்தை உயர்த்த எத்தனையோ மாற்று வழிகளை பாஜக ஆட்சியிலிருந்த இந்த நான்கரை ஆண்டுகளில் செய்திருக்க முடியும். அதை விடுத்து, இப்படியொரு சட்டத் திருத்தத்தை தனது அரசியல் பலத்தை வைத்து நிறைவேற்றினால் கூட, அரசியல் சட்டம் அனுமதிக்காத இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும்.

அந்த யதார்த்தம் தெரிந்திருந்தும் இந்த முயற்சியை பாஜக அரசு செய்வதை முற்பட்ட வகுப்பினரே சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள்.  

அதுமட்டுமின்றி, சமூகநீதிக் கொள்கையின் உறைவிடமாகக் கருதப்படும் தமிழகத்தில் ஏற்கெனவே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அயராத முயற்சியால் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக் கொள்கை அரசியல் சட்ட பாதுகாப்போடு அமலில் உள்ளது. அதற்கு மறைமுகமாக குந்தகம் விளைவிக்கும் வகையில் பாஜகவின் இந்த சட்டத் திருத்த மசோதா உள்ளது என்ற குற்றச்சாட்டையும் புறம் தள்ள முடியாது.

எனவே, இழந்து வரும் தங்களின் செல்வாக்கை மீட்டு வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் உணர்வுகளோடு விளையாடாமல், முற்பட்ட வகுப்பினரும் பயன்பெறும் வகையில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணியில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேறினாலும் கூட, மாநில அரசின் ஒப்புதலுக்காக இம்மசோதா தமிழக சட்டப்பேரவைக்கு வரும்போது, துணிச்சலோடு இம்மசோதாவை நிராகரித்து, இந்த விஷயத்திலாவது ஜெயலலிதாவின் கொள்கையை நிலைநிறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக இருக்க வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x