Last Updated : 19 Dec, 2018 09:38 AM

 

Published : 19 Dec 2018 09:38 AM
Last Updated : 19 Dec 2018 09:38 AM

மேலூர் கொள்ளைக்கு துப்பாக்கி விநியோகித்த  ஆளுநர் மாளிகை போலீஸ் உட்பட 6 பேர் கைது

மதுரை மாவட்டம், மேலூரில் மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்துக்கு நாட்டுத் துப்பாக்கியை விநியோகித்த தமிழக ஆளுநர் மாளிகை போலீஸ்காரர் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த சம்பவத்தில் 10 பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலூரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் கடந்த டிச.6 காலையில் 6 பேர் நுழைந்து, பாஸ்கரனின் மனைவி மீரா, பணிப் பெண், காவலாளி ஆகியோரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டன.

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக செல்போன் டவர் சிக்னல்களை தனிப்படை ஆய்வு செய்ததில் மதுரை, திருமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த 26 பேருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக திருமங்கலத்தைச் சேர்ந்த மாரி முத்து, ரமேஷ், வலையங்குளம் எலியார்பத்தி கணபதி, பெருங்குடி ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.32 லட்சம் மற்றும் கார், நாட்டுத் துப்பாக்கி, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்தக் கும்பலில் இருந்த 26 பேரும் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவ்வழக்கில் நேற்று சுரேஷ்குமார், ராஜகுரு, பழனிவேல், அனந்தகிருஷ்ணன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மேலும் 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை போலீஸ்

இதுபற்றி போலீஸார் கூறியதாவது: திருமங்கலத்தைச் சேர்ந்த குமார், தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர். இவ்வழக்கில் கைதான ரமேஷுக்கு பழக்கமானவர். இதன்மூலம் குமாரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பெற்றுள்ள னர். போலீஸ்காரர் குமார் வீட்டில் நடத்திய சோதனையில் 66 தோட்டாக்கள் கைப்பற்றப்பட் டுள்ளன. அவருக்கு நாட் டுத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என விசாரிக்கிறோம்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் திருச்சியில் போலீஸ்காரராக பணிபுரிந்தபோது, மோசடி வழக்கில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இக்கும்பலுடன் தொடர்புடைய சரவணன் என்பவரும், திருப்பூரில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். போலீஸாக உள்ள 3 பேர் கொள்ளைக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததால், மற்றவர்கள் துணிச்சலாக கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x