Published : 11 Sep 2014 08:09 AM
Last Updated : 11 Sep 2014 08:09 AM

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக குமரி மாவட்ட அமைப்புகள் போர்க்கொடி

கன்னியாகுமரி தொடர்பான தனது கருத்துக்கு அமைச்சர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அந்த மாவட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் பத்திரிகையாளர் களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘இந்துக்கள் சிறுபான்மையினரு டன் ஒற்றுமைப் பட்டிருந்தால் கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தில் இருந்து பிரிந்திருக்காது. கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளத்துடன் இணைக்க நாங்களே முன்னின்று போராடுவோம்’’ என்று கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மறுநாள் விளக்கம் அளித்த அமைச்சர், ‘எனது பேச்சின் ஒரு பகுதி மட்டும் வெளியிடப்பட்டு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார். ஆனாலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் அமைச்சரின் விளக்கத்தை ஏற்கவில்லை.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் காமராஜர் நற்பணி மன்றத்தின் மாநிலத் தலைவரும், குமரி மாவட்ட விடுதலை போராட்டத் தியாகிகள் சங்கத்தின் சட்ட ஆலோசகருமான ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

செருப்பு அணிந்து நடக்கக்கூடாது. மூத்தப் பிள்ளை பிறந்தால் ‘தலை’ வரி செலுத்த வேண்டும். கோயிலில் வழிபாடு செய்ய உரிமை வரி செலுத்த வேண்டும் என்று பல விதங்களில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அடிமைப்பட்டுக்கிடந்தனர். மார்ஷல் நேசமணி தலைமையில் சைமன், ரசாக், நூர்முகமது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சிதம்பரம்நாதன் நாடார், பொன்னப்ப நாடார், தாணுலிங்க நாடார், சிவதாணுப்பிள்ளை, சிவன் பிள்ளை, பப்பு பணிக்கர் உட்பட ஏராளமானோர் போராடியதால் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

ஒரு கிறிஸ்தவரின் தலைமையின்கீழ் இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து சமுதாய மக்களும் எந்த பாகுபாடும் பார்க்காமல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அமைச்சரோ இதற்கு நேர்மாறாக, ‘இந்துக்கள் சிறுபான்மையினருடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் கன்னியாகுமரி கேரளத்தில் இருந்து பிரிந்திருக்காது’ என்று பேசியிருக்கிறார். அவரது விளக்கத்தை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. தனது பேச்சுக்கு ஒரு வாரத்துக் குள் அமைச்சர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், பல அமைப்பு களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்துவோம். கன்னியாகுமரிக்கு அமைச்சர் எப்போது வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக ஒற்றுமை இயக்கத்தின் தலைவரான சையத் முகமது கூறுகையில், “என் மனைவின் தாத்தா பாவா சாகிப், நேசமணியின் வலதுகரமாக இருந்து போராட்டத்தில் பங்கேற்றவர். அந்தப் போராட்டங்களில் பங்கேற்ற ரசாக், நூர் முகமது என்ற சிறுபான்மையினரின் பங்கை மறக்க முடியாது. ஆனால், அமைச்சரின் பேச்சு நேர்மாறாக இருக்கிறது’’ என்றார்.

இதுகுறித்து பேசிய அரசியல் விமர்சகர்களோ, “யதார்த்தமாக பேச பொன்.ராதாகிருஷ்ணன் ஒன்றும் விவரம் தெரியாதவர் அல்ல. அவர் பேச்சில் மிகநுட்பமான அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 சதவீதம் இந்துக்களும், 40 சதவீதம் கிறிஸ்தவர்களும், 5 சதவீதம் முஸ்லிம்களும் உள்ளனர். இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையாக இருப்பது நாடார் சமூகத்தினரே.

அமைச்சரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான். கட்சியிலும், மாவட்டத்திலும் தனக்கு போட்டியாக எந்த சக்தியும் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக அரசியல்ரீதியாக இந்துக்களை குறி வைத்து இப்படி பேசியிருக்கிறார். இது ஆரோக்கியமானதல்ல’’ என்றனர்.

இதுதொடர்பாக கருத்து அறிய பொன்.ராதாகிருஷ்ணனை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் இயலவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x