Published : 19 Dec 2018 04:29 PM
Last Updated : 19 Dec 2018 04:29 PM

பொன் மாணிக்கவேல் எங்களை செயல்படவே விடவில்லை; 333 வழக்குகளில் 3 வழக்குகளில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது: டிஜிபி அலுவலகத்தில் அதிகாரிகள் பகீர் புகார்

உயர் நீதிமன்றம் சிறப்புக் குழுவை அமைத்ததே 333 வழக்குககளை கண்டுபிடிக்கத்தான். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் பொன் மாணிக்கவேல் எடுக்கவில்லை என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த அதிகாரிகள் பகீர் தகவலைத் தெரிவித்தனர்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஐ.ஜி பொன் மாணிக்கவேல், ஓய்வு பெற்ற பின்னரும் நீதிமன்ற உத்தரவின் பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து வழக்குகளை விசாரித்து வருகிறார். இந்நிலையில், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளே 2 நாட்களாகத் தொடர்ந்து புகார்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:

''உயர் நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவில் பொன் மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட டீமில் அவருக்கு அடுத்த 2-வது நிலையில் நான் இருக்கிறேன். 5 ஏடிஎஸ்பி, 5 டிஎஸ்பி, 17 இன்ஸ்பெக்டர், 27 உதவி ஆய்வாளர்கள், 136 கான்ஸ்டபிள்கள் உள்ளோம்.  21/7/2017 அன்று  உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள 333 வழக்குகளில் விசாரித்து ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்கிற உத்தரவுப்படி செயல்பட்டோம்.

இந்த ஓராண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ. 4 கான்ஸ்டபிள் டீம் வந்தார்கள். அந்த ஓராண்டாக அந்த டீமில் உள்ள யாரும் சுதந்திரமாகச் செயல்படவில்லை. ஒருவித அழுத்தமாக இருந்தது. சுதந்திரமாகச் செயல்பட விடவில்லை. 333 வழக்குகளில் எந்த குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. சிலைகள் கைப்பற்றப்படவில்லை.

நன்னிலம் ஸ்டேஷனில் 15 நாளைக்கு முன் எஸ்.ஐ.ராஜா என்பவர் இரண்டு வழக்கில் உள்ள 3 சிலைகளைக் கண்டுபிடித்துள்ளார். அதற்கு முன் வத்தலகுண்டு ஸ்டேஷனில் தியாகராஜன் என்கிற குற்றவாளியைப் பிடித்து ஒரு சிலையை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

அதற்கு முன் 2 பாரபாலகர் கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது வெளிநாட்டிலிருந்து வர உள்ளது. இவை தவிர எந்த சிலைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல மாவட்டங்களில் காணாமல் போன சிலைகள் வெளிநாட்டில் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் 100 சிலைகளுக்கு மேல் இந்தியாவிலிருந்து விற்கப்பட்டவை என நீதிமன்றத்தில் அங்குள்ள காவல்துறை அதிகாரிகள தெரிவித்தனர். இவ்வளவு சிலைகள் உள்ளன. நீங்கள் டாக்குமெண்ட் கொடுத்தால் தருகிறோம் என்று காவல்துறை அதிகாரிகள் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

அதற்காகத்தான் இந்தக் குழுவே அமைக்கப்பட்டது. எந்த ஊரில் எந்த சிலைகள் காணாமல் போயின, எந்த ஊரில் எந்தக் கோயிலில் இருந்து சிலைகள் திருடப்பட்டன, அந்த சிலைகளை யார் கொண்டுபோனது என்பதைக் கண்டுபிடிக்கத்தான் இந்த சிறப்புக் குழுவே அமைக்கப்பட்டது.

அந்த டீமில் எந்த ஊரில் எந்தக் கோயிலில் சிலை திருடப்பட்டது என்பதை விசாரிக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அப்படி ச்செய்திருந்தால் இந்நேரம் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். அவை மீட்கப்பட்டிருக்கும்.

புலனாய்வுக் குழுவில் இன்ஸ்பெக்டர் தலைமையில் அவருக்கு வழக்கு ஒதுக்கப்பட்டு விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். ஆனால் எந்த அதிகாரியையும் எந்த வழக்கையும் போய் விசாரிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். அதனால்தான் எங்களால் செயல்பட முடியவில்லை. இல்லாவிட்டால் சிறப்பாகச் செயல்பட்டிருப்போம்.

உதாரணத்திற்கு கன்னியாகுமரியில் உள்ள வழக்குகளை விசாரிக்க அங்கு ஒரு டீம் அமைக்கப்பட்டது. அவர்களை அங்கு விசாரிக்க விட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், ஆனால் அவர்களை அங்கு விசாரிக்கவிடாமல் தர்மபுரியில் போய் வழக்கை விசாரிக்கச் சொன்னார்கள். அவர்களால் போக முடியவில்லை, வர முடியவில்லை.

இதுமாதிரி வேண்டுமென்றே விசாரணை நடத்த சுதந்திரம் தரவில்லை. விசாரணை அதிகாரியிடம் ஒரு குற்றவாளியை கொடுப்பார். ரிமாண்ட் செய்யச் சொல்லி அனுப்புவார். அந்தக் குற்றவாளி யார், எங்கு திருடினார் எந்த விவரமும் விசாரணை அதிகாரிக்குத் தெரியாது.

வெறுமனே ஆவணங்களை மட்டுமே கொடுக்கும் நிலையில்தான் விசாரணை அதிகாரிகள் இருந்தோம். அந்த நிலையில்தான் ஏற்கெனவே எவ்வளவு கஷ்டம் அனுபவித்தோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். ஏற்கெனவே பொன் மாணிக்கவேல் ஐஜியாக இருந்தார். எங்கள் குறைகளை பலமுறை சொன்னோம். இவர் இதுபோன்ற நிர்பந்தங்கள் வந்தன. அதனால் முடியாது என்று  சொன்னோம்.

பந்தநல்லூர் வழக்கில் நிறைய பேரை ரிமாண்ட் செய்திருந்தோம். அதில் சில குற்றவாளிகளை ஏடிஎஸ்பி குமாரிடம் அளித்து ரிமாண்ட் செய்யச் சொன்னார்கள். அதற்கு குமார் நான் விசாரணை அதிகாரி குற்றவாளியை விசாரிக்காமல் ரிமாண்ட் செய்ய முடியாது என்று சொன்னபோது கேட்கவில்லை. இதனால் அவர் மெடிக்கல் லீவில் போய்விட்டார்.

இதனால் அவருக்கு பிரச்சினைகள் உருவாக்கி கிட்டத்தட்ட 256 நாள் வேலையே வராமல் மெடிக்கல் லீவில் இருந்தார். அதேபோன்று இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லதுரை, ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் இதேபோன்று பிரச்சினையில் மெடிக்கல் லீவில் போனவர் இன்று அப்படியே உள்ளார். அவருக்கு டிஎஸ்பி பதவி உயர்வு வரவேண்டியது இல்லாமல் முடங்கிப் போயுள்ளார்.

இதுபோன்று பல பிரச்சினைகள் உள்ளன. பொன் மாணிக்கவேல் முன்னர் ஐஜியாக இருந்தார். இப்போது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் யாரிடம் போய் சொல்ல முடியும். உயர் நீதிமன்றத்தில் நாங்கள் போய் சொல்ல முடியுமா? அவர்தான் சிறப்பு அதிகாரி. டீம் தலைவரே அவர்தான். அவரை மீறி எப்படி பெட்டிஷன் கொடுக்க முடியுமா?

அதனால்தான் இந்தத் தலைமையின் கீழ் எங்களால் விசாரணை நடத்த முடியாது. ஆகவே எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம். நேற்று 13 பேர் புகார் கொடுத்தோம். இன்று 11 பேர் வந்துள்ளனர். எல்லோரும் டிஜிபியைச் சந்தித்து பெட்டிஷன் அளிக்க உள்ளோம்''.

இவ்வாறு புகார் அளிக்க வந்த அதிகாரிகள், போலீஸார் தெரிவித்தனர்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x