Last Updated : 07 Dec, 2018 01:16 PM

 

Published : 07 Dec 2018 01:16 PM
Last Updated : 07 Dec 2018 01:16 PM

அரசு மருத்துவர்கள் போராட்டம் டிச.17 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு

7-ஆவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டிருந்த அரசு மருத்துவர்கள் வரும் 17-ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

நாளை 8 முதல் 13ஆம் தேதி வரை சிறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை என்ற கோணத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.

முன்னதாக, மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு மருத்துவர்களின் இதுபோன்ற வேலை நிறுத்தங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர்  அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கே.கே.சசிதரன் ஆதி கேசவலு அமர்வில் தமிழக சுகாதாரத்துறை செயலர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அதில் "அரசு மருத்துவர்கள் ஊதிய விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராகவே உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் சுகாதார துறை செயலர் கஜா புயல் நிவாரணப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். இதனால் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அரசு மருத்துவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து வரும் டிசம்பர் 17-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதனையடுத்து அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை 17-ம் தேதிவரை கைவிடுவதாக அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x