Published : 26 Dec 2018 09:13 AM
Last Updated : 26 Dec 2018 09:13 AM

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை, சிறப்புக் கூட்டுத் திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்து மஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பேராலயத்தின் பிரார்த்தனை மண்டபத்துக்கு வந்த பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் தமிழிலும், ஆங்கிலத் திலும் சிறப்புக் கூட்டுத் திருப் பலியைத் தொடங்கி வைத்தார்.

தேவதை, அந்தோணியார் உடை தரித்த குழந்தைகள் ஆகியோர் குழந்தை இயேசு சொரூபத்தை சுமந்து வந்தனர். அவர்களிடம் இருந்து குழந்தை இயேசு சொரூபத்தைப் பெற்றுக்கொண்ட பிரபாகரன் அடிகளார், புனிதப் படுத்தி தனது இரு கரங்களாலும் தூக்கிப் பிடித்து மண்டபத்தில் குழுமியிருந்தவர்களுக்கு காட்டி னார். பின்னர் பங்குத்தந்தை சூசை மாணிக்கம் அடிகளார் குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் இருக்கச் செய்து சாம்பிராணி புகை காட்டினார்.

பின்னர் பேராலய ஊழியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இறைவார்த்தை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவரும் குழந்தை இயேசு சொரூபத்தை முத்தமிட்டனர்.

தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கொங்கனி ஆகிய மொழிகளில் மன்றாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து சமாதானம் சொல்லிக் கொண்டனர்.

விழாவையொட்டி, பேராலய கோபுரங்கள் பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. வேளாங்கண்ணி நகரமே ஒளிவெள்ளத்தில் விழாக் கோலம் பூண்டிருந்தது.

விழாவையொட்டி நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 1 மணி நேரத்துக்கு ஒருமுறை பேராலயம், கீழ் கோவில், விண்மீன் ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது. விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x