Published : 16 Dec 2018 09:13 AM
Last Updated : 16 Dec 2018 09:13 AM

சென்னை மியூசிக் அகாடமியின் 92-வது ஆண்டு இசை விழா தொடங்கியது; அகாடமியின் கலைச் சேவை அபாரமானது, அசாத்தியமானது என்று பெப்ஸி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி புகழாரம்

சென்னை மியூசிக் அகாடமியின் 92-வது ஆண்டு இசை மாநாடு மற்றும் இசை விழாவை பெப்ஸி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். 90 வருட மியூசிக் அகாடமியின் கலைச் சேவை அசாத்தியமானது என்று அவர் புகழாரம் சூட்டினார்.

சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் 92-வது இசை மாநாடு மற்றும் இசை விழாவின் தொடக்க விழா, அகாடமியின் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில், அமெரிக்காவின் பெப்ஸி நிறுவ னத்தின் தலைவர் இந்திரா நூயி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

மியூசிக் அகாடமியின் 92-வது இசை விழாவை தொடங்கிவைப் பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வாகியிருக்கும் என் உடன் பிறவா சகோதரி அருணா சாய்ராமுக்கு என் வாழ்த்துகள். 90 ஆண்டுகளுக்கும் மேலாக மியூசிக் அகாடமி கலைச் சேவை செய்துவருவது என்பது சாமான்யமான விஷயம் அல்ல.

மியூசிக் அகாடமியில் டி.கே.பட்டம்மாள் 50 ஆண்டுகள் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார் என்பதே மிகப் பெரிய சாதனை. செம்மங்குடி சீனிவாசய்யர், எம்.எல்.வசந்த குமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட கர்னாடக இசைத் துறை ஜாம்பவான்கள் பலரும் இந்த மேடையில் நீண்டகாலம் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

நமது ஆழமான பாரம்பரிய விழுமியங்களை அடுத்த தலை முறையைச் சேர்ந்த கலைஞர் களுக்கு கொண்டு செல்வதோடு, இளம் கலைஞர்களை உருவாக்கு வதிலும் தன்னிகரற்ற சாதனையை 90 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவரும் மியூசிக் அகாடமி யின் பணி அபாரமானது, அசாத்தியமானது.

அதே சமயம், காலத்துக்கேற்ற மாற்றங்களையும் மியூசிக் அகாடமி வரவேற்க வேண்டும். அதையும் செவ்வனே செய்யும் திறன் மியூசிக் அகாடமி நிர்வாகத்துக்கு இருக்கிறது. உலகம் முழுவதும் நம் கற்பனைக்கே எட்டாத வகையில் அதிவேகமான டிஜிட்டல் புரட்சி நடந்து வருகிறது. அதையும் கருத்தில் கொண்டே மியூசிக் அகாடமி இனிவரும் காலங்களில் தன் செயல்பாடுகளை திட்டமிடும் என்ற நம்பிக்கை பரிபூரணமாக இருக்கிறது.

இவ்வாறு இந்திரா நூயி கூறினார்.

முன்னதாக, மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி தனது வரவேற்புரையில், சென்னையில் படித்து வளர்ந்த இந்திரா நூயி, பெப்ஸி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று செய்த சாதனைகளை வாழ்த்திப் பேசினார். மியூசிக் அகாடமியின் விருதுக ளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு தனது பாராட் டுகளை தெரிவித்துக்கொண்டார். இயற்கைப் பேரிடர்களால் ஒன்றி ரண்டு ஆண்டுகளாக மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சிகள் நடக்க வில்லை என்றவர், கர்னாடக இசைத் துறையில் எழுந்த ‘மீ டூ’ பிரச்சினை பற்றியும் அதற்கு மியூசிக் அகாடமி எடுத்த நடவடிக்கை குறித்தும் நினைவுகூர்ந்தார்.

ஏற்புரை வழங்கிய அருணா சாய்ராம், ‘‘சங்கீத கலாநிதி விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி தேர்வுக் குழுவுக்கு நன்றி. நான் இந்த மேடையில் நிற்பதற்கு, என் குரு டி.பிருந்தாம்மாவின் ஆசிர்வாதம் தான் காரணம். அதன்பின் எஸ்.ராமச்சந்திரன், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, ஏ.எஸ்.மணி, கே.எஸ்.நாராயணசுவாமி, டி.ஆர்.சுப்பிரமணியம், நாதஸ்வர வித்வான்களான செம்பனார் கோவில் சகோதரர்களில் ஒருவரான எஸ்ஆர்டி வைத்தியநாதன் ஆகி யோரிடம் இசையின் பல்வேறு நுணுக்கங்களை கற்றேன். எனக்கு பக்கவாத்தியம் வாசித்த கலைஞர் களுக்கும், ரசிகர்களுக்கும், என் குடும்பத்தினருக்கும் பலப்பல நன்றிகள்’’ என்றார்.

விழாவில் பங்கேற்ற ‘சங்கீத கலாநிதி’ சஞ்சய் சுப்பிரமணியன், சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருணா சாய்ராமின் பெயரை முன்மொழிய, அதை ‘சங்கீத கலாநிதி’ ஏ.கன்யாகுமாரி வழிமொழிந்தார். அதைத் தொடர்ந்து, அருணா சாய்ராமுக்கு ‘தி இந்து’ வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி’ அறக்கொடை விருதை இந்திரா நூயி வழங்கினார்.

மியூசிக் அகாடமியின் ஆண்டு மலரை இந்திரா நூயி வெளியிட, முதல் பிரதியை அருணா சாய்ராம் பெற்றுக்கொண்டார். மியூசிக் அகாடமி செயலாளர் வி.ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x