Published : 11 Dec 2018 02:01 PM
Last Updated : 11 Dec 2018 02:01 PM

நாடெங்கும் மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுகிறது: 5 மாநிலத் தேர்தல் முடிவு குறித்து வைகோ கருத்து

தற்போது மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. 2019-ல் மாநிலக் கட்சிகளும் காங்கிரஸும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை அண்ணாநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ  கூறியதாவது:

“மிசோரம் மாநிலத்தில் அங்குள்ள மாநிலக் கட்சி பாஜக கிடையாது. சத்தீஸ்கரிலும், மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பாஜக ஆட்சி இருந்தது. சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்துவிட்டது.

மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் சரிக்குச் சமமாக வருகிறது என்றால் காங்கிரஸ் வென்று பாஜக தோற்றதாகத்தான் அர்த்தம். ஆகவே நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நாடெங்கும் ஒரு அலை வீசுகிறது. 2019-ம் ஆண்டு மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரஸும் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகிறது.

நடக்கின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றப் போகிறது. அப்படி நிறைவேற்றப்பட்டால் இந்தியாவிலேயே பெரும் பாதிப்புக்குள்ளாகும் மாநில தமிழகமாகத்தான் இருக்கும். அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்குள் இருக்கும் நதிகள், அணைகள் குறித்து சகல முடிவையும் எடுத்துக்கொள்ளலாம் என்பது அந்த மசோதா.

மன்மோகன்சிங் காலத்திலே கொண்டுவர முயன்றார்கள். கடுமையாக எதிர்த்தோம். இவ்வாறு செய்தால் அந்தந்த மாநில அரசில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மாநில அரசுக்குச் சொந்தம் என்று சோவியத் யூனியன்போல் இந்தியா பல துண்டுகளாகப் பிரியும் என்று சொன்னேன். அந்த முயற்சியை மன்மோகன் சிங் கைவிட்டார்.

இன்று அதே ஆயுதத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வராது. கர்நாடகம் பேரழிவைச் செய்ய மேகேதாட்டு அணையைக்கட்ட பாஜக தான் அனைத்து உதவிகளையும் செய்கிறது.

தமிழகத்தைப் பாழாக்க வேண்டும், டெல்டாவை நாசமாக்கி பஞ்சப் பிரதேசமாக மாற்ற வேண்டும், தமிழகத்தில் உள்ள இன, மொழி உணர்வை அழிக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறார்கள். இந்துத்துவ கூட்டம் உள்ளே நுழைய முடியவில்லை என்பதால் இத்தனையையும் செய்கிறார்கள்.”

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x