Published : 03 Dec 2018 04:14 PM
Last Updated : 03 Dec 2018 04:14 PM

இன்று மாற்றுத் திறனாளிகள் தினம்: மாவட்டந்தோறும் தொழிற்பயிற்சி மையம் வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாவட்டந்தோறும் தொழிற் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை களை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் டிச.3-ம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அறிவியல் வளர்ச்சி, காலமாற்றம் போன்றவற்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவு மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ள நிலையில், தங்களின் நிலை மட்டும் இன்னும் கவலைக்குரியதாகவே இருப்பதாக வேதனைப்படு கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கச் செயலாளர் மாரிக்கண்ணன் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட் டுக்கு அரசு ஏராளமான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. ஆனால், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை யாரும் கண்காணிப்ப தில்லை. எங்களுக்கான வசதிகளை யும் செய்து கொடுப்பதில்லை.

மாற்றுத்திறனாளிகளால் படிக்கட்டு களில் ஏறி நடந்து செல்ல முடியாது என்பதால் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசுக் கட்டிடங்களில் இதை ஓரளவுக்கு செயல்படுத்தியுள்ளனர். ஆனால், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் இதுவரை இந்த வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. தனியார் கட்டிடங்களிலும் சாய்வுதளம் அவசியம் என்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை வேண்டும். மேலும், அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்குவதற்கான வசதிகளையும் செய்துதர வேண்டும்.

சில நேரங்களில் சக்கர நாற்காலிகளை பேருந்துகளில் ஏற்ற மறுக்கின்றனர். கட்டணச் சலுகை வழங்குவதிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுதொடர்பாக பேருந்து நடத்து நர்களுக்கு, மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து கழக அலுவலர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

தனியார் மற்றும் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் போதுமானதாக இல்லை. ஒவ்வொரு மாற்றுத் திறனாளியின் திறமைக்கேற்ப, அவர்களுக்கு ஏதேனும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசு முன்வர வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி மையம் அமைத்து, அவர்களுக்கு தொழில் கல்வி பயிற்றுவித்தால் பேருதவியாக இருக்கும். மாற்றுத்திறனாளிகள் ஓரளவுக்காவது வருமானம் ஈட்டி, குடும்பத்தை பாதுகாக்க வழி கிடைக்கும்.

மேலைநாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னு ரிமை அளித்து அரசு வேலை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனா ளியால் பணிக்குச் செல்ல முடியாத நிலை இருந்தால், அவரது வீட்டில் வேறு ஒருவருக்கு அந்த வேலையை அளித்து குடும்பத்தின் வருமானத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் வழிவகை செய்து கொடுக்கின்றனர். அதுபோல, இந்தியாவிலும் செயல்படுத்தினால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் பெரிய மாற்றம் நிகழும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x