Published : 13 Dec 2018 05:45 PM
Last Updated : 13 Dec 2018 05:45 PM

மயிலாப்பூர் கோயில் சிலைகள் மாயமான விவகாரம்: இணை ஆணையர் திருமகளைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பான வழக்கில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், கடந்த 2004-ம் ஆண்டு  திருப்பணி நடந்த போது, புன்னைவனநாதர், ராகு, கேது ஆகிய மூன்று சிலைகள் மாயமாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணையை நடத்தி வந்தனர்.

சம்பவம் நடந்த 2004-ம் ஆண்டில் அறநிலையத் துறை இணை ஆணையராக  இருந்தவரும், தற்போது கூடுதல் ஆணையராக உள்ள திருமகள் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் தொடர்பான ஆவணங்கள் முறையாக இல்லாததாலும், அவர் அளித்த தகவல்கள் திருப்திகரமானதாக இல்லை என்பதாலும், சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் தான் கைது செய்யப்படலாம் எனக் கருதி அறநிலையத்துறை கூடுதல்  ஆணையர் திருமகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி மதன் லோக்கூர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.  முன் ஜாமீன் மனுவில் தீர்ப்பளித்த நீதிபதிகள், திருமகளைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தனர்.

மேலும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என திருமகளுக்கு நிபந்தனை விதித்ததோடு, திருமகளின் மனு தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x