Last Updated : 27 Sep, 2014 10:51 AM

 

Published : 27 Sep 2014 10:51 AM
Last Updated : 27 Sep 2014 10:51 AM

சீனப் பட்டாசுகள் இறக்குமதியால் சிவகாசியில் பட்டாசு விற்பனை கடும் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க சுங்கத்துறைக்கு கோரிக்கை

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளால், சிவகாசியில் இந்த ஆண்டுக்கான தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சுங்கத் துறை அதிகாரி கள் தீவிர சோதனை நடத்தி அவற்றை தடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு தொழிலாளர்களின் கோரிக் கையாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் இந்தத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் சமீபகாலமாக சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுதொடர்பாக சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு தொழில் தொழிலாளர்கள் சங்கத் தின் தலைவர் நா.இராசா ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

‘குட்டி ஜப்பான்’ என்று அழைக் கப்படும் சிவகாசியில் 840-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற் சாலைகள் உள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். நாடு முழுவதும் இத்தொழிலை நம்பி 85 லட்சம் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர். உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்தப் பட்டாசு களில், சிவகாசியில் உற்பத்தி செய் யப்படும் பட்டாசுகள் 2 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளால் உள்நாட்டில் உள்ள பட்டாசு தொழில் பாதிப்படைந் துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு முதன் முதலில், சீனாவில் இருந்து இந்தியா வுக்கு பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டன. தொடக்கத்தில் குறைந்த அளவில் இருந்த இந்த பட்டாசு இறக்குமதி, படிப்படியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இரண்டாயிரம் கண்டெய்னர்கள் அளவுக்கு சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. வியாபாரிகள் பலர் இவற்றை பதுக்கி வைத்து, தீபாவளிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனால் சிவகாசி பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவ ளிக்கான ஆர்டர்கள் குறைந்துள் ளது. ஒவ்வோர் ஆண்டும் சிவகாசி யின் ஒட்டுமொத்த பட்டாசு உற்பத்தி யில் 90 சதவீதம் ஆர்டர் கிடைத்து வந்த இடத்தில் இந்த ஆண்டு வெறும் 35 சதவீதம் மட்டுமே ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

சீனப் பட்டாசுகளில் பயன்படுத் தப்படும் ரசாயனங்கள் சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஆபத்தை விளை விக்கக் கூடியவை. மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியது. மேலும், அதில் உள்ள மருந்தை பிரித்தெடுத்து சக்திவாய்ந்த வெடிகுண்டைக் கூட தயாரிக்கலாம். இந்தப் பட்டாசுகள் கண்டெய்னர்களில் கள்ளத்தனமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இப்பட்டாசுகள் எவ்வித இறக்குமதி வரியும் செலுத்தாமல் இறக்குமதி செய்யப்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. சுங்கத் துறை அதிகாரிகள் மனது வைத்தால் இவற்றை எளிதில் கண்டுபிடித்து தடுக்க முடியும். அவர்கள் சீனப் பட்டாசுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜா கூறினார்.

இதுகுறித்து, சுங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது கண்டெய்னர்களை பரிசோதனை செய்வதற்காக சென்னை துறைமுகத்தில் நவீன ஸ்கேனர் கருவி நிறுவப்பட்டுள்ளது. எனவே, இனி சென்னை துறை முகம் வாயிலாக சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய முடியாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x