Published : 13 Dec 2018 02:10 PM
Last Updated : 13 Dec 2018 02:10 PM

தினகரனைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

டிடிவி தினகரனைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையலாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார்.

மேகேதாட்டு விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு எப்படி உள்ளது?

ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நேற்றைக்கு முன்தினம் நீதிமன்றத்திலே 4 வாரத்திற்குள் மத்திய நீர்வள ஆணையமும், கர்நாடக அரசும் உரிய அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கின்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியதாக கர்நாடக அமைச்சர் மீதும், அவருடைய அதிகாரிகள் மீதும், நீர்வள குழும அதிகாரிகள் மீதும் அவமதிப்பு வழக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்திருக்கிறது.

அமமுகவைப் பொறுத்தவரைக்கும், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்திற்கு வர அழைப்பு விடுத்திருந்தீர்கள், ஆனால், ஒரு சிலர் வேறு கட்சிக்கு போய்க் கொண்டிருக்கின்றார்களே?

அது அவர்களுடைய விருப்பம். அழைக்க வேண்டியது எங்களுடைய கடமை. பிரிந்து சென்ற தொண்டர்கள் அனைவரும் எங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டுமென்று நானும், ஒருங்கிணைப்பாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். பல பேர் இணைந்திருக்கின்றார்கள். அமமுக கட்சியின் ராமநாதபுர அமைப்புச் செயலாளர் என் தலைமையில் நேற்று கட்சியில் சேர்ந்திருக்கின்றார்.

இந்த அழைப்பை தினகரனுக்கும் எடுத்துக் கொள்ளலாமா?

அவரைத் தவிர வேறு யார் வந்தாலும் இணைந்து கொள்ளலாம்.

சிலை கடத்தல் வழக்கில் நீங்கள் மேல்முறையீடு சென்றதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறதே?

நான் இன்னும் அதைப் பார்க்கவில்லை. எங்களுடைய வழக்கறிஞர்களிடம் முழு விவரமும் கேட்ட பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும்.

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதமாக செய்துகொண்டிருக்கிறீர்கள், இருந்தபோதும் குறைபாடுகள் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?

குறை சொல்வது எளிது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு செய்து கொண்டு இருக்கிறது. 2 லட்சத்து 21 மின்கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 1,600 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்திருக்கின்றன, 196 துணை மின்நிலையங்கள் பழுதடைந்து விட்டன.  அதையெல்லாம் இன்றைக்குச் சரிசெய்து கொண்டிருக்கின்றோம். பெரும்பாலான இடங்களில் சரிசெய்யப்பட்டு விட்டது.

ஒருசில கிராமங்களில் உள்ள வீடுகள்,  வயல்பகுதியில் இருக்கின்ற வீடுகள்,  தூரமாக இருக்கின்ற வீடுகளுக்கெல்லாம் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்இணைப்பு அளிப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரணத் தொகையைப் பொறுத்தவரைக்கும், உரியவர்களுக்கு உரிய இழப்பீடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  அதோடு, 'கஜா' புயலினால் வீடு இழந்தவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தருவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x