

தருமபுரி நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் மலர் சந்தையில் விறுவிறுப்பான வர்த்தகம் நடந்தது.
தருமபுரி/ஓசூர்: தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி, ஓசூர் மலர் சந்தைகளில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
தருமபுரி நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் மலர் சந்தை செயல்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று மலர்களின் விலை உயர்ந்தது. குறிப்பாக, குண்டு மல்லி கிலோ ரூ.1,100-க்கு விற்பனையானது. மற்ற மலர்களின் விலை விவரம் (கிலோவுக்கு): அரளி ரூ.100, சம்பங்கி ரூ.100, ரோஜா ரூ.600, கனகாம்பரம் ரூ.1,200, காக்கட்டான் ரூ.600, சாதி மல்லி ரூ.700, சாமந்தி ரூ.100 என விற்பனையானது.
ஓசூர் மலர் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.60-க்கு விற்பனையான சாமந்தி நேற்று ரூ.200-க்கு விற்பனையானது. செண்டுமல்லி ரூ.15-ல் இருந்து ரூ.60 ஆகவும், சம்பங்கி ரூ.60-ல் இருந்து ரூ.120 ஆகவும், ரோஜா ரூ.80-ல் இருந்து ரூ.200 ஆகவும் விலை உயர்ந்தன. மேலும், பன்னீர் இலை ரூ.160, கனகாம்பரம் ரூ.600-ல் இருந்து ரூ.1,200, குண்டு மல்லி ரூ.500-ல் இருந்து ரூ.1,000, முல்லை ரூ.400-ல் இருந்து ரூ.800, அரளி ரூ.120-ல் இருந்து ரூ.300 என விற்பனையானது.