Published : 31 Dec 2018 09:11 PM
Last Updated : 31 Dec 2018 09:11 PM

புத்தாண்டு, பண்டிகைகளில் பைக் ரேஸ் போகும் சிறுவர்கள், இளைஞர்கள்; என்ன வகை மனநிலை?- ஒரு உளவியல் பார்வை

புத்தாண்டு மற்றும் பண்டிகை நாட்களில் சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதும், ரேஸ்போவதும், சாகசம் செய்வதற்கு உளவியல் ரீதியான காரணம் எதுவும் இருக்கிறதா?

புத்தாண்டு மற்றும் பண்டிகை விழாக்காலங்களில் இளைஞர்கள் சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதும் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி உயிரிழப்பது உடல் உறுப்புகளை இழப்பது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.

இதுகுறித்த உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

புத்தாண்டு நேரங்களில் பைக் ரேஸில் இளைஞர்கள், மாணவர்கள் ஈடுபட காரணம் என்ன? இதற்கு உளவியல் பின்னணி உள்ளதா?

இதுபோன்ற ரேஸ்களில், சாகசங்களில் ஈடுபடுபவர்கள் புதிதாக இன்றுதான் ஈடுபடுபவர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இவர்கள் ஏற்கெனவே பைக் ரேஸர்களாக இருப்பார்கள். புதிய ஒரு நபர் பைக்ரேஸை புத்தாண்டின்மூலம் கொண்டாட வேண்டும் என்பதல்ல.

இவர்கள் ஏற்கெனவே அதில் ஈடுபட்டு அந்த எண்ணத்தில் வாழ்பவர்கள். இது ஒரு கொண்டாட்ட மனப்பான்மை. சிலர் குடித்து கொண்டாடுவார்கள், சிலர் ஹோட்டலுக்குப்போய் பார்ட்டியில் அதிக நேரத்தை செலவழிப்பது, சாப்பிடுவது. குழுக்களைப்பார்த்தால் ரேஸ், பப், கிளப் போன்ற விஷயங்களில் ஆக்ரோஷமாக, மிகைப்படுத்தி, வரன்முறையில்லாமல் செயல்படுவார்கள்.

கடந்த ஆண்டு சாலைத்தடுப்பை இழுத்துக்கொண்டு சென்று சிக்கினார்கள் பாருங்கள் அதுபோன்ற ஒரு உந்துதல். அப்படி தோன்றுவதால் இளைஞர்கள் தற்காலிகமாக இதை செய்கிறார்கள்.

இதற்கு உடல் ரீதியான காரணம் உள்ளதா?

விடலைப் பருவத்தில் 16 வயதிலிருந்து உடலில் ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும். எதுவாக இருந்தாலும் புதிதாக செய்யவேண்டும்,  ரிஸ்க் எடுக்கவேண்டும் என்பது உடலியல் ரீதியான விஷயமும் கூட.   

பொதுவாக 30 வயதுக்கு மேல் ரேஸ் போன்ற சாலஞ்சான விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். காரணம் அடுத்த பொறுப்புகள் வேலை போன்றவைகள் இருக்கும். ஆனால் 16 லிருந்து 25 வயதுள்ளவர்கள் இந்த ஹார்மோன் தூண்டுதல் காரணமாகவும், உளவியல் ரீதியாக எதைவேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற (risk taking behavior) மன நிலை. மோட்டார் சைக்கிளில் வேகமாகபோய் வேகமாக வருவதில் ஒரு கிக் இருக்கு, அதன் காரணமாக ஆபத்து நிறைந்திருந்தாலும் அதை சந்திக்கக்கூடிய மனநிலை இருக்கும்.

அதனால்தான் போதையுடன் வாகனங்களை ஓட்டுவது, போதைப்பொருளை (drug) எடுத்துக்கொண்டு ஓட்டுவது நடக்கிறது. இதில் ஆபத்தான விஷயம் சமீப காலமாக கஞ்சா புகைத்துவிட்டு வாகனத்தை ஓட்டுகிறார்கள். மதுவைவிட மோசமானது கஞ்சா? ஆனால் அது போலீஸார் சோதனையில் தெரியாது. இளம் வயதினர் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் கஞ்சா போன்ற போதை வஸ்துக்களைத்தான் உபயோகிக்கிறார்கள்.

இதற்கு தடுப்பு என்ன?

இதை நிறுத்த வேண்டும் என்றால் முதலில் தேவை தனி மனித ஒழுக்கம். போலீஸாருக்கும் இதில் பொறுப்பு உள்ளது பள்ளி, கல்லூரி அளவில் ஒரு விழிப்புணர்வு அவ்வப்போது செய்தால், எதைவேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற (risk taking behaviour) மன நிலையை குறைக்க, நிறுத்த வாய்ப்புள்ளது.

ரேஸர் கலாச்சாரம் நமது கலாச்சாரம் அல்ல. அது அந்நிய நாட்டு கலாச்சாரம். யூடியூபில், ஆன்லைன் கேமில் பார்த்தீர்கள் என்றால் பக்கத்தில் உரசியபடி சென்று வென்றால் பாயிண்ட் அதிகம். இன்னொரு வண்டியை ஒட்டாமல் போனால் பாயிண்ட்ஸ் கம்மி.

யூடியூப், செயலியின் வேகத்தை இதுபோன்ற நிழல் சாகசங்களை நடைமுறையில் பொருத்தி யதார்த்தத்தை உணராமல் நடந்தால் விபத்தில் சிக்கி முற்றிலும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதில் ஒரு குழுவாக ஈடுபடுகிறார்கள்.. இவர்கள் எப்படி இணைகிறார்கள்?

கண்டிப்பாக தனியாக செய்ய மாட்டார்கள். இதை ‘ஒத்த கருத்துடைய மனநிலை கொண்டவர்கள்’ (like minded people) என்கிற வகையை சேர்ந்தவர்கள் என்போம். அதாவது நான் ரேஸர் என்றால் என்னை மாதிரி ரேஸர்களை தேர்வு செய்வேன். இவர்களிடம் பேசிப்பார்த்தால் அவர்கள் விபத்தில் சிக்கியதை பாசிட்டிவாக பார்க்கக்கூடிய மன நிலையில் உள்ளனர். உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதே பயமாக இல்லையா என்று கேட்டால் எத்தனை எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு பாருங்க என்று பெருமையாக பேசுவார்கள்.

கீழே சறுக்கி விழுவதைப்பற்றியெல்லாம் பற்றி பயப்படக்கூடாது, எவ்வளவி அடிபடுகிறதோ அது பெருமை என்கிறார்கள். அடிபடுவதையே பாசிட்டிவாக பார்க்கும் மன நிலை உள்ளது. இவர்கள் பெரும்பாலும் குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபட வாய்ப்புள்ளது.

இந்த சாகச மனதுக்கு பின்னால், குற்றச்செயல்களில் ஈடுபடும் மன நிலை இருக்குமா?

இன்று அதிகமாக செல்போன், செயின்பறிப்பு, பைக் திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் அவர்களது பின்னணியை ஆராய்ந்தால் அவர்கள் இதுபோன்ற ரேஸ், பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் இதிலேயே ரிஸ்க் எடுப்பவர்கள் அதிலும் ரிஸ்க் எடுப்பதை விரும்பி ஈடுபடுவார்கள்.

இதன் பின்னணியில் போதைப்பழக்கம் உள்ளதா?

ஆமாம் ஏற்கெனவே சொன்ன ரிஸ்க் எடுக்கும் அவர்களது மனநிலை காரணமாக டிரக் எடுக்க விரும்புவார்கள். புதுவிதமான போதைப்பழக்கத்தை பழக விரும்புவார்கள். பின்னர் அதை வாங்குவதற்கான பணத்தேவைக்காக குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். இதற்கு பின்னால் பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையும் உள்ளது. (Antisocial personality) சமுதாயத்தில் ஒத்துப்போகாத ஒரு மனநிலைக்கு ஆளாவார்கள்.

இதில் பெற்றோரின் பொறுப்பு எங்கே வருகிறது?

தனது பிள்ளைகள் ஒரு பொருளை கேட்கும்போது வாங்கித்தருவது. லைசென்ஸ் எடுக்கும் வயது வரும்முன்னரே அவர்கள் கேட்கும் அதிவேக பைக்குகளை வாங்கித்தருகிறோம். காரணம் அவனது பள்ளியில், கல்லூரியில் சக மாணவன் அந்த பைக்கை வைத்திருப்பான் அதனால் அதைக்கேட்டு அடம்பிடிக்கும்போது வாங்கித்தருகிறார்கள்.

பெற்றோராலும் ஒன்றும் செய்ய முடியாது. மூன்று நாள் சாப்பிடாமல் மகன் அடம் பிடிக்கும்போது வேறு வழியில்லாமல் வாங்கித்தருகிறார்கள். 

இதை எப்படி இளம் தலைமுறையினருக்கு புரிய வைப்பது?

இதுபோன்ற விடலைப்பருவத்தில் உள்ள சிறுவர்கள் அடம்பிடிக்கும்போது அதை கண்டுக்கொள்ளக்கூடாது. சாப்பிடாமல் அடம் பிடித்தாலும் பரவாயில்லை. அந்தப்பிரச்சினையை வகுப்பு ஆசிரியரிடமோ, கல்லூரி பேராசிரியரிடமோ சொல்லலாம். ஒருவேளை பெற்றோருக்கு அடங்காத பிள்ளைகள் மற்றவர்கள் பேச்சை கேட்கலாம். அல்லது அவனுக்கு பிடித்த மாமாவோ, சித்தப்பாவோ யாரிடமாவது சொல்லலாம்.

ஆனால் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்றால் என் பிள்ளையின் விஷயம், வீட்டு விஷயம் வெளியே தெரிவதா என்கிற மன நிலையில் கேட்டதை வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள்.

சில பெற்றோர் இளம் வயதில் நான் அனுபவிக்கவில்லை, என் பிள்ளை அனுபவிக்கட்டுமே என்று வாங்கித்தருகிறார்களே?

அதுவும் நடக்கிறது. இதற்கு காரணம் வீட்டுக்கு ஒரே பிள்ளையாக இருக்கு குழந்தைகளின் பெற்றோர் இதுபோன்ற மன நிலையில் மகன் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து பின்னர் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டதுண்டு. தன்னால் படிக்க முடியாத ஒருவர் தனது தகுதிக்கு மீறி ஒரு பள்ளியில் சேர்த்தார். ஆனால் அந்தப்பையன் படிப்பதை விட அந்தப்பள்ளியில் மற்ற மாணவர்கள் வாங்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக்கேட்டு அடம் பிடித்து அதை வாங்கிக்கொடுக்க முடியாமல் தந்தை கடும் மன உளைச்சலுக்கு ஆளான உதாரணம் உண்டு.

பெற்றோர் இதை எப்படி அணுக வேண்டும்?

தேவை, அவசியம் என்ன என்பது குறித்த வித்யாசத்தை பிள்ளைகளுக்கு புரியவைக்கவேண்டும். தாகமெடுத்தால் தண்ணீர் குடிப்பது அவசியம், கூல்ட்ரிங்ஸ் அநாவசியம் இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை உணரவைக்க வேண்டும். இந்த நேரத்தில் பைக் வேண்டுமா? வேண்டாமா? என்பதை உணரவைக்க வேண்டும்.

பெற்றோரின் வசதி, வீட்டு நிலையை யோசிக்க வைக்கவேண்டும். அப்படி செய்தால் கேட்பதற்கான வாய்ப்பு உண்டு. அப்படியும் கேட்காவிட்டால் உறவு, நட்புகள் மூலம் நிலைமையை விளக்க முயலலாம். அப்படியும் முடியாவிட்டால் கடைசி வாய்ப்பாக எங்களிடம் வரலாம்.

அடம் பிடிக்கும் தன்மை வளர்ப்பில்தானே வருகிறது?

இதை சகிப்புத்தன்மை (tolerance) என்று சொல்வோம். அதாவது ஒரு காலத்தில் நமது தந்தையால் இதை வாங்கித்தர முடியும், இதை அவரால் வாங்கித்தரமுடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மையின் அளவுகோல் என்ன தெரியுமா? அதிர்ச்சியடையாதீர்கள், சகிப்புத்தன்மையின் லெவல் பூஜ்ஜியம்.

பெற்றோரின் அலட்சியம் எங்கே இதில் உள்ளது?

குழந்தை கொஞ்சம் முகம் வாடினாலே அவன் முகம் வாடுகிறதே என்று கேட்பதை உடனடியாக வாங்கிக்கொடுப்பதில்தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. சாதாரணமாக ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்வதாக இருக்கட்டும், செல்போனாக இருக்கட்டும், ப்ளேஸ்டேஷன், வாட்சாக இருக்கட்டும், மோட்டார் சைக்கிளாக இருக்கட்டும் கேட்டதும் கிடைக்கும்போது அவர்களது சகிப்புத்தன்மை குறைகிறது. இதற்கு காரணம் கேட்டதும் கிடைத்துவிடும் என்கிற மனநிலையில் அவர்களை வளர்க்கக்கூடாது.

சகிப்புத்தன்மையின் அளவுகோலை நாம் எப்போது அதிகரிக்கிறோமோ அப்போதுதான் அவர்கள் சமுதாயத்தில் எதிர்கொண்டு வாழ முடியும். நீங்கள் அவர்களை கூர்ந்து கவனித்தால் எந்த இடத்திலும் நிலைத்து பணியாற்ற மாட்டார்கள்.

அவர்களே நம்மை மற்றவர்கள் இப்படித்தான் நடத்துவார்கள் என முடிவு செய்துக்கொள்வார்கள். இதற்கு காரணம் சிறுவயதில் அவர்களுக்கான சகிப்புத்தன்மை அளவை அதிகரிக்கும் வளர்ப்புமுறை இல்லாததுதான். அதை பெற்றோர் கட்டாயம் உணரவேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

 

 

 

 

 

 

 

   

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x