Last Updated : 22 Dec, 2018 07:38 PM

 

Published : 22 Dec 2018 07:38 PM
Last Updated : 22 Dec 2018 07:38 PM

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

தூத்துக்குடியில் கடந்த மே-யில் நடைபெற்ற வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடத்தபட்ட போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் 12 பேர்களின் தலை, மார்பில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளது.  இதில் பாதிப்பேருக்கு பின்புறத்திலிருந்து துப்பாக்கித் தோட்டா பாய்ந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

இருவர் தலையின் பக்கவாட்டில் தோட்டா பாய்ந்து இறந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பார்வைக்கு வந்த பல அரசு மருத்துவமனைகளின் தடய மருத்துவ நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது முன்பு வெளியாகாத தகவல் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

 

இதில் பலியான இளம் வயது, அதாவது 17 வயது ஜெ.ஸ்னோலினின் தலையின் பின்புறமாகப் பாய்ந்த குண்டு அவர் வாய்வழியாக வெளியே வந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.

 

இது தொடர்பாக ஸ்னோலின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த தடய அறிவியல் மருத்துவ நிபுணர்கள், “கழுத்தின் பின்பகுதியில் தோட்டா பாய்ந்ததில் இருதய-நுரையீரல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இறந்ததாகத் தெரிகிறது” என்று அறிக்கையில் எழுதியுள்ளனர்.

 

பலியான ஸ்னோலின் குடும்பத்தினரை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளர்கள் சந்தித்த போது அவர்கள் இன்னும் ஸ்னோலினின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.  “நாங்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான்” என்று ஸ்னோலின் தாயார் தெரிவித்துள்ளார்.

 

குடிமைச்சமூக ஆர்பாட்டம் நிகழும்போது போலீசார் துப்பாக்கிகளைப் பயன்படுத்தலாம் என்று போலீஸ் விதிமுறைகள் கூறினாலும் அதிகாரிகள் கொலை செய்வதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று அதே விதிகள் கூறுகின்றன. தமிநாட்டுக்கான போலீஸாருக்கான வழிகாட்டு முறைகளில் குறி இடுப்புக்கு மிகவும் கீழ் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

 

ஐநா மனித உரிமைகள் ஆணைய நிபுணர்கள் பணிக்குழு மே மாதம் துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.  “போராட்டத் தன்மையின் அளவுக்கும் அதிகமான விகிதாச்சாரத்தில் அடக்குமுறையை போலீச் கையாண்டது” என்று கண்டனம் தெரிவித்திருந்தது.

 

துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர், ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு போலீஸ் அதிகாரி மீதும் இன்னும் குற்றச்சாட்டுப் பதியப்படவில்லை.  துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக அரசு தெரிவித்த போது, “தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டியதானது” என்று தெரிவித்திருந்தது.

 

துப்பாக்கிச் சூட்டை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

மேலும் இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஜான்சி என்ற 40 வயதுப் பெண்மணியின் காதுகளின் ஊடாக தோட்டா ஊடுருவிச் சென்றது என்றும் 34 வயது மணிராஜன் என்பவரது நெற்றியில் தோட்டா பாய்ந்துள்ளது. நெற்றியின் வலது புறம் தோட்டா பாய்ந்ததால் மூளையில் காயம் ஏற்பட்டு அவர் இறந்தார் என்கிறது பிரேதப் பரிசோதனை அறிக்கை.

 

பலியானவர்களில் 50 வயதுகளைச் சேர்ந்த  ஒருவர்,  6 பேர் 40 வயதுகளில் உள்ளவர்கள். 3 பேர் 20 வயதுகளின் ஆரம்பத்தில் இருப்பவர்கள்.

 

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பலியான 13 பேர்களில் 11 பேர் குடும்பத்தினர் அல்லது நண்பர்களைச் சந்தித்துள்ளது. அதில் 10 பேர் எந்த விதமான சட்ட நடவடிக்கையையும் தாங்கள் எண்ணவில்லை என்று தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. ஒருவர் மட்டும் நீதி வேண்டும் என்று வழக்கறிஞரை நாடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் ராய்ட்டர்ஸ் பார்வைக்கு வந்த போது 3 செல்ஃப் லோடிங் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மொத்தம் 69 தோட்டாக்களில் 30 தோட்டாக்கள் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளிலிருந்து வெளிவந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர போலீஸார் .303 துப்பாக்கிகள்  மூலம் கூடுதலாக 4 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும்  0.410 துப்பாக்கிகள் மூலம் 12 ஷாட்கள் சுடப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.  இந்த வகை ரைஃபிள்கள் தொடர்ச்சியாகச் சுடமுடியக்கூடியது என்று கேரள போலீஸ் உயரதிகாரி ஜேகப் பன்னோஸ் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறிய போது இதைப் பயன்படுத்துவது தன்னிலே சட்டவிரோதமானது அல்ல, ஆனால் குறைந்தபட்ச போலீஸ் நடவடிக்கை என்ற கொள்கைக்கு எதிரானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x