Published : 01 Dec 2018 07:27 PM
Last Updated : 01 Dec 2018 07:27 PM

கூடா நட்புக்கு இடையூறு: கணவனை ஆண் நண்பர் மூலம் கொன்று புதைத்த மனைவி: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்

தனது தவறான தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்ததால் தனது ஆண் நண்பர் மூலம் கணவரை கடத்திக் கொலை செய்த மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு பின் சிக்கினார். வழக்கில் கணவரைக் கொன்று புதைத்த இடத்தில் சில எலும்புக்கூடுகளைக் கைப்பற்றிய போலீஸார் மனைவி உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் பள்ளத்துப்பட்டி பகுதியில் சத்திரம் புளியங்குளம் கிராமத்தில் வசித்தவர் இளையராஜா (35). வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது சகோதரி  மகள் முத்துவை  கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் மணந்தார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இளையராஜா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டிலிருந்து வந்து இரண்டு மாதம் தங்கிச் செல்வார். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 2016-ம் ஆண்டு ஊருக்கு வந்த இளையராஜா திடீரென காணாமல் போனார்.

தனது கணவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கண்ணீரும் கம்பலையுமாக மனைவி முத்து காரியாப்பட்டி போலீஸில் புகார் அளித்தார். கணவர் காணாமல் போய் 20 நாட்கள் கழித்து அவர் போலீஸில் புகார் அளித்தது போலீஸுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனாலும் முத்துவின் கண்ணீர் போலீஸாரை நம்ப வைத்தது. முத்துவின் புகாரை ஏற்று அவரது கணவரை பல இடங்களிலும் போலீஸார் தேடினர். இளையராஜாவின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விவரம் கேட்டனர். ஆனாலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இளையராஜா என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போலீஸாரும் அடுத்த பணியை பார்க்கத் தொடங்கினர். இந்நிலையில் ஓராண்டு ஓடி அடுத்த ஆண்டும் வந்தது. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன் இளையராஜாவின் மனைவி முத்து ஸ்டேஷனுக்கு வந்து, ''என் கணவர் நிலை என்ன ஆனது, அவர் காணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது, அப்படியே கிடப்பில் போட்டுவிட்டீர்கள்,  நான் மனித உரிமை ஆணையம் போகப்போகிறேன், கோர்ட்டுக்குப் போகிறேன்'' என்று கண்ணைக் கசக்கியுள்ளார்.

போலீஸாருக்கு தர்மசங்கடமாகப் போக, ''நீங்க போங்க எப்படியும் மேலதிகாரிகளிடம் பேசி வேறு எதுவும் செய்யமுடியுமா என்று பார்க்கிறோம்'' என்று சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

வழக்கை தூசி தட்டிய போலீஸாருக்கு வேறொரு சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்த இளையராஜாவின் மனைவி முத்து மணிகண்டன் என்பவரின் கால் டாக்ஸியில் அமர்ந்து செல்வதை வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸார் பார்த்துள்ளனர்.

ஏற்கெனவே முத்து மீது சந்தேகத்திலிருந்த போலீஸார் அவரது செல்போன் பேச்சுகளைக் கண்காணித்தனர். அப்போது அவர்களுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இளையராஜாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கால் டாக்ஸி ஓட்டுநர் மணிகண்டனுடன் போனில் அதிக நேரத்தைச் செலவிடுவதைக் கண்டுபிடித்தனர். மணிகண்டனுடன் முத்துவுக்கு கூடா நட்பு இருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மணிகண்டனைத் தூக்கிய போலீஸார் இளையராஜாவின் மனைவியுடன் உனக்கு என்ன தொடர்பு இளையராஜா எங்கே, அவரை என்ன செய்தாய் என்று போலீஸ் பாணியில் விசாரிக்க, இளையராஜா உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

''எனக்கு சொந்த ஊர் கம்பாளி. அங்கிருந்து கால் டாக்ஸி ஓட்டும் வேலைக்கு வருவது சிரமமாக இருந்ததால் காரியப்பட்டியில் இளையராஜா வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்தேன். இளையராஜா துபாயில் இருந்ததால் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே ஊரில் இருப்பார்.

இதில் ஆரம்பத்தில் லேசாகப் பார்ப்பது புன்னகைப்பது என்று முத்துவுடன் ஆரம்பித்த பழக்கம் செல்போன் நம்பரைப் பரிமாறிக்கொண்டு வளர்ந்தது. பின்னர் அடிக்கடி பேசி, அதுவே கூடா நட்பாக மாறியது. எனது காரில் இருவரும் ஊர் சுற்றினோம். இந்தத் தகவல் அரசல்புரசலாக இளையராஜா காதுக்குச் செல்ல அவர் ஊர் திரும்பினார்.

முத்துவை அழைத்துக் கண்டித்தார். கடுமையாகத் திட்டிய அவர் இனி வெளியூர் செல்லப் போவதில்லை என முடிவெடுத்தார். இது எங்கள் பழக்கத்துக்கு இடையூறாக இருந்ததால் அவரைக் கொன்றால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என முடிவு கட்டினோம்.

இதற்கு என் நண்பர்கள் முத்துக்கருப்பன், கருப்பசாமி உடன் சேர்ந்துகொண்டு கொலைத்திட்டம் வகுத்தோம். செப்டம்பர் 15-ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் வந்த இளையராஜாவை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றோம். பின்னர் எனது நண்பர்கள் துணையுடன் இளையராஜாவின் உடலை எனது சொந்த ஊரான கம்பாளி கிராமத்திற்கு கொண்டு சென்று காட்டுப்பகுதியில் புதைத்தோம்.

இதற்கு இன்னொரு நண்பர் திருக்கல்யாணி என்பவர் உதவினார். அவர் புதைத்த உடலை நாய், நரிகள் தோண்டாமல் இருக்க மருந்து கொடுத்து உதவினார். பின்னர் நாங்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டோம். இரண்டு ஆண்டுகள் ஜாலியாக ஓடியது. முத்து சும்மா இருக்காமல் ஸ்டேஷனுக்கு வந்து கணவர் பற்றி கேட்டதிலிருந்து பிரச்சினை ஆரம்பமானதை நானும் கண்டுபிடித்தேன்.

போலீஸார் ரகசியமாக எங்களைக் கண்காணிப்பதை தெரிந்து முத்து என்னிடம் சொல்ல, மீண்டும் நான் காட்டுப்பகுதிக்குச் சென்று ஒரே தடயமான இளையராஜாவின் உடலைத் தோண்டி எலும்புக்கூட்டை எடுத்து வைகை ஆற்றில் போட்டுவிட்டேன், ஆனாலும் செல்போன் பேச்சு எங்களைச் சிக்க வைத்துவிட்டது'' என மணிகண்டன் ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து முத்துவைப் பிடறியில் தட்டி கைது செய்த போலீஸார் அவரிடமும் வாக்குமூலம் பெற்றனர்.

மணிகண்டனின் கார் கைப்பற்றப்பட்டது. அவரது நண்பர்கள் முத்துக்கருப்பன், கருப்பசாமி, திருக்கல்யாணி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். வைகை ஆற்றில் எலும்புகளைப் புதைத்தேன் என்று மணிகண்டன் கூறினாலும் புதைத்த இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு தோண்டிப் பார்த்தபோது மிச்சசொச்ச எலும்புத்துண்டுகள், முடிக்கற்றைகள் கிடைத்தன. அனைத்தையும் வீடியோ எடுத்த போலீஸார் தடயங்களைச் சேகரித்தனர்.

ஆற்றில் போட்ட எலும்புத்துண்டுகளையும் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள போலீஸார், கிடைத்த எலும்புத்துண்டுகளை டிஎன்ஏ பரிசோதனை மூலம் இளையராஜாவுடையது என்று நிரூபித்தால் வழக்கை எளிதாக முடித்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

கணவனைக் கொன்று புதைத்து அனைத்து உண்மைகளையும் அதனுடன் புதைத்து அழுத்தமாக இருந்த முத்துவை உறவினர்கள் திட்டித் தீர்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x