Published : 28 Dec 2018 02:18 PM
Last Updated : 28 Dec 2018 02:18 PM

மக்களிடம் செல்வோம் சொல்வோம் வெல்வோம்!: ஜனவரி 8 முதல் ஊராட்சி சபைக் கூட்டம்; ஸ்டாலின் அறிவிப்பு

'மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்' என்ற முப்பெரும் முழக்கங்களை முன்வைத்து அனைத்து ஊராட்சிகளிலும் திமுகவின் சார்பில் 2019 ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "நீட் தேர்வில் தொடங்கி, நீர் ஆதாரம் - நிதி ஆதாரம் எல்லாவற்றிலும் வஞ்சகம் செய்கிறது பாசிச பாஜக அரசு. இயற்கையின் பெருஞ்சீற்றமான 'கஜா' புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்குக்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரமில்லை. அதற்குரிய நிவாரண நிதியை அளிப்பதில்கூட வேகமில்லை. 'கஜா' மட்டுமா?  இதற்கு முன் தமிழ்நாட்டைத் தாக்கிய 'வர்தா' புயல், 'ஒக்கி' புயல்நேரங்களிலும் மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு எப்படி இருந்தது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் அறிவார்கள். தாமரை மலர வாய்ப்பில்லாத மாநிலம் சேற்றில் அமிழ்ந்து போகட்டும் என்பதுபோல பாசிச பாஜக ஆட்சி வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

அதனைத் தட்டிக் கேட்க வேண்டிய மாநில ஆட்சியாளர்கள் டெல்லி நோக்கி மண்டியிட்டு தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக அரசு காலால் இடும் கட்டளைகளைத் தலையில் சுமந்து நிறைவேற்றும் கொத்தடிமைகள் கூட்டமாக இருக்கிறது மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு. எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் என்கிற கொள்ளை ஒன்றே லட்சியமாகக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், மிச்சமிருக்கும் அதிகார நாட்கள் அனைத்தையும் வருமான நாட்களாக மாற்றுவதைத் தவிர வேறெந்த வேலையையும் செய்வதில்லை.முதல்வரில் தொடங்கி அத்தனை அமைச்சர்களும் ஊழல் மலிந்த உளுத்தர்களாக இருக்கிறார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்கள் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நிவாரணம் கேட்டுத் தவிக்கிறார்கள். போராட்டங்களும், சாலை மறியல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய அரசாங்கம், இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கிறது. வாழ்வுரிமைக்காகப் போராடுவோரை வலிய இழுத்துச் சென்று கைது செய்து சிறையில்அடைக்கும் கொடூரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்டு போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்டு - குறி பார்த்து நடைபெற்ற கொலை வெறித் தாக்குதல் என்பதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகள் புட்டுப் புட்டு வைக்கின்றன. தலையை நோக்கி குறிவைத்து, மண்டையோட்டை சிதறடித்து, நெஞ்சுப் பகுதியில் தோட்டாவால் துளைத்து, பின்னங்கழுத்தைப் பிளக்கச்செய்து என பல வகையிலும் குறிவைத்து மக்களை நரவேட்டை ஆடியிருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு.

எந்த மக்களால் ஆட்சியில் உட்கார வைக்கப்பட்டார்களோ அந்த மக்களையே வேட்டையாடும் கொடூரத்தனத்தை வீழ்த்திட - அதனை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் சேடிஸ்ட் தனமான மத்திய அரசின் மறைமுக சதிகளை அம்பலப்படுத்திட மக்களிடம் செல்கிறது திமுக. நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிதான் இது. அதற்காக ஊராட்சிகள் தோறும் செல்கிறோம். ஏனென்றால், இன்னமும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வக்கற்ற அரசாக இருக்கிறது அதிமுக அரசு.

ஜனநாயகத்தின் ஆணிவேர் என்பவை உள்ளாட்சி அமைப்புகள். அவை வலிமையாக இருந்தால்தான், மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும். அந்த அதிகாரத்தை வழங்க மறுக்கும் அதிமுக ஆட்சியாளர்கள், மாநிலத்திற்குரிய அதிகாரத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்து வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கையால் மதவெறி நெருப்புக்கு எண்ணெய் வார்த்து, இன்னொரு கையால் மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசோ, தமிழ்நாட்டு ஆட்சியாளர்களைத் தங்களின்அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே ஜனநாயகத்தை முடக்கிப் போடுகின்ற கொடுஞ்செயல். இவற்றிலிருந்து நாடும் - நாமும் மீள்வதற்கான தொடக்க நாள்தான், 2019 ஜனவரி 8.

'மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்' என்ற முப்பெரும் முழக்கங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் திமுகவின் சார்பில் 2019 ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கருத்துகளைப் பரப்புவது வழக்கம். திமுகவின் பொதுக்கூட்டங்கள், மாலை நேரப் பல்கலைக்கழகங்கள் எனப் பெயர் பெற்றவை. அத்தகைய பொதுக்கூட்டங்களுக்கு திமுக தொண்டர்கள், தோழமைக் கட்சியினர், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் திரண்டு வருவார்கள். எனினும், பொதுமக்கள் அந்தக் கருத்துகளைக் கேட்க வேண்டுமென்றால், அவர்களைப் பொதுக்கூட்டத்திற்கு வரவழைப்பதை விடவும் அவர்களை நோக்கி தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம், வீடுவீடாக சென்று துண்டறிக்கைகள் வழங்குவது போன்ற வியூகங்களே மிகுந்த பலன் தரக்கூடியவை. மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குபவை. அந்த அடிப்படையில்தான், ஊராட்சிகள் தோறும் மக்கள் பங்கேற்புடன் கூட்டம் நடத்துகிறது திமுக.

தலைவர் கருணாநிதி வாழ்ந்த மண் - வளர்ந்த மண் - அவர் நின்ற தொகுதி - மகத்தான முறையிலே வென்ற தொகுதி என அத்தனை சிறப்புகளும் கொண்ட திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி 8 ஆம் நாளன்று உங்களில் ஒருவனான நான், ஊராட்சி சபைக்கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறேன். அதே நாளில், திமுக பொருளாளர் துரைமுருகன் பெரியார் பிறந்தபெருமைக்குரிய ஈரோடு மாவட்டத்திலும், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு அண்ணா பிறந்த திருவிடமான காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள்.

மூன்று மாவட்டங்களைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களிலும் தலைமைக் கழகத்தின் சார்பில் வகுத்துக்கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தின் அடிப்படையில் ஊராட்சியின் பெயர், அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தலைமைக்கழகப் பிரதிநிதிகளின் விவரம், தேதி, நேரம் அனைத்தும் அடங்கிய அறிவிப்பினை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் வெளியிட உள்ளார்கள்.

அதனடிப்படையில் உள்ளாட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இளைஞர்கள், பெண்கள், இன்னல்படும் மக்கள்அனைவரின் பங்கேற்பும் நிறைந்ததாக இந்த ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.  

மாவட்ட திமுக செயலாளர்கள் தங்களின் மாவட்ட -ஒன்றிய - ஊராட்சி நிர்வாகிகளை அழைத்து ஜனவரி 8, 2019-க்கு முன்பாககூட்டம் நடத்தி, ஊராட்சிப் பயணத்தின் நோக்கங்களையும் செயல்முறைகளையும் விளக்கிட வேண்டும். அத்துடன், பேச்சாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை தொடர்பான பட்டியலையும் அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

ஒன்றியச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் தமது ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டம் செவ்வனே நடைபெற உதவி செய்வதோடு, கூட்டம் குறித்த தகவல்களை மாவட்டத் தலைமைக்கு அனுப்பிட வேண்டும். நாளுக்கு நாள் கூட்டம் குறித்த மொத்த தகவல்களைக் திமுக தலைமைக்கு அனுப்புவதை மாவட்டக் கழகச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட திமுக கொடிக்கம்பங்களில் புதுக் கொடி ஏற்றுதல், இதுவரை கொடியேற்றப்படாத ஊராட்சிகளில் திமுகவின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிடும் வகையில் இருவண்ணக் கொடி ஏற்றப்படல் வேண்டும்.

ஆடம்பர ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி மரத்தடி, சந்தை, கலையரங்கம், பொதுத்திடல், பள்ளி வளாகம் என அனுமதிக்கப்படும்இடங்களில் இருநூறுக்கும் குறைவில்லாத பொதுமக்கள் - திமுகவினர் பங்கேற்கும் வகையில் ஊராட்சி சபைக் கூட்டங்களை ஊராட்சி செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டங்களை நிறைவு செய்வதில் முழு கவனம் செலுத்தி, அதன்பிறகு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிற ஊராட்சிகளில் கூட்டம் நடத்திடல் வேண்டும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை ஒட்டி, ஜனவரி 13 முதல் 18 வரை கூட்டங்களுக்கு இடைவெளிவிட்டு, 19 ஆம் தேதியிலிருந்து தொடர வேண்டும்.

நமது ஒரே இலக்கு, ஆட்சி மாற்றம், அதுவே மக்களின் விருப்பம். அதற்கேற்ப, ஒவ்வொரு ஊராட்சியாக மக்களிடம் நேரில் செல்வோம். பாசிச பாஜக - மக்கள் விரோத அதிமுக ஆட்சிகளின் அவலங்களை மக்களிடம் சொல்வோம். நம்மைவிட அதிகமான அவலங்களை அறிந்திருக்கும் அவர்கள் சொல்வதையும் கேட்போம். மத்திய - மாநில அரசுகளின் நிர்வாகத் தோல்விகளை மக்கள் முன் பட்டியலிடுவீர். அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அவர்கள் அளித்த ஏமாற்று வாக்குறுதிகளையும் - தொகுதி மேம்பாட்டு நிதியை வீணடித்ததையும் எடுத்துரைப்பீர்.

'உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம்' என்ற உறுதியினை வழங்கி, நம்பிக்கையைப் பலப்படுத்தி மக்களின் மனங்களைவெல்வோம். ஊராட்சிகள் தோறும் மக்களின் மனங்களில் விதைக்கப்படும் விதை,  உள்ளாட்சி - சட்டப்பேரவை - நாடாளுமன்றம் என அனைத்து ஜனநாயகக் கழனிகளிலும் விளையும். உலுத்தர்களின் ஆட்சி விரட்டப்பட்டு நல்லாட்சி மலரும்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.          

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x